Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

விழுப்புரம் நகராட்சியில் வரி செலுத்த தவறினால் நீதிமன்ற நடவடிக்கை : ஆணையர் எச்சரிக்கை

Print PDF

தினகரன்              15.12.2010

விழுப்புரம் நகராட்சியில் வரி செலுத்த தவறினால் நீதிமன்ற நடவடிக்கை : ஆணையர் எச்சரிக்கை

விழுப்புரம், டிச. 15: விழுப்புரம் நகராட்சி ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

விழுப்புரம் நகராட்சியில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கடை வாடகை, குத்தகை இனம் மற்றும் பொது சுகாதார பிரிவு உரிமக் கட்டணங்கள் நிலுவை அதிகமாக உள்ளது. இது குறித்து உரிமையாளர்கள் மற்றும் அனுபவதாரர்களுக்கு கேட்பு அறிக்கை மற்றும் காலக்கெடு அறிவிப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகளின் அடிப்படை திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் நகராட்சி மூலம் நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடை திட்டம், சிறப்பு சாலை மேம்பாட்டு திட்டம், குடிநீர் அபிவிருத்தித் திட்டம், வெள்ள நிவாரண பணிகள் ஆகியவை தீவிரமாக நடந்து வருகிறது. நகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட சொத்தின் உரிமையாளர்கள், அனுபவதாரர்கள் மற்றும் குத்தகை இன உரிமைதாரர்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குத்தகை மற்றும் கடை வாடகை, பொது சுகாதார உரிமக் கட்டணங்கள் ஆகியவற்றை வரும் 25ம் தேதிக் குள் நகராட்சி அலுவலக கணினி மையத்தில் செலுத்த வேண்டும். கட்ட தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Last Updated on Wednesday, 15 December 2010 05:54
 

சாக்கடைக் கழிவுகளை அகற்ற தொழிலாளர்களை பயன்படுத்தக்கூடாது

Print PDF

தினமணி          14.12.2010

சாக்கடைக் கழிவுகளை அகற்ற தொழிலாளர்களை பயன்படுத்தக்கூடாது

சேலம், டிச. 13: புதை சாக்கடை, செப்டிக் டேங்க் குழிகளில் தொழிலாளர்கள் இறங்கி வேலை செய்வதை அரசு, தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கக்கூடாது என சேலம் மாவட்ட ஆட்சியர் சந்திரகுமார் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து சேலத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

தமிழகத்தில் புதை சாக்கடை, செப்டிக் டேங்க், தொழிற்சாலை கழிவுக் குழிகளில் துப்புரவுத் தொழிலாளர்கள் இறங்கி, கைகளால் அவற்றை அகற்றி வந்தனர். இதனால் விஷ வாயு தாக்கி தொழிலாளர்கள் பலர் இறந்தனர். எனவே, மனிதர்களின் கழிவுகளை மனிதர்களே அகற்றக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த மாதம் அரசு புதிய உத்தரவில், அனைத்து அரசுத்துறைகள், மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள், தனியார் கல்லூரிகள், பள்ளிகள், ஹோட்டல்கள், திருமண மண்டபங்களில் இதுபோன்ற கழிவுகளை அகற்றுவதற்கு தொழிலாளர்களை பயன்படுத்தக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் தனியார் வாகன உரிமையாளர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சேலம் மாநகராட்சியில் சுமார் 500 துப்புரவுத் தொழிலாளர்கள் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 700 பேர் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் கழிவுகளை அகற்றுவதற்கு எந்திரங்களையே பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். எனவே, நீதிமன்ற உத்தரவு, அரசு ஆணையை மதித்து அனைவரும் செயல்பட வேண்டும். மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

 

சேலத்தில் ஆட்களைக் கொண்டு செப்டிக் டேங் சுத்தம் செய்ய தடை கலெக்டர் உத்தரவு

Print PDF

தினமலர்              14.12.2010

சேலத்தில் ஆட்களைக் கொண்டு செப்டிக் டேங் சுத்தம் செய்ய தடை கலெக்டர் உத்தரவு

சேலம்: ""சேலம் மாவட்டத்தில் ஹோட்டல், திருமண மண்டபங்களில் செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்ய ஆட்களை நியமிக்கக்கூடாது; இயந்திரங்கள் கொண்டே சுத்தம் செய்ய வேண்டும். மீறினால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கலெக்டர் சந்திரகுமார் எச்சரித்தார்.

சேலம் கலெக்டர் சந்திரகுமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஹோட்டல், திருமண மண்டபங்கள், தனியார் கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் போன்றவற்றில் துப்புரவு பணியாளர்களை கொண்டு செப்டிக் டேங்குகள் சுத்தம் செய்யப்படுகிறது. அதனால், விஷவாயு தாக்கி ஊழியர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, தமிழக அரசு கடந்த மாதம் 26ம் தேதி வெளியிட்ட அரசாணையில், செப்டிக் டேங்குகளில் இருந்து ஆட்கள் மூலம் கழிவுகள் வெளியேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மூலம் அனைத்து ஹோட்டல், திருமண மண்டபங்கள், கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மீறி ஆட்களைக்கொண்டு செப்டிக் டேங்க் சுத்தம் செய்தால், சம்மந்தப்பட்டவர்கள் மீது குற்ற வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடந்து வருகிறது. சுத்தம் செய்வதற்குரிய இயந்திரங்கள் வாங்கப்பட்டு விடும்.சேலம் மாவட்டத்தில் மழை சேதங்கள் கணக்கிடப்பட்டு, 65 கோடி ரூபாய் நிதி கேட்டு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பழுதடைந்த சாலைகள் அனைத்தும் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து, இடி தாக்கி உயிரிழந்த வாழப்பாடி கோணஞ்செட்டியூரை சேர்ந்த அசோகன் என்பவரது மனைவி கிருஷ்ணவேணியிடம், முதல்வர் நிவாரண உதவித்தொகை ஒரு லட்சம் ரூபாயை கலெக்டர் வழங்கினார்.மாநகராட்சி கமிஷனர் பழனிசாமி, மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் சுந்தரேசன் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

 


Page 301 of 506