Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

மழையால் பாதிப்பு; கமிஷனர் ஆய்வு

Print PDF

தினமலர்              25.11.2010

மழையால் பாதிப்பு; கமிஷனர் ஆய்வு

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி வார்டு பகுதிகளில் மழையால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகள் மற்றும் ஆற்றோர பகுதிகளில் சாக்கடை கழிவுமற்றும் குப்பை, கால்வாயில் அடைத்துக் கொள்வதால் குடியிருப்பு பகுதிகளில் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உரிய நடவடிக்கை எடுக்கவும், சுகாதார பணியில் தீவிரம் காட்டவும், நேற்று கமிஷனர் ஜெயலட்சுமி வார்டு பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். காலேஜ் ரோடு, பாளையக்காடு, கோல்டன் நகர், தென்னம் பாளையம், முத்தையன் கோவில், வெள்ளியங் காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினார். தென்னம்பாளையம் முத்தையன் கோவில் அருகில் உள்ள ஓடை பாலத்தில் அடைப்பை அகற்ற உத்தரவிட்டார். சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையில், துப்புரவு பணியாளர்கள் 15 பேர் லோடர் மற்றும் டிப்பர் லாரியை பயன்படுத்தி அடைப்பை நீக்கினர். மற்ற பகுதிகளில், சாக்கடை மற்றும் தரைப்பால அடைப்புகளையும், மழைநீருடன் கலந்து தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீரை அப்புறப்படுத்தவும், சுகாதாரமற்ற பகுதிகளில் கொசு மருந்து தெளிக்கவும், குப்பையை அகற்றவும் அறிவுறுத்தினார்.

 

தடை இல்லா சான்று பெற மும்பை மாநகராட்சியிடம் போலி கடிதம் சமர்ப்பிப்பு

Print PDF

தினகரன்          25.11.2010

தடை இல்லா சான்று பெற மும்பை மாநகராட்சியிடம் போலி கடிதம் சமர்ப்பிப்பு

மும்பை, நவ. 25: மும்பை மாநகராட்சியிடம் தடை இல்லா சான்று பெற, ராணுவ உயரதிகாரியின் கையெழுத்துடன் கூடிய போலி கடிதத்தை கொடுத்து, தடை செய்யப்பட்ட பகுதியை பயன்படுத்த அனுமதி பெறப்பட்டது தொடர்பாக, போலீசிடம் ராணுவம் புகார் அளித்துள்ளது.

மலாடில் உள்ள மத்திய தீர்ப்பாயம் டெப்போ சுற்றுச்சுவர் அருகே உள்ள 10 மீட்டர் நிலப்பரப்பு தடை செய்யப்பட்ட பகுதியாகும். ரோந்து பணி மேற்கொள்ள ராணுவத்தினர் இந்த பகுதியை பயன்படுத்த மட்டுமே அனுமதி உள்ளது. பொதுமக்கள் இப்பகுதியை பயன்படுத்த கூடாது.

ஆனால், இந்த பகுதியை பொதுமக்கள் பயன்படுத்த ராணுவம் அனுமதி வழங்கியுள்ளதாக கூறி, ராணுவ உயரதிகாரியின் போலி கையெழுத்துடன் கூறிய கடிதத்தை மும்பை மாநகராட்சியிடம் சமர்ப்பித்த, அடையாளம் தெரியாத நபர், சம்மந்தப்பட்ட பகுதியை பொதுமக்கள் பயன்படுத்த ஒப்புதல் பெற்றார்.

இது குறித்து மத்திய தீர்ப்பாயம் டெப்போ பாதுகாப்பு அதிகாரி விவேகானந்த் காஞ்சி கூறுகையில், "தடை செய்யப்பட்ட பகுதியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கி ராணுவ அதிகாரி கடிதம் எதுவும் வழங்கவில்லை. ராணுவ அதிகாரியின் போலி கையெழுத்துடன் கூடிய கடிதம் மாநகராட்சியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

ராணுவம் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுத்த போலீஸ், அடையாளம் தெரியாதவர் மீது 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.

Last Updated on Thursday, 25 November 2010 05:41
 

பஹர்கஞ்சில் 3 விருந்தினர் விடுதிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’

Print PDF

தினகரன்              25.11.2010

பஹர்கஞ்சில் 3 விருந்தினர் விடுதிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்

புதுடெல்லி, நவ. 25: பஹர்கஞ்சில் மாநகராட்சி அனுமதி பெறாமல் இயங்கி வந்த 3 விருந்தினர் விடுதிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்வைத்தனர்.

பஹர்கஞ்சில் சுமார் 400 விருந்தினர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 150 விடுதிகள் மாநகராட்சி லைசென்ஸ் பெறாமல் இயங்கி வருபவை என்று தெரியவந்துள்ளது. இந்த விருந்தினர் விடுதிகளுக்கு கடிவாளம் கட்ட மாநகராட்சி முடிவு செய்தது.

இதன்படி, பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள 60க்கும் மேற்பட்ட விருந்தினர் இல்லங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன. அதில், உடனடியாக விருந்தினர்இல்லங்களை மாநகராட்சியில் பதிவு செய்து கொள்ளவில்லை என்றால், அவை பூட்டி சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து சதர் பஹர்கஞ்ச் மண்டல துணை கமிஷனர் ரேணு ஜெகதேவ் கூறுகையில், ‘’விருந்தினர் இல்லங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். சதர் பஹர்கஞ்ச் மண்டல கட்டிடத்துறை இன்ஜினியர் சார்பில் இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. உடனடியாக அவர்கள் தங்களை பதிவு செய்து கொண்டு பதில் மனு அனுப்ப வேண்டும். அவர்களின் பதில் மனுவுக்காக காத்திருக்கிறோம். அதன்பின் நடவடிக்கையில் இறங்குவோம்" என்றார்.

இந்நிலையில், முதல்கட்டமாக கடந்த 18ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்ட விடுதிகளில் 18 விடுதிகளில் 3 விடுதிகளின் உரிமையாளர்கள் அனுப்பியிருந்த பதிலில் திருப்தி இல்லாததை தொடர்ந்து அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கலி ராம்நாத் பட்வாவில் உள்ள வேத் பேலஸ், வேத் ஹான் ஆகிய விடுதிகளும், தாரிபா பானில் உள்ள ஓட்டல் டி.ஆர்.எஸ். ஆகியவையும் சீல் வைக்கப்பட்ட விடுதிகள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனுமதி பெறாமல் இயங்கி வரும் விருந்தினர் விடுதிகளின் உரிமையாளர்கள் இடம்பெற்றுள்ள ஓட்டல் சங்க நிர்வாகிகள் கூறுகையில், "நாங்கள் டெல்லி மாஸ்டர் பிளான் & 2021ல் குறிப்பிட்டுள்ள சிறப்பு பகுதியில் உள்ளோம். இதனால் டெல்லி மாநகராட்சியிடம் நாங்கள் பதிவு செய்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. மாஸ்டர் பிளானுக்கு அனுமதி அளிக்கும் வகையில் இப்போதுள்ள நிலை அப்படியே தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழக்கு ஒன்றில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது" என்றார்.

Last Updated on Thursday, 25 November 2010 05:37
 


Page 315 of 506