Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

நடைபாதை: அதிகாரி அறிவுரை

Print PDF

தினமலர்                     03.11.2010

நடைபாதை: அதிகாரி அறிவுரை

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இரண்டு பஸ் ஸ்டாண்டுகளையும் இணைக்கும் சுரங்க நடைபாதை பணிகளை விரைவு படுத்தி நிறைவு செய்ய நகராட்சிகளின் கூடுதல் இயக்குனர் அறிவுறுத்தினார். சுரங்க நடைபாதைக்கான கான்கிரீட் அமைக்கும் பணிகள் நிறைவடைந்ததால் பஸ் ஸ்டாண்ட் ரோடு போக்குவரத்திற்கு ரோடு திறக்கப்பட்டுள்ளது. பணிகள் விறுவிறுப்பாக நடக்கும் நிலையில் நகராட்சிகளின் நிர்வாக கூடுதல் இயக்குனர் சந்திரசேகர், மண்டல செயற்பொறியாளர் தீனதயாளன் ஆகியோர் நேற்று சுரங்க நடைபாதை பணிகளை பார்வையிட்டனர். நகராட்சி பொறியாளர் மோகன் உடனிருந்தார். அதிகாரிகளிடம் கூடுதல் இயக்குனர் பேசுகையில், "சுரங்க நடைபாதை பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளதால் "டைல்ஸ்' பதிப்பது உள்ளிட்ட இறுதிகட்ட பணிகளை வேகப்படுத்த வேண்டும். இன்னும் 15 நாட்களில் பணிகளை விரைவுபடுத்தி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும்' என்று அறிவுறுத்தினார்.

Last Updated on Thursday, 04 November 2010 04:14
 

நெல்லை மாநகராட்சியில் ரூ. 25 கோடிரோடு பணிக்கு டெண்டர் தேதியை நீட்டித்தது

Print PDF

தினமலர்           03.11.2010

நெல்லை மாநகராட்சியில் ரூ. 25 கோடிரோடு பணிக்கு டெண்டர் தேதியை நீட்டித்தது

திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சியில் ரோடு பணிக்கு டெண்டர் போடுவதில் தகராறு ஏற்பட்டதையடுத்து டெண்டர் தேதியை நாளை வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.சட்டசபைத்தேர்தல் நெருங்குவதையொட்டி தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிப்பகுதிகளில் 1,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழுதடைந்த ரோடுகளை சீர்செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நெல்லை மாநகராட்சிக்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பல வார்டுகளில் சிமென்ட், தார் ரோடுகள் அமைக்கும் பணிகளும் இதில் அடக்கம்.இப்பணிக்கு ஒப்பந்ததாரர்கள் டெண்டர் போடுவதற்கு கடந்த 1ம்தேதி கடைசிநாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுவாக அதிக மதிப்பீட்டிலான பணிகளுக்கு டெண்டர் போடும் ஒப்பந்ததாரர்கள் தங்களுக்குள் "சிண்டிகேட்' அமைப்பது வழக்கம். குறிப்பிட்ட ஒரு பணிக்கு பல ஒப்பந்ததாரர்கள் டெண்டர் பாரம் வாங்கினாலும் ஆளுங்கட்சி ஆதரவு பெற்ற ஓரிருவர் மட்டுமே டெண்டர் போடுவர். அதில் ஒருவருக்கு பணி அளிக்கப்படும்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பேதமின்றி அனைவரும் தங்களுக்குள் "பேசி' முடித்துக்கொள்வர்.தற்போது சிமென்ட் விலை உச்சத்தில் இருப்பதால் சிமென்ட் ரோடு அமைக்கும் பணியை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் தார் ரோடு அமைக்கும் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் சிமென்ட் ரோடு பணியை சேர்த்து செய்ய வேண்டும் என அதிகாரிகள் வற்புறுத்தி வருகின்றனர்.நெல்லை மாநகராட்சி அலுவலகத்திற்கு சம்பவத்தன்று ஆளும்கட்சி கவுன்சிலர் காரில் வந்த ஒருவர் முக்கிய வி..பி., ஒருவரின் சிபாரிசுப்படி தார் ரோடு பணிக்கு மட்டும் டெண்டர் போட்டுள்ளார். இதனால் அவருக்கும், ஏற்கனவே டெண்டர் போட்ட மாநகராட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வேறு சிலரும் டெண்டர் போட விடாமல் தடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறப்பட்டது. அதிகாரிகள் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதுதொடர்பாக மேலிடத்திற்கு தகவல் பறந்தது. இதையடுத்து நெல்லை மாநகராட்சியில் மட்டும் ரோடு பணிக்கு டெண்டர் அளிக்க 4ம்தேதி (நாளை) வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 04 November 2010 07:40
 

கடையநல்லூரில் குடிநீர் திட்ட பணிகளை அதிகாரிகள் குழு ஆய்வு

Print PDF

தினமலர்               02.11.2010

கடையநல்லூரில் குடிநீர் திட்ட பணிகளை அதிகாரிகள் குழு ஆய்வு

கடையநல்லூர்: கடையநல்லூரில் மேற்கொள்ளப்பட இருக்கும் குடிநீர் புணரமைப்பு பணிகளை அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.கடையநல்லூரில் சுமார் 22 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் குடிநீர் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த சில மாதங்களுக்கு முன் நடத்தப்பட்ட நிலையில் புணரமைப்பு பணியின் போது அமைக்கப்பட உள்ள வாட்டர்டேங்குகள் அமையும் பகுதி, குடிநீருக்காக புதிதாக உருவாக்கப்பட உள்ள இரண்டு கிணறுகள் அமையும் பகுதி போன்ற பணிகளை சென்னையில் இருந்து வருகை தந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.நகராட்சி நிர்வாக ஆணையக தலைமை பொறியாளர் ரகுநாதன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இன்ஜினியரிங் டைரக்டர் தனுசு, தலைமை பொறியாளர் ராமச்சந்திரன், கண்காணிப்பு பொறியாளர் சுப்பிரமணியன், நிதிநிலை அதிகாரி ராஜேந்திரன், மண்டல நிர்வாக பொறியாளர் கனகராஜ் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழு குடிநீர் புனரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.குழுவினருடன் நகராட்சி கமிஷனர் அப்துல் லத்தீப், நகராட்சி இன்ஜினியர் நடராஜன், இளநிலை பொறியாளர் அகமதுஅலி மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்

 


Page 331 of 506