Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

துப்புரவு தொழிலாளருக்கு பி.எப் பணம் வழங்காத பெரம்பலூர் நகராட்சி கமிஷனருக்கு பிடிவாரன்ட்

Print PDF

தினகரன்                29.11.2010

துப்புரவு தொழிலாளருக்கு பி.எப் பணம் வழங்காத பெரம்பலூர் நகராட்சி கமிஷனருக்கு பிடிவாரன்ட்

பெரம்பலூர், நவ.29: ஓய்வுபெற்ற துப்புரவு தொழிலாளர்களுக்கு பி.எப் பணம் வழங்காத பெரம்பலூர் நகராட்சி ஆணையரை டிசம்பர் 7ம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்த நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் நகராட்சி 12வது வார்டு ராஜாஜி தெருவை சேர்ந்தவர்கள் ராமலிங்கம், கோவிந்தன், மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் கருப்பன், 14வது வார்டை சேர்ந்தவர்கள் செல்லமுத்து, ராஜு. இவர்கள் 5 பேரும் பெரம்பலூர் நகராட்சியில் பணியாற்றி ஓய்வுபெற்ற துப்புரவு பணியாளர்கள்.

ஓய்வுக்கு பின்பு வழங்க வேண்டிய பி.எப் பணம் தரப்படவில்லை. பலமுறை கேட்டும் கிடைக்காததால் 5 பேரும் 2008ல் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதன்பின்பு ஓய்வு பெற்ற நீலம்மாள், பெரியண்ணன், சுந்தரி, வீரம்மாள் ஆகியோரும் இவ்வழக்கில் தங்களை சேர்த்துக் கொண்டனர்.

வழக்கை விசாரித்த கோர்ட், ஓய்வுபெற்ற 9 பேருக்கும் பிஎப் பணம், இழப்பீட்டு தொகை, வழக்கு செலவு தொகை ஆகியவற்றை வழங்க உத்தரவிட்டது. ஆனால் பிஎப் தொகை மட்டும் வழங்க முடியும், மற்ற தொகை மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்புக்கு பின்புதான் தர முடியும் எனக்கூறிய நகராட்சி நிர்வாகம், 9 பேருக்கும் தலா ரூ.5,000த்தை மட்டும் வழங்கியது.

இதனால் 9 பேரும் நுகர்வோர் மன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி நந்தன், பெரம்பலூர் நகராட்சி ஆணையரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த கடந்த மாதம் 29ம் தேதி உத்தரவிட்டார்.

பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும், கைது உத்தரவை போலீசாரிடம் கொடுக்க வேண்டும் எனவும் நகராட்சி தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்பிறகும் பாதிக்கப்பட்டோருக்கு உரிய தொகை வழங்கப்படாததால், நகராட்சி ஆணையரை டிசம்பர் 7ம் தேதிக்குள் கைது செய்ய வாரன்ட் பிறப்பித்து நீதிபதி நந்தன் உத்தரவிட்டுள்ளார்.

 

பாளையங்கோட்டையில் வாடகை செலுத்தாத கடைக்கு "சீல்'

Print PDF

தினமணி         26.11.2010

பாளையங்கோட்டையில் வாடகை செலுத்தாத கடைக்கு "சீல்'

திருநெல்வேலி,நவ.25: பாளையங்கோட்டை மகாராஜநகரில் வாடகை செலுத்தாத கடைக்கு மாநகராட்சி பணியாளர்கள் வியாழக்கிழமை "சீல்' வைத்தனர்.

பாளையங்கோட்டை மண்டலப் பகுதியில் வரி,வாடகை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இருந்த கடை உரிமையாளர்களுக்கு,அதை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. இதில் பெரும்பாலானோர் வாடகையைச் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் வாடகையை செலுத்தாமல் இழுத்தடித்து வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் மகாராஜநகரில் வாடகை செலுத்தாமல் இருந்த கடையை, மாநகராட்சி ஊழியர்கள் வியாழக்கிழமை பூட்டி,சீல் வைத்தனர். இதனால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல வாடகை செலுத்தாத கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

குன்னூர் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு

Print PDF

தினமலர்              26.11.2010

குன்னூர் நகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு

குன்னூர்: குன்னூரில் உள்ள கடைகளில், நகராட்சி அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது; இறைச்சிக் கடைக்காரர்கள், சுகாதாரத்தை காக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது. குன்னூர் நகராட்சி கமிஷனர் சேகரன் உத்தரவின் படி, சுகாதார மேற்பார்வையாளர் செந்தில்குமார், ஞானசேகரன், ஆய்வாளர் பூமாலை, நகரமைப்பு அலுவலர் சுகுமார், பெரியசாமி மற்றும் ஊழியர்கள் குன்னூர் மார்க்கெட், மவுண்ட்ரோடு, பஸ் ஸ்டாண்டு, பெட்போர்டு உட்பட இடங்களில் உள்ள கடைகளில், இரு நாட்களாக ரெய்டு நடத்தினர். பிளாஸ்டிக் கேரி பேக், டம்ளர், தட்டு உட்பட பொருட்களை மொத்தமாக விற்பனை செய்யும் 9 கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். நான்கு கடைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, 4 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன; 5,550 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

பிளாஸ்டிக் கேரி பேக் தயாரிப்பு கம்பெனிகளிடம் வாங்கும் பிளாஸ்டிக் பைகளின் மீது, அந்த பிளாஸ்டிக் கேரி பேக்குகள் எத்தனை மைக்ரான் உள்ளது என்பது அச்சிடப்பட்டிருக்கும். ஆனால், பல கடைகளில், கடைக்காரர்களே பிளாஸ்டிக் பைகள் அடங்கிய கவரின் மீது ஸ்கெட்ச் பேனா, பென்சில், ரப்பர் ஸ்டாம்பு மூலம் மைக்ரானின் அளவை அச்சிடுகின்றனர்; இது, தவறான செயல் என அதிகாரிகள் சுட்டிக் காட்டினர். குன்னூர் மார்க்கெட்டில் உள்ள மீன் இறைச்சி வியாபாரிகள், திறந்த வெளியில் மீன்களை வைத்து விற்பதால், , கொசு போன்றவை மொய்க்கின்றன; இதைத் தவிர்க்க, மீன் இறைச்சிகளின் மீது வலையை விரித்து வைத்து விற்க வேண்டும்; தவிர, மீன், கோழி இறைச்சிக் கழிவுகளை அருகேயுள்ள ஆற்றில் கொட்டுவதால், துர்நாற்றம் வீசுகிறது; எனவே, கழிவுகளை ஒதுக்குப்புறமான இடத்தில் கொட்ட வேண்டும் என அறிவுறுத்தினர்.

பல கடைகளில், பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு வரும் ஊறுகாய்களை, சிறிய பிளாஸ்டிக் கவர்களில் 50 கிராம், 100 கிராம் என அடைத்து விற்கப்படுகின்றன; இவற்றையும் ஆய்வு செய்த அதிகாரிகள், பிளாஸ்டிக் கவர்களில் ஊறுகாய்களை அடைத்து விற்கக் கூடாது எனவும் அறிவுறுத்தினர்.

 


Page 313 of 506