Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Municipal Administration

பட்டாசு கடைகளுக்கு உரிமம்வழங்குவதில் மாநகராட்சி குழப்பம்

Print PDF

தினமலர்                     02.11.2010

பட்டாசு கடைகளுக்கு உரிமம்வழங்குவதில் மாநகராட்சி குழப்பம்

சென்னை : நகரில் பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்குவதில் சென்னை மாநகராட்சி குழப்ப நிலையில் உள்ளது. உரிமம் இல்லாமலே நகரில் பல இடங்களில் பட்டாசு கடைகள் வைக்கப்பட்டுள்ளன.


தீபாவளி பண்டிகை நெருங்குவதைத் தொடர்ந்து, நகரில் பல இடங்களில் 100க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் வைக்கப்பட்டுள்ளன. பட்டாசு கடை வைக்க வேண்டும் எனில், போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினரின் தடையின்மை சான்று பெற்ற பின், மாநகராட்சியின் உரிமம் பெற வேண்டும்.சிறிய அளவில், அதாவது, 50 கிலோ எடையுள்ள பட்டாசுகளை வைத்து விற்பனை செய்யும் அளவிற்கு கடையாக இருந்தால் அதற்கு 1,000 ரூபாய் உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும். 100 கிலோவிற்கு மேல் பட்டாசுகளை விற்கும் கடையாக இருந்தால் 2,000 ரூபாய் உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும்.போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினரிடம் இருந்து பெறப்பட்ட தடையின்மை சான்றுடன் சேர்த்து மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மனு செய்தால், மாநகராட்சி வருவாய் துறை அலுவலர்கள் நேரடியாக ஆய்வு செய்து உரிமம் வழங்குவர்.ஆனால், இந்தாண்டு இதுவரை பட்டாசு கடை வைக்க மாநகராட்சியில் ஒருவர் கூட உரிமம் கேட்டு, மனு செய்யவில்லை. போலீஸ் தடையின்மை சான்றுகளே நேற்றுதான் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், நகரில் பல இடங்களில் தற்போது, பட்டாசு கடைகள் வைக்கப்பட்டுள்ளன. அவர்களிடம் போலீஸ் தடையின்மை சான்றும் இல்லை. மாநகராட்சியின் உரிமமும் இல்லை.இது குறித்து, மாநகராட்சி மண்டல உதவி வருவாய் அலுவலரிடம் விசாரித்த போது, மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கின்றனர். ஒரு உதவி வருவாய் அலுவலர், ""நாங்கள் உரிமம் கொடுக்க வேண்டியதில்லை. போலீஸ் தீயணைப்பு துறையினரிடம் தடையின்மை சான்று பெற்றால் போதும்,'' என்கிறார்.மற்றொரு உதவி வருவாய் அலுவலர்,"போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினரிடம் தடையின்மை சான்று பெற்று வந்து கொடுத்த பின் நாங்கள் உரிமம் கொடுப்போம்' என்கிறார். உரிமம் கொடுப்பதா, இல்லையா என்பதே மாநகராட்சி வருவாய் அலுவலர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எந்த அனுமதியும் இல்லாமல், நகரில் நான்கு, ஐந்து நாட்களாக, செயல்படும், பட்டாசு கடைக்காரர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றனர் என்பது தெரியவில்லை.மாநகராட்சி கமிஷனர், கார்த்திகேயன் கூறும் போது, "பட்டாசு கடை வைத்திருப்பவர்கள் போலீசிடம் அனுமதி பெற வேண்டும். மாநகராட்சி சார்பில் குறிப்பிட்ட கடைக்காரர்களுக்கு அனுமதி கொடுக்கப்படும். இதற்கு மண்டல அளவில் உதவி வருவாய் அலுவலர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.

 

தாம்பரம் மேம்பாட்டு பணிகள் ஆய்வு

Print PDF

தினமலர்         01.11.2010

தாம்பரம் மேம்பாட்டு பணிகள் ஆய்வு

தாம்பரம் : தாம்பரம் நகராட்சிப் பகுதியில் நடக்கும், பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது, பாதாள சாக்கடை திட்டப் பணிகளை துவங்கும் முன், குறிப்பிட்ட இடத்தில் வீட்டு இணைப்பு, சாலை போன்ற அனைத்து பணிகளையும் முழுமையாக முடித்துவிட்டு அடுத்த இடத்தில் பணிகளை துவக்க வேண்டும்.குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

 

முறைகேடாக வீடு ஒதுக்கப்பட்ட பிரச்னை ஆதர்ஷ் கட்டிடத்துக்கு மின், குடிநீர் இணைப்பு துண்டிப்பு

Print PDF

தினகரன்                     01.11.2010

முறைகேடாக வீடு ஒதுக்கப்பட்ட பிரச்னை ஆதர்ஷ் கட்டிடத்துக்கு மின், குடிநீர் இணைப்பு துண்டிப்பு

கொலாபா, நவ. 1: சர்ச்சையில் சிக்கிய ஆதர்ஷ் கட்டிடத்துக்கு 24 மணி நேரத்திற் குள் மின் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று மாநகராட்சி மற்றும் பெஸ்ட் நோட்டீஸ் அனுப் பியது.

கார்கில் போர் வீரர்களுக்கு தென்மும்பை கொலாபாவில் குடியிருப்பு கட்ட இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த இடத்தில் ஆதர்ஷ் ஹவுசிங் சொசைட்டி என்ற பெயரில் குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டது. 6 மாடிகள் கட்ட மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் விதிமுறைகள் மீறப்பட்டு 31 மாடிகள் கட்டப்பட்டது.

மேலும் இந்த கட்டிடத்தில் அரசியல் தலைவர்கள், ஓய்வு பெற்ற ராணுவ முன்னாள் தளபதிகள், மாநில அரசு உயரதிகாரிகளுக்கு வீடுகள் முறைகேடாக ஒதுக்கப்பட்ட மோசடி சமீபத்தில் அம்பலமானது. முதல்வர் அசோக் சவானின் மாமியார் உள்பட 3 உறவினர்களுக்கும் இந்த கட்டிடத்தில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்னை தீவிரமானதை தொடர்ந்து முதல்வர் அசோக் சவானை டெல்லிக்கு வர காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டார். நேற்று முன்தினம் டெல்லி சென்ற சவான் சோனியா காந்தியிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

சவான் உறவினர்களுக்கு முறைகேடாக வீடுகள் ஒதுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி மற்றும் ஏ.கே.அந்தோணியை சோனியா காந்தி கேட்டு கொண்டார். இதன் பிறகே காங்கிரஸ் தலைமை அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கிறது.

இந்நிலையில், சர்ச்சையில் சிக்கியிருக்கும் ஆதர்ஷ் சொசைட்டிக்கு மின் மற்றும் குடிநீர் இணைப்பை துண் டிப்பதற்கான நோட்டீஸை மும்பை மாநகராட்சியின் குடிநீர் விநியோக பிரிவு மற்றும் மின் இணைப்பு வழங்கும் பெஸ்ட் நிறுவனம் சொசைட்டிக்கு அனுப் பியது.

இது பற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், 1396984945 24 மணி நேரத்திற்குள் குடிநீர் மற்றும் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என நோட்டீசில் எச்சரிக்கப் பட்டுள்ளது" என்றார்.

கட்டிடத்துக்கு வழங்கப்பட்ட குடியிருப்பு சான்றிதழை அசோக் சவான் உத்தரவின் பேரில் மும்பை பெருநகர மண்டல வளர்ச்சி ஆணையம் ரத்து செய்தது. இதை தொடர்ந்து குடிநீர் மற்றும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, ஆதர்ஷ் சொசைட்டி கட்டப்பட்டதில் கடலோர பாதுகாப்பு மண்டல விதிமுறைகள் மீறப்பட்டது தொடர்பாக விவாதிக்க வரும் 4ம் தேதி மகாராஷ்டிரா கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் கூடுகிறது.

இது தொடர்பாக ஆணையத்தின் செயலாளர் வல்சா நாயர் சிங் கூறுகையில்,"விதிமுறைகள் மீறல் தொடர்பாக விவாதித்து சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். முறையான அனுமதியை பெற ஆணையத்தை யாரும் அணுகவில்லை" என்றார்.

 


Page 332 of 506