Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

காய்ச்சல் விடுப்புமாணவர்களின் தகவலை மாநகராட்சிக்கு தெரிவிக்கவும்

Print PDF
தினமணி      10.10.2014

காய்ச்சல் விடுப்புமாணவர்களின் தகவலை மாநகராட்சிக்கு தெரிவிக்கவும்

காய்ச்சல் விடுப்பு எடுக்கும் மாணவர்கள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என ஆணையர் வே.ப. தண்டபாணி அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாநகராட்சியின் 65 வார்டுகளிலும் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநகரிலுள்ள பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் தங்கள் வளாகங்களில் கொசு உற்பத்தியாகும் பொருள்களை அழிக்க முன்முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன், மாணவர்கள் காய்ச்சல் என விடுப்பு எடுத்தால் அதுகுறித்த விவரங்களை உடனடியாக மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அந்த மாணவரை மாநகராட்சி டாக்டர்கள் நேரில் சந்தித்து ஆய்வு செய்து டெங்குவாக இருப்பின் சம்பந்தப்பட்ட வசிப்பிடங்களில் கொசு உற்பத்திக்கு சிறப்பு நடவடிக்கை எடுக்கவும் முடியும்.
 

டெங்கு பரவாமல் தடுக்க அக். 13 முதல் 16 வரை மெகா துப்புரவுப் பணி

Print PDF
தினமணி       10.10.2014

டெங்கு பரவாமல் தடுக்க அக். 13 முதல் 16 வரை மெகா துப்புரவுப் பணி

டெங்குக் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் வரும் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை மெகா துப்புரவுப் பணி (மாஸ் கிளீனிங்) மாவட்டம் முழுவதும் நடத்த வேண்டும் என ஆட்சியர் ஜெயசிறீ அறிவுரை வழங்கியுள்ளார்.

திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பது குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

மழைக்காலம் தொடங்கவுள்ளதால் அச்சமூட்டும் டெங்குக் காய்ச்சலைத் தடுக்க, அதனைப் பரப்பும் ஈடிஸ் கொசு வகையின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்தக் கொசு நல்ல தண்ணீரில்தான் வளரும். கழிவுநீரில் வளரும் கொசுக்கள் டெங்குவைப் பரப்புவதில்லை.

எனவே, பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களில் மழைநீர், நல்ல தண்ணீர் தேங்கும் டயர், பிளாஸ்டிக் டம்ளர், பூந்தொட்டி, ஆட்டுக்கல், தேங்காய் சிரட்டை, முட்டை ஓடு போன்றவற்றை கவனமாக அப்புறப்படுத்த வேண்டும்.

வீட்டில் ஓரிரு நாள்கள் வைத்திருந்து பயன்படுத்தும் பாத்திரங்கள், தொட்டிகளை பிளீச்சிங் பொடி போட்டு நன்றாக கழுவ வேண்டும். தொட்டிகளில் ஈடிஸ் கொசுக்களின் முட்டைகள் இருக்க வாய்ப்புள்ளது.

மேலும், அனைத்து மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள், தரைத்தள தொட்டிகளையும் சுத்தமாகக் கழுவ உத்தரவிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி முதல் குக்கிராமம் வரை மாவட்டம் முழுவதும் வரும் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை மெகா துப்புரவுப் பணி நடத்தப்படவுள்ளது. பொதுமக்களும் இந்தப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் ஜெயசிறீ.
 

குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து 1077-ல் 879 புகார்கள்

Print PDF
தினமணி        10.10.2014

குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து 1077-ல் 879 புகார்கள்

குடிநீர்த் தட்டுப்பாடு குறித்து புகார் தெரிவிக்க தொடங்கப்பட்ட கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மூலம் இதுவரை 879 புகார்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ஜெயசிறி முரளிதரன்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று, மேலும் அவர் பேசியது:

மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக 1077 என்ற தொலைபேசி எண் கடந்த மே 1-ம் தேதி முதல் தொடங்கப்பட்டு புகார்கள் பெறப்பட்டு வந்தன.

செப்டம்பர் மாதம் 25-ம் தேதி வரை மாநகராட்சிப் பகுதிகளில் 280, நகராட்சிப் பகுதிகளில் 93, பேரூராட்சிகளில் 46, ஊராட்சி ஒன்றியங்களில் 460 என 879 புகார்கள் பெறப்பட்டு, பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டன அனைத்து புகார்களின் மீதும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குடிநீர்த் தட்டுப்பாடு மற்றும் பருவமழை காலத்தில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும் இந்த தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றார் ஆட்சியர்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ராமசாமி உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
 


Page 43 of 3988