Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மெல்லிய பிளாஸ்டிக் விற்றால் நடவடிக்கை பாயும் :வியாபாரிகளுக்கு மாநகராட்சி எச்சரிக்கை

Print PDF
தினமலர்                30.07.2012

மெல்லிய பிளாஸ்டிக் விற்றால் நடவடிக்கை பாயும் :வியாபாரிகளுக்கு மாநகராட்சி எச்சரிக்கை


சென்னை : "சென்னையில், மெல்லிய பிளாஸ்டிக் விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது. மீறுவோர் மீது சட்டப்படி ஐந்தாண்டு சிறை, ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கவும் வாய்ப்புள்ளது என, மாநகராட்சி தெரிவித்துள்ளது. பறிமுதல் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, 40 மைக்ரானுக்கு குறைந்த தடிமன் உள்ள, மெல்லிய பிளாஸ்டிக்குகளை கட்டுப்படுத்தும் வகையில், அதிரடி சோதனையை மாநகராட்சி நடத்தி, டன் கணக்கிலான மெல்லிய பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தது. கொடுங்கையூர் பகுதியில், மெல்லிய பிளாஸ்டிக் தயாரித்த நிறுவனம் இழுத்து மூடப்பட்டது. வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் சங்கத்தினரையும் அழைத்து, மாநகராட்சி, விதிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தது. இந்நிலையில், கொத்தவால்சாவடி பகுதி கிடங்கு ஒன்றில், மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் சோதனை நடத்தி, 21.3 லட்ச ரூபாய் மதிப்பிலான, 18 டன் மெல்லிய பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.
 
 மாநகராட்சி சுகாதார அதிகாரி ஒருவர் கூறியதாவது: மெல்லிய பிளாஸ்டிக் உற்பத்தி செய்தாலோ, பயன்படுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வெளிமாநிலத்திலிருந்து இறக்குமதி செய்தாலும் விடமாட்டோம். சிறு வியாபாரிகள் மட்டுமின்றி, பிளாஸ்டிக் மொத்த வியாபாரிகளும் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். மீறி செயல்படுவோர் மீது, வழக்குப்போட்டு ஐந்தாண்டு சிறைத் தண்டனை, ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்க வகை உள்ளது. அதையும் செய்ய மாநகராட்சி தயங்காது. இவ்வாறு அவர் கூறினார். அறிவுறுத்தல் சென்னை பிளாஸ்டிக் உற்பத்தியாளர், வியாபாரிகள் சங்கத் தலைவர் சங்கரன் கூறும்போது, "கடைகளில் மட்டும் சோதனை செய்யாமல், வெளிமாநிலத்திலிருந்து கொண்டு வரும் பிளாஸ்டிக்குகளையும் பறிமுதல் செய்வது வரவேற்கத்தக்கது. சென்னை பாரிமுனை, அதைச் சுற்றிய பகுதிகளில், ஏராளமான கிடங்குகள் உள்ளன. அவற்றை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும். வியாபாரிகளிடமும் மெல்லிய பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என, அறிவுறுத்தியுள்ளோம்' என்றார்.

 

ஐ.டி., தொழிலுக்கான சிறப்பு கட்டடங்கள்: சி.எம்.டி.ஏ., புதிய உத்தரவு

Print PDF

தினமலர்                    28.07.2012

ஐ.டி., தொழிலுக்கான சிறப்பு கட்டடங்கள்: சி.எம்.டி.ஏ., புதிய உத்தரவு

சென்னை:தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கான சிறப்பு கட்டடங்களுக்கு திட்ட அனுமதி வழங்கும் நடைமுறைகளில் சில மாற்றங்கள் செய்து, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் உத்தரவிட்டார்.சலுகை: தமிழகத்தில், தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், இதற்காக கட்டப்படும் கட்டடங்களுக்கு, பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னை பெருநகர் பகுதியில், இத்தகைய கட்டடங்கள் கட்டும் திட்டங்கள் தொடர்பான அனைத்து விண்ணப்பங்களும், சி.எம்.டி.ஏ.,வின், பலமாடி கட்டடங்களுக்கான பிரிவு மூலம் ஆய்வு செய்யப்பட்டு, அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றன.தளபரப்பு குறியீட்டில், 50 சதவீதம் கூடுதலாக பயன்படுத்தும் வசதி, திறந்தவெளி நிலங்களை, அந்தந்த நிறுவனங்களே பயன்படுத்திக் கொள்ள அனுமதி என, பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
காலியான கட்டடம்:இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கட்டப்பட்ட ஏராளமான தகவல் தொழில்நுட்ப கட்டடங்கள், பயன்படுத்தப் படாமல் காலியாக கிடக்கின்றன.

அரசின் சலுகைகள் பெற்று கட்டப் பட்டுள்ள இத்தகைய கட்டடங்களை, வேறு வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்த முடியாத நிலையும் உள்ளது.கடந்த சில ஆண்டுகளாக, தகவல் தொழில்நுட்ப கட்டடங்களுக்கான திட்ட அனுமதி கோரி வரும் விண்ணப்பங்கள் எண்ணிக்கை, கணிசமாக குறைந்துள்ளது. இதனால், இத்தகைய திட்டங்களுக்கு, திட்ட அனுமதி கொடுப்பதற்கான முக்கியத்துவமும் குறைந்து வருகிறது.

நடைமுறை மாற்றம்: இதுகுறித்து, சமீபத்தில் நடந்த சி.எம்.டி.ஏ., உயரதிகாரிகள் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் வெங்கடேசன் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்:தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டுக்காக கட்டப்படும் அனைத்து கட்டடங்களுக்கான விண்ணப்பங்கள் இதுவரை, பலமாடி கட்டடங்கள் பிரிவால் ஆய்வு செய்யப்பட்டு, திட்ட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.இதில், தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டுக்காக கட்டப்படும், குறைந்த மாடிகள் கொண்ட சிறப்பு கட்டடங்களுக்கான விண்ணப்பங்கள் இனி, தொழிற்சாலை மற்றும் நிறுவன கட்டடங்களுக்கான பிரிவு மூலம் ஆய்வு செய்யப்பட்டு, திட்ட அனுமதி  வழங்கும் பணிகள் மேற்கொள்ளப் படும்.இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

 

பள்ளி அருகே சிகரெட்: கடைகளுக்கு அபராதம்

Print PDF

தினமலர்                    28.07.2012

பள்ளி அருகே சிகரெட்: கடைகளுக்கு அபராதம்

வத்தலக்குண்டு:சுகாதாரபணிகள் துணை இயக்குநர் சுப்பிரமணி உத்தரவுப்படி வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி பேரூராட்சிகளில் ஆய்வு நடந்தது. பள்ளி அருகே உள்ள கடைகளில் சிகரெட் விற்ற கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. விதிமுறைகளை மீறி சிகரெட் விளம்பரங்கள் வைத்திருந்த கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. துணை இயக்குநர் நேர்முக உதவியாளர் அப்துல்பாரி, வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் ஆய்வு செய்தனர்.சுகாதார மேற்பார்வையாளர் சேகர், ஆய்வாளர்கள் செல்வகுமார்,மணிகண்டன், ஜான்பீட்டர் உடனிருந்தனர்.

 


Page 292 of 506