Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மொபைல் போனில் குடிநீர் மோட்டார் இயக்கும் திட்டம் பொள்ளாச்சியில் அறிமுகமாகிறது

Print PDF

தினமலர்          24.03.2013

மொபைல் போனில் குடிநீர் மோட்டார் இயக்கும் திட்டம் பொள்ளாச்சியில் அறிமுகமாகிறது


பொள்ளாச்சி:குடிநீர் வினியோகத்துக்கு மோட்டார் பம்ப்புகளை, மொபைல் போனில் இயக்கும் புதிய தொழில் நுட்பத்தை பொள்ளாச்சியில் அறிமுகமாக உள்ளது.

பொள்ளாச்சிக்கு அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பெரும்பாலான நேரங்களில் மின்வெட்டு இருப்பதால், பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதை சமாளிக்க; இருந்த இடத்திலிருந்தே மொபைல் போனில் குடிநீருக்கான மோட்டார் இயக்கும் திட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் செயல்படுத்தப்படஉள்ளது.

நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

மொபைல் போனில் இருந்த இடத்திலிருந்தே குடிநீர்மின் மோட்டாரை இயக்கவும், நிறுத்தவும் முடியும். இதன் மூலம் மின்வெட்டுக்கு பின்பு மின்சாரம் வந்ததும், சம்ப் ஹவுசுக்கு நேரடியாக சென்று மோட்டாரை இயக்கவேண்டிய அவசியமில்லை.

சம்ப் ஹவுசிலுள்ள ஒரு மோட்டாரில் நகராட்சி குடிநீர் பிரிவு அதிகாரிகள், குடிநீர் வினியோகிப்பாளர், நகரபொறியாளரின் மொபைல் போன் எண்கள் பதிவு செய்யப்படும். அதிலிருந்து குறிப்பிட்ட எண்ணை டயல் செய்வதின் மூலம் மின் மோட்டார் இயங்கும்.அதே போல் குறிப்பிட்ட எண்ணை நாம் திரும்ப டயல் செய்தால் மோட்டார் இயக்கம் நிறுத்தப்படும்.

இதன் வாயிலாக இரவு நேரத்திலோ, மின்சாரம் இல்லாத நேரத்திலோ, மோட்டாரை இயக்குவதற்காக காத்திருப்பதை தவிர்க்கலாம். ஆப்பரேட்டருக்காக காத்திருக்காமல், அதிகாரிகளே நேரடியாக மோட்டாரை இயக்கலாம்.

பதிவு செய்யப்படாத மொபைல் எண் தவிர மற்றவர்கள் மோட்டாரை இயக்கினால் அதுபற்றிய தகவல் குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கும். பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 40 இடங்களில் ரூ. 5 லட்சம் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

 

சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனையில் அதிர்ச்சி : ஆட்டிறைச்சியுடன் மாட்டிறைச்சி கலப்படம்

Print PDF
தினமலர்          24.03.2013
 
சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனையில் அதிர்ச்சி : ஆட்டிறைச்சியுடன் மாட்டிறைச்சி கலப்படம்

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் இரண்டு கடைகளில், ஆட்டிறைச்சியோடு, மாட்டிறைச்சி கலந்து விற்பனை செய்யப்பட்டது. மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை செய்து, 80 கிலோ இறைச்சியை பறிமுதல் செய் தனர். அக்கடைக்கு வழங்கப்பட்ட லைசன்ஸை ரத்து செய்யும் நடவடிக்கையில் ஈடுபட் டுள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சி, 37வது வார்டு செட்டிபாளையத்தில் இறைச்சி கடைகள் உள்ளன. அங்குள்ள இரு கடைகளில், ஆட்டிறைச்சியுடன் மாட்டிறைச்சி கலந்து விற்பனை செய்வதாக, நகர்நல அலுவலர் செல்வக்குமாருக்கு தகவல் வந்தது. சுகாதார ஆய்வாளர் முரளி கண்ணன் மற்றும் பணியாளர்கள், செட்டிபாளையத்தில் உள்ள இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அக்கடைகளில் ஆட்டிறைச்சியுடன் மாட்டிறைச்சியை கலந்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடைகளில் இருந்த 80 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. கடைகளில், இறைச்சி வாங்க நின்று கொண்டிருந்த பொதுமக்கள், அதை பார்த்து, கடை உரிமையாளர்களை திட்டித்தீர்த்தனர்.

மாநகராட்சி நகர்நல அலுவலர் செல்வக்குமார் கூறியதாவது:

செட்டிபாளையத்தில், ஆட்டிறைச்சியுடன் மாட்டு இறைச்சி கலந்து விற்பனை செய்வதாக புகார் வந்தது. திடீர் சோதனை செய்தபோது, வேல்முருகன், ராஜா முகமது ஆகிய இருவர் கடைகளில், வெளியே ஆட்டு இறைச்சியும், உள்ளே சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கப்பட்டிருந்த மாட்டு இறைச்சிகளும் இருந்தன. இறைச்சி கேட்கும் மக்களுக்கு இரண்டையும் கலந்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வேல்முருகன் லைசென்ஸ் பெற்றும், ராஜா முகமது லைசென்ஸ் பெறாமலும் கடை நடத்தியதும் தெரியவந்தது. உணவு கலப்பட தடுப்பு பிரிவில், லைசென்ஸை ரத்து செய்யப்படும்; இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இரு கடைகளிலும் விற்பனைக்கு வைத்திருந்த 80 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து, பெனாயில் ஊற்றி, பாறைக்குழியில் புதைக்கப்பட்டது.

ஆட்டிறைச்சியுடன், மாட்டு இறைச்சியை கலந்து விற்பனை செய்வதாக, மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. பொதுமக்கள், கடைகளில் இறைச்சி வாங்கும்போது, கவனமாக இருக்க வேண்டும். இறைச்சியில் கலப்படம் செய்வதாக சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக, மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இச்சோதனை நகர் முழுவதும் உள்ள இறைச்சி கடைகளில் தொடர்ந்து செய்யப்படும், என்றார்.
 

மாநகராட்சி புதிய கட்டிடத்தில் நவீன அறைகள் பொதுப்பிரிவு அலுவலகம் விரைவில் மாற்றம்

Print PDF

தினமலர்            22.03.2013

மாநகராட்சி புதிய கட்டிடத்தில் நவீன அறைகள் பொதுப்பிரிவு அலுவலகம் விரைவில் மாற்றம் 

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி புதிய கட்டிடத்தில், பொதுப்பிரிவு அலுவலர்களுக்கான நவீன இருக்கைகள், அறைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

ஈரோடு நகராட்சி கடந்த, 2008ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. புதிய கட்டிடம் கட்ட, சிறப்பு நிதியாக ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பணிகள் துவங்கப்பட்டது.

கூட்ட அரங்கு, மேயர், துணைமேயர், கமிஷனர் அறைகள், அலுவலர் ஆலோசனை அரங்கு, ஆண், பெண் கவுன்சிலர்களுக்கு குளிரூட்டப்பட்ட தனி அறைகள், கீழ்த்தளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க மேலும், 1.48 கோடி செலவிடப்பட்டது.

பணிகள் முடிந்து கடந்த ஜனவரி மாதம், தமிழக முதல்வர் ஜெயலலிதா வீடியோகான்ஃபரன் மூலம் சென்னையில் இருந்து திறந்து வைத்தார். ஆனால், பழைய கட்டிடத்தில், பொதுப்பிரிவு அலுவலகம் தொடர்பான செயல்பாடுகள் இருப்பதால், அலுவல் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

மேயர், துணைமேயர், கமிஷனர், உயர்அதிகாரிகளின் அறைகள் புதிய கட்டிடத்தில் செயல்பட்டு, மற்ற அலுவலர்களின் இடங்கள் பழைய கட்டிடத்தில் செயல்படுவதை மாற்றியமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடத்திலேயே, பொதுப்பிரிவு அலுவலர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு நவீன இருக்கைகள், அறைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. நவீன முறையில் அமைக்கப்படும் அலுவலக செயல்பாடுகள் ஒரு மாதத்துக்குள் முடிவடைந்து, நடைமுறைக்கு வரும், என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 272 of 506