Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நெல்லையில் அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடி கட்டடத்திற்கு அதிகாரிகள் சீல்: நெல்லை மாநகராட்சி அதிரடி

Print PDF

தினமலர்      20.12.2011

நெல்லையில் அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடி கட்டடத்திற்கு அதிகாரிகள் சீல்: நெல்லை மாநகராட்சி அதிரடி  

திருநெல்வேலி : நெல்லை வண்ணார்பேட்டையில் அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடி கட்டடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சென்னையை தொடர்ந்து நெல்லையிலும் அனுமதி பெறாத கட்டடங்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் நடந்துவருகின்றன. நெல்லை மாநகராட்சியில் கமிஷனர் அஜய் யாதவ் உத்தரவின் பேரில் நகரப் பொறியாளர் ஜெய்சேவியர், செயற்பொறியாளர் நாராயணன் நாயர் மேற்பார்வையில் தச்சநல்லூர் உதவிக் கமிஷனர் சாமுவேல் செல்வராஜ், இளநிலைப் பொறியாளர் கருப்பசாமி, சுகாதார ஆய்வாளர் கல்யாணசுந்தரம் மற்றும் அதிகாரிகள் நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் ரோட்டில் அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடி கட்டடத்திற்கு சென்று சீல் வைத்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், "நெல்லையில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்து கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. 2 மாடிக்கு அனுமதி வாங்கிவிட்டு 4 மாடிகள் கட்டியுள்ளனர். இதனால் கட்டடம் சீல் வைக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டங்களுக்கு சீல் வைப்பு பணி தொடரும் என்றனர்'.

 

மேட்டுப்பாளையம் நகராட்சி: குழு உறுப்பினர்கள் தேர்வு

Print PDF

தினமணி         30.11.2011

மேட்டுப்பாளையம் நகராட்சி: குழு உறுப்பினர்கள் தேர்வு

மேட்டுப்பாளையம், நவ. 29:  மேட்டுப்பாளையம் நகரமன்றத்தின் சட்டமுறை குழுக்களான வரிவிதிப்புக் குழு, நியமனக் குழு, ஒப்பந்தக் குழு மற்றும் மேல்முறையீட்டுக் குழு ஆகிய குழுக்களுக்கு தேர்தல், வெள்ளிக்கிழமை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.


தேர்தல் அலுவலரும், நகராட்சி ஆணையாளருமான ஜி.இளங்கோவன் தலைமையில், நகரமன்றத் தலைவர் சதீஷ்குமார் முன்னிலையில் இந்தத் தேர்தல் நடைபெற்றது.

இதில், வரிவிதிப்பு மேல்முறையீட்டுக் குழு உறுப்பினர்களாக அதிமுக கவுன்சிலர்கள் கே.தனபாக்கியம் (16வது வார்டு), எஸ் மோகன்குமார் (18வது வார்டு), சுயேச்சை கவுன்சிலர் கா.அ.மணி (19வது வார்டு), காங்கிரஸ் கவுன்சிலர் ஜெ.உமா (30வது வார்டு) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

நியமனக் குழு உறுப்பினராக பாஜக கவுன்சிலர் ஆர்.ஜெகநாதன் (13வது வார்டு), ஒப்பந்தக் குழு உறுப்பினராக அதிமுக கவுன்சிலர் ஜி.சூரியபிரகாஷ் (8வது வார்டு) ஆகியோரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். 
 

தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளில் பணியிடங்கள் காலி : நிர்வாக பணிகளில் தொய்வு

Print PDF

தினமலர்       18.11.2011

 தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளில் பணியிடங்கள் காலி : நிர்வாக பணிகளில் தொய்வு

தமிழகம் முழுவதும், தரம் உயர்த்தப்பட்ட, 36 நகராட்சிகளில், காலியாக உள்ள பணியிடங்கள், இன்னும் நிரப்பப்படவில்லை. இதனால், பெரும்பாலான நகராட்சிகளில் சுகாதாரம், கட்டட அனுமதி மற்றும் நிர்வாக பணிகளில், கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2010, ஆகஸ்டில், தி.மு.க., அரசால், 36 நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டன. ஓராண்டுக்கு மேலாகியும், மக்கள் தொகை அதிகமுள்ள முக்கியமான பல நகராட்சிகளில் கமிஷனர், பொறியாளர், மேலாளர், சுகாதார அதிகாரிகள், நகரமைப்பு அதிகாரிகள், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பதவிகள், காலியாக உள்ளன. இவற்றை, அருகிலுள்ள நகராட்சிகளில் பணிபுரிபவர்கள், கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகின்றனர்.

பணி தொய்வு : சென்னையை அடுத்த பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய மூன்று நகராட்சிகளிலும், கமிஷனர் பணியிடம் காலியாக உள்ளது. இம்மூன்று நகராட்சிகளிலும், நகராட்சி பொறியாளர், கமிஷனராக பொறுப்பு வகிக்கிறார். இதனால், நிர்வாக பணிகளை மேற்கொள்வதில், பெரும் தொய்வு ஏற்பட்டு வருகிறது.

சமீபகாலமாக, நகராட்சி பகுதிகளிலுள்ள விதிமீறல் கட்டடங்கள் குறித்து கணக்கெடுத்து, நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை செய்ய, சென்னையை ஒட்டியுள்ள பெரும்பாலான நகராட்சிகளில், நகரமைப்பு அலுவலர்கள் இல்லை.

ஒரு உள்ளாட்சி அமைப்பிலுள்ள நகரமைப்பு அலுவலரே, மற்ற உள்ளாட்சிக்கு கூடுதல் பொறுப்பாளராகும் போது, நிர்வாக பணிகளை கவனிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, பணியிடங்கள் நிரப்புவது மட்டுமே பிரச்னையைத் தீர்க்கும்.

விரைவில் நியமனம் : நகராட்சி நிர்வாக துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ""தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளுக்கு நியமிக்கப்பட வேண்டிய பணியிடங்கள் குறித்து, பட்டியல் தயாரித்து, அரசுக்கு அனுப்பியுள்ளோம். ஒதுக்க வேண்டிய நிதி குறித்து அறிக்கை அனுப்பியதில், நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளது; விரைவில் பணியாளர்கள் நியமனமும் இருக்கும்,'' என்றார்.

 


Page 294 of 506