Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

ரூ20.06 கோடியில் சாலைகள் நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் ஆய்வு

Print PDF

தினகரன்              10.09.2010

ரூ20.06 கோடியில் சாலைகள் நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் ஆய்வு

திருப்பூர், நவ.10: சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ், ரூ.20 கோடி பணிகளுக்கான டெண்டர் மனு பரிசீலனை நேற்று நடந்தது. நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் சந்திரசேகரன் இதனை ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாநகராட்சியில் சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ், சாலை களை சீரமைக்க தமிழக அரசு ரூ.20.06 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணிகளை தரத்துடன் மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க அரசு அறிவுறுத்தியிருந்த நிலையில், இத்திட்டப்பணிகளை மேற்கொள்வது தொடர்பாக கான்ட்ராக்டர்களுடன் திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் கடந்த சில தினங்க ளுக்கு முன்னர் ஆலோசனை நடத்தினர். சாலைகள் மேற்கொள்ளும் பணிக்கு கான்ட்ராக்டர்களுக்கு தேவையான தகுதிகள்; இருக்க வேண்டிய கருவிகள் உள்ளிட்டவை தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது. வரும் பிப்ரவரி மாதத்துக்குள் இந்த பணி களை முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, டெண்டர்கள் பெறப்பட்டன. இந்த டெண்டர் மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. இதில் நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் சந்திரசேகரன் கலந்து கொண்டு, டெண்டர் மனுக்களை பரிசீலித்தார். மேலும் திட்டப்பணிகள் தொடர்பான ஆய்வு பணிகளை அவர் மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் ஜெயலட்சுமி, மாநகராட்சி பொறியாளர் கவுதமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

மெரீனா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருளை வீசினால் ரூ.100 அபராதம்; மேயர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

Print PDF

மாலை மலர்            09.11.2010

மெரீனா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருளை வீசினால் ரூ.100 அபராதம்; மேயர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

மெரீனா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருளை வீசினால் ரூ.100 அபராதம்; 
 
 மேயர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை. நவ.9- மெரினா கடற்கரையில் நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் வசதிக்காக மாநகராட்சி மூலம் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, நாள்தோறும் கடற்கரை, புல்வெளிகள் தூய்மைப் படுத்துவதும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மேயர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

சென்னை மாநகரின் சுற்றுலாப் பகுதியாக விளங்கும் மெரினா கடற்கரை ரூபாய் 26 கோடி செலவில் அழகுபடுத்தப்பட்டுள்ளது. சுமார் 3 கி.மீ. நீளத்திற்கு அழகிய நடைபாதைகள், புல்வெளிகள், அலங்கார மின் விளக்குகள், 14 இடங்களில் அமர்வு இடங்கள், நீருற்றுகள் என பல்வேறு அழகிய வேலைப்பாடுகளுடன் அனை வரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

கடற்கரை பராமரிப்புக்காக தூய்மைப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள், தோட்டப் பணியாளர்கள், மின் பணியாளர்கள், தனியார் பாதுகாவலர்கள் என 149 பேர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மணற்பரப்பை சுத்தம் செய்வதற்காக மணல் குப்பை ஜலிக்கும் இயந்திரம், புல்வெளிகளை அழகு படுத்துவதற்காக கட்டர்கள், பிரஷ் கட்டர்கள், ஹெட்ஜ் கட்டர்கள், நடைபாதைகளை தூய்மைப்படுத்துவதற்காக லான் கட்டர்கள், மரங்களை சீர் செய்வதற்காக புரூனர்கள் என பல்வேறு வகையான நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, நாள் தோறும் சுத்தம் செய்யப்படுகிறது.

மெரினா கடற்கரை மேம்படுத்தும் பணி ரூபாய் ஒரு கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணிகள் ஒரு மாதத்தில் முடிக்கப்படும்.

சிறு வியாபாரிகள் மற்றும் நாள்தோறும் இங்கு வியாபாரம் செய்பவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும். மாநகராட்சி மூலம் கடந்த 9 நாட்களில் வியாபாரிகளிடம் இருந்து ரூ.1300 அபராதம் விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களும், வியா பாரிகளும் பிளாஸ்டிக் பொருட்களை மெரினா கடற்கரையில் பயன்படுத்து வதை தவிர்க்க வேண்டும். சென்னை மாநகராட்சி மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.100 அபராதம் விதித்து, கட்டணம் வசூலிக்கும்.

மெரினா கடற்கரையில் பணி மேற்கொள்ளும் பணியாளர்கள் சென்னை மாநகருக்கு பெருமை சேர்க்கிறோம் என்கிற உணர்வோடு பணியாற்றிட வேண்டும். மெரினா கடற்கரை சென்னை மாநகரின் சிறந்த சுற்றுலாத் தலமாகும். சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் லட்சக்கணக்கான பொதுமக்கள் கூடுகின்றனர்.

சென்னை மாநகராட்சி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என பல்வேறு விளம்பரங்களை மெரினா கடற்கரையில் செய்துள்ளது. அதே போன்று, புல்வெளிகளில் அமரக் கூடாது என்றும், கேடு விளைவிக்கக் கூடாது என்றும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

மெரினாவில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ 100 அபராதம்

Print PDF

தினமணி                09.11.2010

மெரினாவில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ 100 அபராதம்

சென்னை, நவ.9: மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ 100 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மெரினா கடற்கரையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். சென்னை மாநகராட்சி மூலம் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பல்வேறு நவீன இயந்திரங்கள் மூலம் மெரினா கடற்கரை, புல்வெளிகள் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மேயர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், தமிழக முதல்வர் கருணாநிதி தலைமைச் செயலகம் எதிரில் ராஜாஜி சாலையில் புதிய பூங்காவினை ரூ.10 கோடி செலவில் திறந்து வைத்தார். சென்னை மாநகரின் சுற்றுலாப் பகுதியாக விளங்கும் மெரினா கடற்கரை ரூ. 26 கோடி செலவில் அழகுபடுத்தப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு மிக்க மெரினா கடற்கரையை பராமரிப்பதற்காக தூய்மைப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள், தோட்டப் பணியாளர்கள், மின் பணியாளர்கள், தனியார் பாதுகாவலர்கள் என 149 பேர்கள் நாள்தோறும் பணியாற்றி வருகிறார்கள். இப்பணிக்காக சென்னை மாநகராட்சி சார்பில் ஒரு இளநிலை பொறியாளர் பணியமர்த்தப்பட்டு, கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

மெரினா கடற்கரை மேம்படுத்தும் பணி ரூ ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்தப் பணிகள் ஒரு மாதத்தில் முடிக்கப்படும்.

பொதுமக்களும், வியாபாரிகளும் பிளாஸ்டிக் பொருட்களை மெரினா கடற்கரையில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மெரினா கடற்கரையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் சென்னை மாநகராட்சி ரூ. 100 அபராதம் விதித்து, கட்டணம் வசூலிக்கும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என சென்னை மாநகராட்சி பல்வேறு விளம்பரங்களை மெரினா கடற்கரையில் செய்துள்ளது. மாநகராட்சியின் நடவடிக்கைக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மா.சுப்ரமணியம் தெரிவித்தார்.

 


Page 327 of 506