Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சென்னையில் 4 அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகங்கள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

Print PDF

 தி இந்து        22.09.2014 

சென்னையில் 4 அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகங்கள்: ஜெயலலிதா திறந்து வைத்தார்


சென்னை, திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை (கோஷா மருத்துவமனை) உள்ளிட்ட 4 அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை திறந்து வைத்தார். உணவு வகைகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில் அவற்றின் சுவையினை சோதித்து பார்த்தார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில்: "சென்னை, திருவல்லிக்கேணி, அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனைக்கு வந்து செல்லும் ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்கிடும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள "அம்மா உணவகத்தை" தமிழக முதல்வர் ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

மேலும், இந்த விழாவில் சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம், அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம், அரசு ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களையும் அவர் திறந்து வைத்தார்.

சென்னை மாநகரில் வாழும் ஏழை எளிய மக்கள், அன்றாட கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் என குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சியின் சார்பில் சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை மலிவு விலையில் வழங்கும் "அம்மா உணவகங்கள்" கடந்த 2013-ம் ஆண்டு முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டன.

அரசு பொது மருத்துவமனை வளாகங்களில் அம்மா உணவகம் திறக்கப்பட வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் முதற்கட்டமாக 20.11.2013 அன்று சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்திலும், இரண்டாம் கட்டமாக 21.2.2014 அன்று அரசு ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை வளாகங்களிலும் அம்மா உணவகங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

அப்போது பணியில் ஈடுபட்டிருந்த மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் இங்கு அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தில் வெளிநோயாளிகளும், உள்நோயாளிகளோடு உடனிருப்பவர்களும் உணவு வகைகளை உட்கொள்வதால் அவற்றை மிகுந்த கவனத்துடன் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயாரித்து வழங்க வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

இவ்வாறு ஏழை எளிய மக்களுக்கு மிகப்பெரும் பயனளிக்கும் அம்மா உணவகங்களின் சேவையை மேலும் விரிவுபடுத்தும் வகையில், திங்கள்கிழமையன்று 4 அரசு மருத்துவமனைகளில் "அம்மா உணவகத்தை" முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்து, பொது மக்களுக்கு உணவு வழங்கி விற்பனையைத் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி மேயர் சைதை சா. துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை அரசு மருத்துவமனைகளில் "அம்மா' உணவகங்கள்

Print PDF

தினமணி      22.09.2014

சென்னை அரசு மருத்துவமனைகளில் "அம்மா' உணவகங்கள்


சென்னையில் உள்ள 4 முக்கிய அரசு மருத்துவமனைகளில் "அம்மா' உணவகங்களை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை (செப்.22) தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் வார்டுக்கு ஒன்று என 200 அம்மா உணவகங்கள் உள்ளன.

மேலும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, எழும்பூர் தாய்-சேய் நல மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த உணவகங்களில் மலிவு விலையில் இட்லி, பொங்கல், சப்பாத்தி, சாம்பார் சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட உணவுகள் விற்கப்படுகின்றன. இந்த உணவகங்களுக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள பிற அரசு மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்களை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில்,திருவல்லிக்கேணி அரசு கஸ்தூர்பா காந்தி தாய் -சேய் நல மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை நேரடியாகத் தொடங்கி வைக்கிறார்.

மேலும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளின் வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள அம்மா உணவகங்களையும் முதல்வர் திறந்து வைக்கிறார்.

 

தில்லி இரவுக் குடில்களின் கழிப்பறை விவரம்:அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

Print PDF
தினமணி      19.09.2014

தில்லி இரவுக் குடில்களின் கழிப்பறை விவரம்:அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

தில்லியில் உள்ள இரவு நேரக் குடில்களுக்கான கழிப்பறைகளின் விவரங்கள் குறித்த அறிக்கையை வெள்ளிக்கிழமைக்குள் தாக்கல் செய்யுமாறு தில்லி பிரதேச அரசுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தில்லியில் உள்ள இரவு நேரக் குடில்களுக்குப் போதுமான கழிப்பறை வசதிகள் இல்லை என்று கூறி "ஷரி அதிகார் மஞ்ச் பகரோங்கே லியே' எனும் தன்னார் தொண்டு நிறுவனம் சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதில், "தில்லியில் வீடில்லாத மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள இரவுநேரக் குடில்களுக்கான நடமாடும் கழிப்பறைகள் பலவும் செயல்படவில்லை. இதனால், இரவுக் குடில்களில் தங்கியுள்ள மக்கள் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

அதேபோன்று, போதைக்கு அடிமையானோருக்கான சிகிச்சை மையங்கள் எண்ணிக்கை விஷயத்திலும் தவறான தகவல்களை தில்லி அரசு அளித்துள்ளது. 32 போதை சிகிச்சை மையங்களில் போதை மருந்து சிகிச்சைக்கான தேசிய மையம் (எய்ம்ஸ்), போதை சிகிச்சை மருந்தகம் (ஜிபி பந்த் மருத்துவமனை), தில்ஷாத் ஹார்டனில் உள்ள ஐ.எச்.பி.ஏ.எஸ். ஆகியவை மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. போதை சிகிச்சை மையங்கள் என்ற பெயரில் பல இருந்தாலும் அவற்றில் அதற்கான உரிய வசதிகள் ஏதும் இல்லை' என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு மீது வியாழக்கிழமை விசாரணை நடத்திய உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி. ரோஹிணி, நீதிபதி ஆர்.எஸ். எண்ட்லா ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த உத்தரவு:

தில்லியில் உள்ள இரவுநேரக் குடில்களுக்காக நிரந்தர, தாற்காலிக கழிப்பறைகள் எத்தனை உள்ளன. அவற்றில் எத்தனை சாக்கடையுடன் இணைக்கப்பட்டுள்ளன என்பது குறித்த விவர அறிக்கையை தில்லி நகர்ப்புற குடிசை மாற்று வாரியம் (டியுஎஸ்ஐபி) வெள்ளிக்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும். அதன்பிறகு இந்த விவகாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். அதேபோன்று, அனைத்து போதை சிகிச்சை மையங்களும் செயல்படுவதை உறுதிப்படுத்த தில்லி மாநில சட்டப் பணிகள் ஆணையம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
 


Page 49 of 3988