Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பேட்டை 45, 46, 47வது வார்டுகளில் குறைகளை களைய நடவடிக்கை எடுக்கணும்!

Print PDF

தினமலர்               24.11.2010

பேட்டை 45, 46, 47வது வார்டுகளில் குறைகளை களைய நடவடிக்கை எடுக்கணும்!

திருநெல்வேலி : பேட்டை 45, 46, 47வது வார்டுகளில் குறைகளை களைய மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் துணைமேயரிடம் மனுக் கொடுத்துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், நிர்வாகிகள் மைதீன்பிச்சை, ராமையா அளித்துள்ள மனுவில், "நெல்லை மாநகராட்சி பேட்டை 47வது வார்டு பாண்டியாபுரம் தெற்கு தெரு, கருங்காடு ரோடு பகுதியில் இரவு 7 மணிக்கு மின் விளக்கு போடப்பட்டு இரவு 10 மணிக்கு அணைக்கப்படுகிறது. மர்ம நபர்கள் மின் விளக்கை அணைப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் திருட்டு, அசம்பாவிதம் நடைபெற வாய்ப்புள்ளது.

47வது வார்டு பாண்டியாபுரம் தெருவில் வாய்க்காலில் தூர்வாரி, ஆழப்படுத்தவேண்டும். தடுப்புச்சுவர் கட்டவேண்டும். நடுவில் மக்கள் நடமாட பாலம் கட்டவேண்டும். நல்ல தண்ணீர் பம்பை சுற்றிலும் சாக்கடை நீர் வருவதால் அதை சரிசெய்து சிமெண்ட் தளம் போடவேண்டும். பாண்டியாபுரம் தெற்கு தெரு பஸ்ஸ்டாப் முன்புள்ள வாறுகால் பாலத்தை சீரமைக்கவேண்டும். புதுக்கிராமம் சுந்தரவிநாயகர் கோயில் தெரு, பாண்டியாபுரம் வடக்கு தெருவில் வாறுகால் இல்லாமல் சாக்கடை நீர் வெளியேறி வீட்டுக்குள் வருகிறது. வாறுகால் கட்டவேண்டும். அசோகர் கீழத்தெருவில் கழிப்பிடத்தை சீரமைக்கவேண்டும். அசோகர் தெற்கு தெரு, வடக்கு தெருவில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது. அந்த பள்ளத்தில் மழைநீர், சாக்கடை நீர் வருகிறது. பள்ளத்தை சரிசெய்து சீரமைக்கவேண்டும். பசும்பொன் தெருவில் பாழடைந்த கழிப்பிடத்தை சீரமைக்கவேண்டும். 45வது வார்டு, 46வது வார்டு சந்தனமாரியம்மன் கோயில், எஸ்.வி.கே.படையாச்சி தெருவில் பெண்கள் கழிப்பிடத்தை சீரமைக்கவேண்டும். பேட்டை சேரன்மகாதேவி ரோட்டில் இருந்த நல்ல தண்ணீர் குழாய் திடீரென மாயமாகிவிட்டது. அந்த இடத்தில் நல்ல தண்ணீர் குழாயை அமைக்கவேண்டும். ஆண்டாள்புரம் கழிப்பிடத்தில் கதவுகள் இல்லை. அதை சரிசெய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

 

விதிமீறல் கட்டடங்கள் பட்டியல் ஐகோர்ட் உத்தரவு

Print PDF

தினமலர்                24.11.2010

விதிமீறல் கட்டடங்கள் பட்டியல் ஐகோர்ட் உத்தரவு

சென்னை : சென்னையில் அனுமதியின்றி, விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களின் பட்டியல், அந்தக் கால கட்டத்தில் பணியாற்றிய அதிகாரிகளின் விவரங்களை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.சென்னை சூளைப் பகுதியை சேர்ந்த சாலமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "சூளையில் வாத்தியார் கந்தப்பிள்ளை தெருவில் ஒரு அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளம் மற்றும் முதல் அடுக்குக்கு தான் அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், ஏழு அடுக்கு கட்டியுள்ளனர். இதனால் எங்களுக்கு குடிநீர், கழிவுநீர் பிரச்னை ஏற்படுகிறது.இதுகுறித்து அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன்.

எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்' என கூறியுள்ளார்.இம்மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய "முதல் பெஞ்ச்', சென்னையில் அனுமதியின்றி, விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களின் பட்டியல், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விவரங்களை மாநகராட்சி தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்கு மீண்டும் "முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, "முதல் பெஞ்ச்' பிறப்பித்த இடைக்கால உத்தரவு:அட்வகேட் ஜெனரல் கேட்டு கொண்டதன் பேரில், விசாரணை 30ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. மாநகராட்சி வரம்புக்குள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களின் விவரங்களை தாக்கல் செய்ய ஏதுவாக, விசாரணை தள்ளி வைக்கப்படுகிறது.எந்த அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் இந்த கட்டுமானங்கள் நடந்தது? அந்த கால கட்டத்தில் அவ்வப்போது பதவி வகித்த மண்டல அதிகாரிகளின் விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு "முதல் பெஞ்ச்' இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

 

சேலம் மாநகராட்சியில் வரிபாக்கி வைத்திருப்போரின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினகரன்                      24.11.2010

சேலம் மாநகராட்சியில் வரிபாக்கி வைத்திருப்போரின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

சேலம், நவ.24: சேலம் சூரமங்கலம் பகுதியில் குழாய் வரி கட்டாத 10 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. எனவே, பொதுமக்கள் தாமாகவே முன்வந்து நிலுவை வரிகளை செலுத்த வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேலம் மாநகராட்சியில் வரி வசூல் பணி தொடர்பாக ஆய்வு கூட்டம் 2 தினங்களுக்கு முன் நடந்தது. கூட்டத்திற்கு ஆணையர் பழனிசாமி தலைமை வகித்து, சேலம் மாநகராட்சிக்கு பொதுமக்களால் செலுத்தப்படவேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, கடை வாடகை மற்றும் இதர வரிகளை நிலுவையின்றி வசூலிக்க வேண்டும் என வரிவசூல் ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

இதன் பேரில் நேற்று முன்தினம் சூரமங்கலம் மண்டலத்தில் வீட்டு வரி, குழாய் வரி கட்டாத வீடுகள் கண்டறியப்பட்டது. இதில் 19வது வார்டில் 5 வீடுகளில் குடிநீர் கட்டணம் செலுத்தாது கண்டறியப்பட்டு உடனடியாக மாநகராட்சி ஊழியர்களால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இதேபோல் நேற்று சூரமங்கலம் தர்மன் நகர் 1, 2, 3 ஆகிய தெருக்களிலும் 5 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மற்ற மண்டலங்களிலும் நீண்டநாட்களாக வரி செலுத்தாதவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சியில் வீடு, கடைகளுக்கான வரிகளை செலுத்த 4 கணினி வாகனங்கள் அந்தந்த வார்டுகளுக்கே செல்கிறது. 8 வரிவசூல் மையங்களும் செயல்படுகின்றன. மாநகராட்சியின் பாதாள சாக்கடை, தனி குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகள் நிறைவேற வரி செலுத்தாதவர்கள் உடனடியாக நிலுவை வரிகளை செலுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 317 of 506