Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

வாடகை செலுத்தாத கடைகளுக்கு பூட்டு : ஓசூர் நகராட்சி அதிரடி நடவடிக்கை

Print PDF

தினமலர்            22.03.2013

வாடகை செலுத்தாத கடைகளுக்கு பூட்டு : ஓசூர் நகராட்சி அதிரடி நடவடிக்கை

ஓசூர்: ஓசூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில், வாடகை செலுத்தாமல் அடம் பிடித்த வியாபாரிகளின் கடைகளுக்கு, நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக பூட்டு போட்டு, "சீல்' வைத்தனர். இதனால், நேற்று ஒரே நாளில், ஐந்து லட்சம் ரூபாய் வாடகை வசூலானது.

ஓசூர் நகராட்சி புது பஸ்ஸ்டாண்ட், பழைய பெங்களூரு சாலை வணிக வளாகம், ராயக்கோட்டை சாலை எம்.ஜி.ஆர்., மார்க்கெட் மற்றும் காந்தி சிலை அருகே நகராட்சிக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையில் கடைகள் கட்டி வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

பஸ்ஸ்டாண்ட்டில், 55 கடைகள், இரு ஹோட்டல்கள், பழைய பெங்களூரு சாலை வணிக வளாகத்தில், 46 கடைகள், எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டில், 15 கடைகள், ஒரு ஆடு அடிக்கும் தொட்டி ஆகியவை மூலம் மட்டும் நகராட்சிக்கு ஆண்டுதோறும் நிரந்தரமாக ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

இதர வருவாய் இனங்கள் உள்ளிட்ட வகையில் நகராட்சிக்கு ஆண்டுதோறும், 33 கோடியே, 45 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. குறிப்பாக பஸ்ஸ்டாண்ட் கடைகள் மூலம் மட்டும், 58 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

கடந்த ஓராண்டாக பஸ்டாண்ட், பழைய பெங்களூரு சாலை வணிக வளாக கடைகளில் வியாபாரிகள் முறையாக மாத வாடகையை செலுத்தாமல் இழுத்தடித்து வந்தனர். நகராட்சி கமிஷனர் இளங்கோவன், பலமுறை எச்சரித்து நோட்டீஸ் வழங்கியும் வியாபாரிகள் தொடர்ந்து வாடகையை செலுத்தாமல் ஏமாற்றி வந்தனர்.

இதையடுத்து, கமிஷனர் இளங்கோவன் உத்தரவின்படி, நேற்று நகராட்சி மேலாளர் (பொ) திருமால்செல்வம், அலுவலர் முரளிகிருஷ்ணன், உதவியாளர் சரவணன், வருவாய் ஆய்வாளர் நாகரத்தினம், ரகுமான் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அதிரடியாக பஸ்ஸ்டாண்ட், பழைய பெங்களூரு சாலை வணிக வளாகங்களில் அதிரடி ஆய்வு நடத்தினர்.

அப்போது, வாடகை செலுத்தாத கடைகளை பட்டியலிட்டு, அவற்றிற்கு நகராட்சி ஊழியர்கள் "சீல்' வைத்து பூட்டு போட்டனர். புது பஸ் ஸ்டாண்ட்டில், ஒரு உணவு விடுதி உள்ளிட்ட எட்டு கடைகளுக்கும், பழைய பெங்களூரு சாலை வணிக வளாகத்தில் கடைகளும் பூட்டப்பட்டன.

பல கடைகளுக்கு நகராட்சி ஊழியர்கள் பூட்டு போட்டதும், அதிர்ச்சியடைந்த வியாபாரிகள், உடனடியாக நிலுவையில் இருந்த வாடகை பணத்தை நகராட்சி அலுவலகத்தில் கட்டினர்.

வாடகை கட்டிய கடைகள் பூட்டை நகராட்சி அதிகாரிகள் திறந்தனர். அதிகாரிகள் இந்த "பூட்டு' நடவடிக்கையால், நேற்று ஒரே நாளில், பஸ் ஸ்டாண்ட் மற்றும் வணிக வாளகத்தில், ஐந்து லட்சம் ரூபாய் கடை வாடகை வசூலானது. மதியம் முதல் எம்.ஜி.ஆர்., மார்க்கெட் உள்ளிட்ட மற்ற வருவாய் இன கடைகளுக்கு சென்று நகராட்சி அதிகாரிகள் பூட்டு போட்டனர்.

நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "கடை வாடகை நிலுவையில் உள்ள வியாபாரிகளின் கடையை பூட்டி கமிஷனர் வழங்கிய நோட்டீஸை வினியோகம் செய்து வருகிறோம். அதன் பின்பும், வாடகை செலுத்தாத வியாபாரிகளிடம் நீதிமன்றம் மூலம் பணம் வசூலிக்கவும், கடையை பறிமுதல் செய்து பிற்காலத்தில் கடை, டெண்டர்கள் எடுக்க தடை விதிக்கவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.

 

150 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினமணி      21.03.2013

150 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

சிதம்பரம் நகரில் குடிநீர் வரி கட்டாததால் 150 வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்பை புதன்கிழமை நகராட்சிப் பணியாளர்கள் துண்டித்தனர்.

நகராட்சிப் பகுதியில் 50 சதவீதத்துக்கும் மேலானவர்கள் குடிநீர் கட்டவில்லை. இதனால் நகராட்சி மின்காப்பாளர் ஷேக்மொய்தீன் தலைமையில் நகராட்சிப் பணியாளர்கள் சிதம்பரம் மெய்காவல்தெரு, கொற்றவன்குடித்தெரு ஆகிய தெருக்களில் குடிநீர் வரி செலுத்தாத 150 வீடுகளின் குடிநீர் இணைப்பை புதன்கிழமை துண்டித்தனர்.

மேலும் நகராட்சியில் சொத்து வரி கட்டாதவர்கள் வீடுகள் மற்றும் கடைகள் ஜப்தி செய்யப்படும்.

குடிநீர் வரி கட்டாதவர்களின் இணைப்பு துண்டிக்கப்படும் என ஆணையர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Last Updated on Thursday, 21 March 2013 07:32
 

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி குறித்த ஆலோசனை கூட்டம்

Print PDF

தினத்தந்தி                20.03.2013

சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி குறித்த ஆலோசனை கூட்டம் 

சேலம் மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் நேற்று சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரக இணை இயக்குநர் செபாஸ்டின் தலைமையில் மாநகராட்சி வருவாய் இனங்களான சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி மற்றும் வரியில்லா இனங்கள் வசூல் பணிகள் குறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொண்டார்.

இதில், சொத்து வரி, குடி நீர் கட்டணம், தொழில் வரி மற்றும் வரியில்லா இனங்களின் மீது ரூ.100 வசூல் இலக்கினை அடைந்திடவும், பொது மக்களுக்கு தேவையான சாலை வசதி, சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்திட மாநகராட்சியில் நிலுவையாக உள்ள சொத்துவரிகள் மற்றும் குடிநீர் கட்டணங்களை பொதுமக்கள் நிலுவை இல்லாமல் உடன் செலுத்திடவும், மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் தீவிர வரி வசூலில் ஈடுபட்டு வசூல் பணியில் ஈடுபட அறிவுரை வழங்கினார்.

கூட்டத்தில், சேலம் மாநகராட்சி ஆணையாளர் அசோகன், உதவி ஆணையாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Last Updated on Friday, 22 March 2013 11:32
 


Page 273 of 506