Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

சுகாதார பணிகளை மேற்கொள்ள குன்னூர் நகராட்சியில் புதிய கமிட்டி

Print PDF

தினகரன்             23.01.2014 

சுகாதார பணிகளை மேற்கொள்ள குன்னூர் நகராட்சியில் புதிய கமிட்டி

குன்னூர், : மனித கழிவுகளை மனிதனே அப்புறப்படுத்த கூடாது என உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளதை அடுத்து மத்திய மாநில அரசுகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பான உத்தரவின் பேரில் குன்னூரில் ஆர்டிஓ, நகராட்சி ஆணை யம் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் உள்ளடக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கழிவறை கழிவுகளை எக்காரணத்தை கொண்டும் பொது கழிவு கால்வாயில் விடக்கூடாது எனவும் இதற்காக ஒவ்வொரு குடியிருப்பிலும் செப்டிக் டேங்க் ஏற்படுத்த வேண்டும் மற்றும் மற்றும் மனித கழிவுகளை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் உரிய பாதுகாப்பு உறைகள் அணிந்து அப்புறப்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க குன்னூர் நகராட்சி சார்பில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் தலைவராக ஆர்டிஒ செயல்படுவார். நகராட்சி ஆணையர், மக்கள் பிரதிகளில் 2 பேர் சமூக ஆர்வலர்கள் 2 பேர், ஒரு ரயில்வே ஊழியர், 2 துப்புரவு பணியாளர் ஆகியோர் அடங்கிய கமிட்டியினர் இது தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் துண்டு பிரசுரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் ஆகியவை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கான பணிகளை நகராட்சி ஆணையர் ஜான்சன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் நகரப்பகுதியிலுள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் தனிக்கழிவறை இல்லாமல் கழிப்பிட கழிவுகளை கழிவுநீர் கால்வாயில் நேரடியாக குழாய்கள் மூலம் விடுவது கண்டறியப்பட்டு சம்மந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் தனிக்கழிவறை ஏற்படுத்தாவிட்டால் அவர் கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், புதியதாக கட்டட அனுமதி கோரும் அனைத்து விண்ணப்பங்களிலும் கழிவறை குறித்த விவரம் இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

வாகன குடிநீர் கட்டணம் உயர்வு பொதுமக்கள் கருத்து கூறலாம் நகராட்சி அறிவிப்பு

Print PDF

தினகரன்             22.01.2014 

வாகன குடிநீர் கட்டணம் உயர்வு பொதுமக்கள் கருத்து கூறலாம் நகராட்சி அறிவிப்பு

திண்டுக்கல், : திண்டுக்கலில் வாகன குடிநீர் கட்டணம் உயர்வையடுத்து பொதுமக்கள் கருத்து கூற நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

திண்டுக்கல் நகர்மக்களுக்கு ஆத்தூர் காமராஜர்அணை, காவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் நகராட்சி நிர்வாகம் மூலம் அன்றாடம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. போதிய மழையில்லாத காரணத்தினால் நகர்பகுதியில் வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள பல ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் வறண்டு விட்டது.

 இதனால் நகராட்சி குடிநீரையே பொதுமக்கள் நம்பி உள்ளனர். சமையல், குளியல் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்கு குடிநீரையே பயன்படுத்தி வருகின்றனர். குடிநீர் பகிர்மான குழாய்கள் இல்லாத பகுதிகளில் நகராட்சிக்கு சொந்தமான லாரி மூலம் குடிநீர் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் திருமணம், காதணி, கோயில் திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் தண்ணீர் தேவையை பூர்த்திசெய்து கொள்ள நகராட்சி அலுவலகத்தில் இயங்கும் கருவூலத்தில் ரூ.350ஐ செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டால், நகராட்சி லாரி மூலம் ரூ.8ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

ஆனால் டீசல் விலை உயர்வு, வாகனம் பராமரிப்பு செலவு, பணியாளர்கள் ஊதியம் மற்றும் இதர செலவுகள் அதிகரித்துள்ளது என கூறி கடந்த மாதம் கவுன்சிலர்கள் கூட்டத்தில் இக்கட்டணத்தை ரூ.ஆயிரமாக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு சில கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் கட்டணம் உயர்வு குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்தை கூறலாம் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகை யில், கூடுதல் செலவு ஏற்பட்டதால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது இன்னமும் நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை. கட்டணம் உயர்வு என பொதுமக்கள் கருதினால் நகராட்சி அலுவலகத்தில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம். அதன் மூலம் கட்டணம் குறைப்புக்கு வழிவகை செய்யப்படும். என்றார்.

 

வரி பாக்கியை செலுத்தா விட்டால் ஜப்தி நடவடிக்கை: நகராட்சி ஆணையர்

Print PDF

தினமணி             21.01.2014 

வரி பாக்கியை செலுத்தா விட்டால் ஜப்தி நடவடிக்கை: நகராட்சி ஆணையர்

சிவகங்கை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியினை உடனடியாக செலுத்தி, ஜப்தி நடவடிக்கைகளை தவிர்க்க ஆணையர் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து நகராட்சி ஆணையர் க. சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

  சிவகங்கை நகராட்சிக்குச் சொந்தமான உழவர் சந்தை கடை எண் 5க்கு 2010-11 பிப்ரவரி முதல் 2013 டிசம்பர் முடிய வாடகை பாக்கி ரூ.25,550-ம், பேருந்து நிலையம் மாடி கண்ணாடிக் கடைக்கு 2005-06 ஜூன் முதல் 2010-11 டிசம்பர் வரை ரூ.1.09 லட்சம் வாடகை நிலுவையாக இருந்து வந்துள்ளது.

  இந்த கடைக்காரர்கள் வாடகை பாக்கியை நகராட்சிக்கு செலுத்தாததால் இரு கடைகளையும் நகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

    நகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் வாடகை பாக்கியை தவறாமல் செலுத்த வேண்டும். தவறினால் கடை பூட்டி சீல் வைக்கப்படும். மேலும் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி ஆகிய வரியினங்களை பொதுமக்கள் நிலுவையின்றி உடனடியாக செலுத்த வேண்டும்.

    மார்ச் மாதம் தான் கடைசி தேதி என எண்ணி இருப்பது தவறு. சொத்து வரி செலுத்தும் முறை இரண்டாம் அரையாண்டு சேர்த்து அக்.30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

   ஆனால் பொதுமக்கள் இந்த விவரம் தெரியாமல் மார்ச் மாதம் வரை கால அவகாசம் உள்ளதாக கருதுகின்றனர்.

 எனவே நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரி பாக்கியினை உடனடியாக நிலுவையின்றி வசூல் மையத்தில் செலுத்த வேண்டும்.

   தவறினால் நகராட்சி சார்பில் ஜப்தி நடவடிக்கை, குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 


Page 31 of 506