Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் பசுமை திட்டம்! துர்நாற்றம் கட்டுப்படுத்த மரங்கள்

Print PDF
தினமலர்        28.11.2014

 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் பசுமை திட்டம்! துர்நாற்றம் கட்டுப்படுத்த மரங்கள்

கோவை : கோவை உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இரண்டு ஏக்கரில், மரம் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளதை போன்று, ஒண்டிப்புதுார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலும், துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் மரங்கள் வளர்க்கும் திட்டத்தை, மாநகராட்சி நிர்வாகம் துவங்கியுள்ளது.

கோவை மாநகராட்சியிலுள்ள பூங்கா இடங்கள் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. மொத்தமுள்ள பூங்கா இடங்களுக்கு ஏற்ப, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமும், குடியிருப்போர் நலச்சங்கம் மூலமும் மரம் வளர்க்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.அதேபோன்று, கோவை மாநகரத்திலுள்ள அனைத்து முக்கிய ரோடுகளின் ஓரத்திலும் மரங்கள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. தனியார் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பல அடுக்குமாடி கட்டடங்கள், தொழிற்சாலைகளில், திறந்தவெளி ஒதுக்கீட்டு இடங்களில் மரம் வளர்க்க வேண்டும். பல அடுக்குமாடி கட்டடங்கள், வணிக வளாகங்கள் கட்டட அனுமதி வழங்கும் போதே, மரக்கன்றுகளை நட்டிருக்க வேண்டும். கட்டாயம் மூன்று ஆண்டுகளுக்கு மரங்கள் வளர்க்க வேண்டும் என, மாமன்றத்தில் ஏற்கனவே தீர்மானங்கள் நிறைவேறப்பட்டது.

மாநகரத்தில் மரம் வளர்க்கும் திட்டம் கண்காணிக்கவும், ரோட்டோரத்திலும், பூங்கா இடத்தில் மரம் வளர்ப்பதையும் கண்காணிக்க, உதவி பொறியாளர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு இடத்தில், இரண்டு ஏக்கர் பரப்பில், மேட்டுப்பாளையத்திலுள்ள வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், ஆராய்ச்சி முறையில் மரம் வளர்க்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அங்கு, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரில் வேகமாக வளரும், மலை வேம்பு, கடம்பு, மூங்கில், நீர் மருது, அக்ரோ கார்பஸ் உள்ளிட்ட, 15 வகை மரங்கள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் துர்நாற்றம் வெளிப்படுவது தவிர்க்கப்படுவதுடன், மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். இதேபோன்று, வெள்ளலுார் குப்பைக் கிடங்கிலும் மரக்கன்று நட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒண்டிப்புதுார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், மரம் வளர்க்கும் திட்டம் நேற்று துவங்கப்பட்டுள்ளது. ஒண்டிப்புதுார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், 14 ஏக்கர் பரப்பில் உள்ளது. அங்கு, கழிவுநீர் செல்லும் பாதை, சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பகுதிகள் தவிர மீதமுள்ள காலி இடத்தில், துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் மரங்கள் (அரோமேட்டிக் ட்ரீ) வளர்க்கும் திட்டத்தில், மரக்கன்றுகள் நடப்பட்டன. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணி மேற்கொண்டுள்ள ஒப்பந்த நிறுவனம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது. மாநகராட்சி மேயர் ராஜ்குமார், கமிஷனர் விஜய கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் மரக்கன்றுகளை நட்டனர்.

மேயர் ராஜ்குமார் கூறுகையில், ''உக்கடம் கழிநீர் சுத்திகரிப்பு நிலையம், வெள்ளலுார் குப்பைக் கிடங்கில், பல ஆயிரக்கணக்கான மரங்களை வளர்க்க திட்டமிடப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டுள்ளன. ஒண்டிப்புதுார் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், 450 மரக்கன்றுகள் நட்டு, வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக யூகலிப்டஸ், மூங்கில், இலுப்பை, மகிழம், செந்துாரம், வாகை, நாவல், மகாகனி மரக்கன்றுகள் 50 நடப்பட்டுள்ளன. துர்நாற்றத்தை கட்டுப்படுத்தும் இவ்வகை மரங்களையே, மீதமுள்ள இடத்தில் வளர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒண்டிப்புதுாரில், தினமும் 60 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் மரம் வளர்க்கும் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும். இதனால், கோவையின் இயற்கை சூழல் பாதுகாக்கப்படும்,'' என்றார்.

 

பெ.நா.பாளையத்தில் பாலித்தீன் பொருள்கள் பறிமுதல்

Print PDF
தினமணி         28.11.2014

பெ.நா.பாளையத்தில் பாலித்தீன் பொருள்கள் பறிமுதல்

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களில் இருந்து வியாழக்கிழமை பாலித்தீன் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார், செயல் அலுவலர் துவாரகநாத் சிங் ஆகியோரின் உத்தரவின் பேரில், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் தலைமையில் மேற்பார்வையாளர் மகாதேவன், வரிவிதிப்பு அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் சொக்கலிங்கேஸ்வர் கோவில் வீதி, எல்.எம்.டபிள்யு சாலை, இந்திரா காந்தி வணிக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.இதில், கடைகளில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கேரிபேக்குகள், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பாலித்தீன் பொருள்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
 

பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்! நாமக்கல் நகராட்சி நிர்வாகம் அதிரடி "ஆக்க்ஷன்'

Print PDF
தினமணி      19.11.2014

பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்! நாமக்கல் நகராட்சி நிர்வாகம் அதிரடி "ஆக்க்ஷன்'

நாமக்கல் : பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு செய்துள்ள சிறு கடை மற்றும் தள்ளுவண்டிகளை, நகராட்சி நிர்வாகத்தினர் அதிரடியாக அகற்றினர்.

நாமக்கல் பஸ் ஸ்டாண்ட், நகரில் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு மப்சல் மற்றும் டவுன் பஸ்கள் நுழைந்து செல்கின்றன. இப்பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான, 150 கடைகள் ஏலம் விடப்பட்டு, அவற்றின் மூலம் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை வாடகை வசூல் செய்யப்பட்டு வருகிறது.அதன் மூலம் நகராட்சிக்கு கணிசமான வருவாய் வந்து கொண்டிருக்கிறது. கடை உரிமையாளர்கள், மூன்று ஆண்டுக்கு ஒரு முறை தங்களது கடையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். பஸ் ஸ்டாண்டுக்குள் சென்னை, மதுரை, கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, கரூர், நாகர்கோயில், திருச்செந்தூர், ஓசூர் உள்ளிட்ட மாவட்டங்கள், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் பஸ்கள் வந்தும், இங்கிருந்து சென்றும் வருகிறது.நகராட்சிக்கு சொந்தமான ஒரு சில கடைகள், தங்களது எல்லையை தாண்டி வரண்டாவை ஆக்கிரமிப்பு செய்து கடையை நடத்தி வருகின்றனர். அதேபோல், சிறு வியாபாரிகளும், நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து கடை விரித்துள்ளனர். மேலும், தள்ளுவண்டி கடைகள், ஆங்காங்கே நிறுத்தி பழ வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அங்குள்ள போர்டிக்கோவை கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் பயணிகள், பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். சில நேரங்களில், கைக்குழந்தையுடன் பெண்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் என பலரும், வெயிலில் நிற்கும் அவலம் ஏற்படுகிறது.அவ்வப்போது நகராட்சி சார்பில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதை தொடர்ந்து, ஒரு சில நாட்கள் மட்டுமே எந்தவித தொந்தரவும் இல்லாமல் மக்கள் பயணம் செய்வர். மீண்டும் தங்களது பழைய நிலையை தள்ளுவண்டி, தட்டுக்கூடை வியாபாரிகள் துவங்கி பயணிகளுக்கு தொல்லை கொடுக்க துவங்கி விடுகின்றனர்.இது குறித்து பல்வேறு புகார்கள், நகராட்சி நிர்வாகத்துக்கு சென்றது. அதை தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் அசோக்குமார் தலைமையில், சுகாதார அலுவலர் சண்முகவேல், ஆய்வாளர்கள் பேச்சுமுத்து, உதயகுமார் மற்றும் துப்புரவு பணியாளர்கள், நேற்று மாலை, பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அதிரடியாக அகற்றினர்.தள்ளுவண்டி, தட்டுக்கூடை, பழங்கள் உள்ளிட்டவற்றை நகராட்சி லாரியில் அள்ளி எடுத்துச் சென்றனர். பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதை தொடர்ந்து, ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இச்சம்பவம், நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 


Page 35 of 3988