Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சேலத்தில் பாதாள சாக்கடை கட்டுமான நிறுவனத்துக்கு எச்சரிக்கை

Print PDF
தினமலர்          04.03.2013

சேலத்தில் பாதாள சாக்கடை கட்டுமான நிறுவனத்துக்கு எச்சரிக்கை


சேலம்: சேலம் மாநகராட்சியில், திருமணி முத்தாறு கட்டுமான நிறுவனத்தை தொடர்ந்து, பாதாளசாக்கடை திட்டத்தை செயல்படுத்தி வரும், கட்டுமான நிறுவனத்துக்கும், "இறுதி அறிவிப்பு' நோட்டீஸ் வழங்கி, மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.சேலம் மாநகராட்சியில், திருமணி முத்தாறு, இரண்டாம் கட்ட அபிவிருத்தி திட்டத்தில், 31 கோடியே, 50 லட்சம் ரூபாய் மதிப்பில், வெள்ளக்குட்டை ஓடை அபிவிருத்தி மற்றும் மூன்று இடங்களில் பாலம் கட்டும் பணி ஆகியவை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.கடந்த, 2007 செப்டம்பர், 22ம் தேதி பாலாஜி இன்டஸ்ட்ரயில் அண்டு அக்ரிகல்சுரல் காஸ்டிங்ஸ் என்ற நிறுவனத்திடம், பணி ஒப்படைக்கப்பட்டது. பகுதி ஒன்று, ஏழு, எட்டு, ஒன்பது ஆகிய பணிகள் மட்டும் முடிக்கப்பட்டது. இதிலும், அணுகு சாலை தொடர்பான விவகாரங்கள் முழுமை பெறவில்லை.கடந்த ஐந்து ஆண்டாக, ஆமை வேகத்தில், பணி நடந்து வருகிறது. பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த மாதம் மாநகராட்சி அதிகாரிகள், தனியார் நிறுவனத்துக்கு, எச்சரிக்கை விடும் விதமாக, "இறுதி அறிவிப்பு' நோட்டீஸ் வழங்கினர்.

திருமணி முத்தாற்றை தொடர்ந்து, தற்போது, பாதாளசாக்கடை திட்டப்பணிகளை மேற்கொள்ளும், நிறுவனத்துக்கும் எச்சரிக்கை விடுத்து, இறுதி அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.சேலம் மாநகராட்சியில், 149 கோடியே, 39 லட்சம் ரூபாய் மதிப்பில், 2006ம் ஆண்டு பாதாளசாக்கடை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. 2007ம் ஆண்டு பாதாளசாக்கடை குழாய்கள் பதிக்கும் பணிக்கு, நகராட்சி நிர்வாக ஆணைய தலைமை பொறியாளரால், தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டது.திட்டத்தை செயல்படுத்த நான்கு முறை டெண்டர் விடப்பட்டும், கட்டுமான நிறுவனங்கள் புறக்கணித்தது. 2009ல் பகுதி 1 மற்றும் பகுதி 3 ஆகியவற்றில், குழாய் பதிக்கும் பணிக்கான ஒப்பந்தம், ஹைதராபாத்தை சேர்ந்த பிஎஸ்விசிபிஎல்-பிபிஐபிஎல் என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.பகுதி 2 ல் குழாய் பதிக்கும் பணிக்கு, ஹைதராபாத்தை சேர்ந்த ஆர்ஏயுஎஸ் என்ற கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.பகுதி 1 ல் மொத்தம், 86.138 கி.மீ., நீளம் அமைக்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை, 21.69 கி.மீ., நீளம் மட்டுமே குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. பகுதி 2 ல், 150.65 கி.மீ., நீளம் குழாய் பதிக்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை, 8 கி.மீ., நீளம் வரை மட்டுமே பதிக்கப்பட்டுள்ளது.பகுதி 3 ல், 184.82 கி.மீ., குழாய் பதிக்கப்பட வேண்டும். ஆனால், 19.96 கி.மீ., நீளம் மட்டுமே குழாய் பதிக்கப்பட்டுள்ளது.பகுதி 1, பகுதி 3 ஆகியவற்றின் கீழ், மாநகராட்சியில், பாதாளசாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட இடங்களில், சரியாக பைப் பதித்து, மாத கணக்கில் மூடப்படாததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஒவ்வொரு முறையும், மன்ற கூட்டங்களில், கவுன்சிலர்கள் பாதாளசாக்கடை திட்டம் குறித்து தங்கள் அதிருப்தியை பதிவு செய்து வருகின்றனர்.மாநகராட்சி சார்பில், பல முறை எடுத்து கூறியும் நடவடிக்கையை துரிதப்படுத்தாததால், பகுதி 1, பகுதி 3 ஆகிய பணிகளை எடுத்த, பிஎஸ்விசிபிஎல்-பிபிஐபிஎல் என்ற நிறுவனத்துக்கு, எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், வங்கியில், அவர்கள் டெபாஸிட் செய்த, ஒரு கோடி ரூபாய் பணத்தை, பணிகளை துரிதமாக செயல்படுத்தப்படாவிட்டால், பறிமுதல் செய்யப்படும், என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இதுகுறித்த மாநகராட்சி கமிஷனர் அசோகன் கூறியதாவது:பாதாளசாக்கடை திட்டத்தின் கீழ், பகுதி 1, பகுதி 3 ஆகிய பணிகள் மிகவும் மெதுவமாக நடந்து வருவதால், கட்டுமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் டெபாஸிட் செய்த பணத்தை பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக ரத்து செய்தால், மீண்டும் டெண்டர் வைத்து, பணிகளை துவங்குவதற்கு, மாத கணக்கு ஆகும். விரைந்து பணியை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.காலதாமதம் தொடரும் பட்சத்தில், நிறுவனத்தின் டெபாஸிட் தொகை பறிமுதல் செய்யப்படுவதோடு, பிளாக் லிஸ்ட்டிலும், அதன் பெயர் இடம் பெற்றுவிடும். இதனால், பிற இடங்களில் கட்டுமான பணிகளை தொடர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated on Monday, 04 March 2013 11:23
 

குடிநீர் கட்டணம் செலுத்தாத இணைப்புகள் துண்டிப்பு

Print PDF

தினமணி      02.03.2013

குடிநீர் கட்டணம் செலுத்தாத இணைப்புகள் துண்டிப்பு

குடிநீர் கட்டணம் செலுத்தாத இணைப்புகளைத் துண்டித்திட, பொள்ளாச்சி நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

   நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் வி.கிருஷ்ணகுமார் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் 13 ஆயிரத்து 400 குடிநீர் இணைப்புகள் உள்ளன. இதில் நீண்ட நாள்களாக குடிநீர் கட்டணம் செலுத்தாமல் உள்ள இணைப்புகள் குறித்து நகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

   இதில் குடிநீர் இணைப்பு உள்ள எண்களில் இணைப்புதாரரின் பெயர் மற்றும் முழுமையான முகவரி மற்றும் குடியிருப்புகள் இல்லாதது தெரியவந்தது. நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் கட்டணம் ரூ. 3 லட்சத்து 20 ஆயிரம் நிலுவையில் உள்ளது.

   இந்தத் தொகை நகராட்சி வசூலிக்க முடியாதவை என்பதால், தொகையை தள்ளுபடி செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்தக் குடிநீர் இணைப்புகள் அனைத்தையும் உடனடியாக துண்டித்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  2012-13 ஆம் ஆண்டுக்கான திருத்திய வரவு, செலவு அறிக்கை மற்றும் 2013-14 ஆம் ஆண்டுக்கான பயன்பாட்டு வரவு, செலவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்தத் தீர்மானங்கள் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன.

 

பேரூராட்சிகளில் துப்புரவாளர் பணி காலியிடங்களுக்குப் பரிந்துரை

Print PDF
தினமணி           01.03.2013

பேரூராட்சிகளில் துப்புரவாளர் பணி காலியிடங்களுக்குப் பரிந்துரை


சிவகங்கை மாவட்டத்தில் 8 பேரூராட்சிகளில் துப்புரவாளர் பணி காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்பட உள்ளது.

இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கி.தொண்டீஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இளையான்குடி பேரூராட்சியில் ஆதிதிராவிடர் (பொது) முன்னுரிமையற்றவர் 1, பிற்ப டுத்தப்பட்டவர் (பொது) முன்னுரிமையுள்ளவர் 1, திருப்பத்தூர் பேரூராட்சியில் எம்.பி.சி (பொது) முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்றவர் தலா 1, பகிரங்கப் போட்டியாளர் (பொது) முன்னுரிமையற்றவர் 2, கண்டனூர் பேரூராட்சியில் பி.சி (பொது) முன்னுரி மையற்றவர் 1, நெற்குப்பை பேரூராட்சியில் எம்.பி.சி முன்னுரிமையுள்ளவர் 1, பகிரங்கப் போட்டியாளர் (பொது) முன்னுரிமையுள்ளவர் 1, பள்ளத்தூர் பேரூராட்சியில் ஆதிதிராவிடர் அருந்ததியினர் (பொது) முன்னுரிமையுள்ளவர் 1, திருப்புவனம் பேரூராட்சியில் ஆதி திராவிடர் அருந்ததியினர் (பொது) முன்னுரிமையுள்ளவர் 1, சிங்கம்புணரி பேரூராட்சியில் பகிரங்கப் போட்டியாளர் (பொது) முன்னுரிமையற்றவர் 1, புதுவயல் பகிரங்கப் போட்டியாளர் (பொது) முன்னுரிமையுள்ளவர் 1 என துப்புரவாளர் பணிக்கு பரிந்துரை செய்யப்பட உள்ளது.

இப்பணியிடங்களுக்கு அந்தந்தப் பேரூராட்சிக்குள்பட்ட முகவரியில் பதிவு செய்து வசித்து வரும் துப்புரவாளர் பணிக்குப் பதிவு செய்த பதிவுதாரர்கள் தங்களுடைய அசல் கல்விச்சான்று, குடும்ப அடையாள அட்டை மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் 1.3.2013 அன்று நேரில் வந்து பரிந்துரை விவரத்தை தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated on Friday, 01 March 2013 09:38
 


Page 281 of 506