Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: வாங்கினால் இனி "அபராதம்'

Print PDF

தினமலர்          05.09.2012

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்: வாங்கினால் இனி "அபராதம்'

மதுரை:மதுரையில் விற்பனை செய்த பிளாஸ்டிக் பொருட்களை, மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர்.மாநகராட்சியில், 40 மைக்ரானுக்கு கீழுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. "மீறுவோர் மீது, அபராதம் விதிக்கப்படும்,' என, அதிகாரிகள் எச்சரித்தனர். அதை மீறி, பிளாஸ்டிக் பயன்படுத்தி வருகின்றனர். நகர்நல அலுவலர் பிரியா தலைமையில் அதிகாரிகள், தெற்குமாசி வீதியில் "ரெய்டு' நடத்திய போது, 30 கடைகளில், தடை செய்யப்பட்ட "பிளாஸ்டிக்' பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வது மட்டுமின்றி, இனி பயன்படுத்துவோர் மீதும் அபராதம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரியா கூறியதாவது:
 
பிளாஸ்டிக் விற்பது மட்டுமின்றி, பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீதியில் வருவோரும், கண்காணிக்கப்படுவர். ரூ.100அபராதம் விதிக்கப்படும், என்றார்.
 

ஆழ்துளை கிணறு அமைச்சர் ஆய்வு

Print PDF

தினமலர்          05.09.2012

ஆழ்துளை கிணறு அமைச்சர் ஆய்வு

பள்ளிபாளையம்: படைவீடு டவுன் பஞ்சாயத்தில் மேற்கொள்ளப்படும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை, தொழில் துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

படைவீடு டவுன் பஞ்சாயத்தில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆறு இடங்களில், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த பணியை, அமைச்சர் தங்கமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை துரிதமாக முடிக்கும்படி, பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது. டவுன் பஞ்சாயத்து சேர்மன் ஜெகநாதன், செயல் அலுவலர் சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
 

பூ மார்க்கெட் இடம் மாற்றம் செய்ய 10 நாள் "கெடு'

Print PDF

தினமலர்        04.09.2012

பூ மார்க்கெட் இடம் மாற்றம் செய்ய 10 நாள் "கெடு'


கோவை:கோவை பூ மார்க்கெட் கடைகளை மாநகராட்சி வணிக வளாகத்திற்கு மாற்றம் செய்வதற்கு 10 நாள் கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் முழுவீச்சியில் களம் இறங்கியுள்ளது. பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட வணிக வளாகத்திற்கு இனியாவது விடிவு காலம் பிறக்கட்டும் என அதிகாரிகள் கூறுகின்றனர். கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் செயல்படும் பூ மார்க் கெட்டில் நூற்றுக்கணக்கான கடைகள் செயல்பட்டு வருகிறது.


இக்கடைகளை ஒழுங்கும் படுத்தும் வகையில் வியாபாரிகள் கேட்டுக் கொண்டதின் பேரில், பூ மார்க்கெட் அருகிலேயே பல லட்சம் ரூபாய் செலவில் நவீன வணிக வளாகம் கட்டியது மாநகராட்சி.ஆனால், இந்த வணிக வளாகத்திற்கு பூ வியாபாரிகள் வர மறுத்ததால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடு இல்லாமல் வணிக வளாகம் உள்ளது. இந்நிலையில், தற்போதுள்ள பூ மார்க்கெட்டால் இப்பகுதியில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், விசேஷ நாட்களில் பூக்கள் வாங்குவதற்கு அதிகளவில் பொதுமக்கள் திரளுவதால் நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து, சில தினங்களுக்கு முன் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற "பார்க்கிங்' ஆய்வுக் கூட்டத்தில், பூ மார்க்கெட் பிரச்னை விவாதிக்கப்பட்டது. எனவே, பத்து நாட்களுக்குள் புதிய வணிக வளாகத்துக்கு அனைத்து வியாபாரிகளையும் இடமாற்றம் செய்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.


மாநகராட்சி கமிஷனர் பொன்னுசாமி கூறியதாவது:

பூ மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் வாகனங்களால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. வடகோவை மார்க்கத்தில் இருந்தும், கோவை மார்க்கத்தில் இருந்தும் சீரான வேகத்தில் செல்லும் வாகனங்கள், பூ மார்க்கெட் அருகில் ஏற்படும் வாகன நெருக்கடியால் திணற வேண்டியதுள்ளது. இதனால் அடுத்தடுத்த போக்குவரத்து சிக்னல்களில் வாகன போக்குவரத்தை சீரமைப்பதில் பிரச்னை ஏற்படுகிறது.பார்க்கிங் வசதியுடன் உள்ள மாநகராட்சி புதிய வணிக வளாகம் முழுமையாக பயன்படுத்தாத நிலையில், சிலர் பூக்களை சேமித்து வைக்கும் குடோன் ஆகவும், பூ கட்டுவதற்கு ஏற்ற நிழல் தரும் பகுதியாகவும் மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட வணிக வளாகத்தின் நோக்கம் நிறைவு பெறாமலே உள்ளது.


போலீசாரின் உதவியுடன் இன்னும் பத்து நாட்களுக்குள் தற்போதைய பூ மார்க்கெட்டை, மாநகராட்சியின் புதிய வணிக வளாகத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கமிஷனர் பொன்னுசாமி கூறினார்.பூ வியாபாரிகள் சிலர் கூறுகையில், ""புதிதாக வணிக வளாகம் கட்டுவதற்கு முன், தற்போதைய வியாபாரிகளின் எண்ணிக்கையை சேகரித்து, அதன் அடிப்படையில் கடைகளை கட்டியிருக்க வேண்டும். எங்களிடம் இது குறித்து ஆலோசிக்கவே இல்லை. ""புதிய வணிக வளாகத்தில் கடைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், அனைவராலும் வணிக வளாகத்துக்கு மாற முடியாது. அனைத்து வியாபாரிகளும் பாதிக்காதவாறு, மாற்றுக் கடைகள் கட்டித்தர மாநகராட்சி முன்வர வேண்டும்,'' என்றனர்.

 


Page 286 of 506