Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

'ரூ.29 கோடி பாக்கியை வசூலிங்க...'மாநகராட்சிக்கு அரசு உத்தரவு

Print PDF

 தினமலர்     17.09.2014

'ரூ.29 கோடி பாக்கியை வசூலிங்க...'மாநகராட்சிக்கு அரசு உத்தரவு

மதுரை: மதுரை மாநகராட்சியில் கிடப்பில் இருக்கும் ரூ.29 கோடியை உடனே வசூலிக்க அரசு தரப்பில் வலியுறுத்தியுள்ளதால் நேற்று கமிஷனர் கதிரவன் அவசர கூட்டம் நடத்தினார்.மாநகராட்சியில் கட்டுமானம் தொடர்பான அனுமதி மற்றும் ஒப்புதல் பெற வருவோர் 'உள்கட்டமைப்பு மேம்பாடு' கட்டணம் செலுத்த வேண்டியது கட்டாயம். இதுதொடர்பான அரசின் ஆணை நடைமுறையில் இருந்த போதும் மாநகராட்சியில் அதை கடந்த காலங்களில் பின்பற்றவில்லை.வணிக வளாகம், குடியிருப்புகளுக்கு என அளவைக்கு ஏற்பட கட்டணம் மாறுபடுகிறது. பெறப்படும் கட்டணம் மூலம் மாநகராட்சியின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்திக் கொள்ளலாம். தவிர அது தொடர்பான அறிக்கையை அரசுக்கும் சமர்ப்பிக்க வேண்டும்.அந்த வகையில் மதுரையில் ரூ.29 கோடி உட்கட்டமைப்பு மேம்பாடு கட்டணம் பாக்கி இருப்பது அரசுக்கு தெரியவந்துள்ளது. உடனே அவற்றை வசூலிக்க அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து கமிஷனர் கதிரவன் நேற்று நகரமைப்பு பிரிவினர் மற்றும் வருவாய் பிரிவினருடன் அவசர கூட்டம் நடத்தினார். பாக்கியுள்ள ரூ.29 கோடியை வசூலிக்க உத்தரவிட்ட கமிஷனர், அது தொடர்பான சம்மந்தப்பட்ட கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

 

சாலையோர நடைபாதையில் தூங்குவோர் 1,774 பேர்; பெண்கள் 689 பேர்; குழந்தைகள் 409 பேர்

Print PDF

தினமலர்     17.09.2014

சாலையோர நடைபாதையில் தூங்குவோர் 1,774 பேர்; பெண்கள் 689 பேர்; குழந்தைகள் 409 பேர்

சென்னை : சாலையோரம் படுத்து உறங்குவோர் குறித்து, மாநகராட்சி நடத்திய கணக்கெடுப்பில், பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது தெரியவந்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நகரங்களில், ஒரு லட்சம் பேருக்கு, ஒரு இரவு காப்பகம் வீதம் அமைக்கப்பட வேண்டும்.

கணக்கெடுப்பு : அதன்படி சென்னையில், 70 இரவு காப்பகங்கள் செயல்பட வேண்டும். தற்போது 28 காப்பகங்கள் உள்ளன. மீதி காப்பகங்களை திறக்க, தகுதியான தொண்டு நிறுவனங்களை மாநகராட்சி தேர்வு செய்து வருகிறது. இந்நிலையில், வீடற்றோர் குறித்து, மாநகராட்சி, புதிய கணக்கெடுப்பை நடத்தி வருகிறது. முதற்கட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன், ஒரேநாள் இரவில், தண்டையார்பேட்டை, ராயபுரம் மண்டலங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், ஒட்டுமொத்த மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதில், இரண்டு மண்டலங்களில், 1,774 பேர் சாலையோர நடைபாதையில், படுத்து உறங்குவது தெரியவந்தது. அவர்களில் 689 பெண்களும், 676 ஆண்களும், 409 குழந்தைகளும் அடக்கம். ஆண்கள், குழந்தைகளை விட பெண்கள், அதிகளவில் நடைபாதையில் உறங்குவது, மாநகராட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விழிப்புணர்வு இல்லை : இதில், ராயபுரம் மண்டலத்தில் மட்டும், 1,656 பேர் சாலையோரம் வசிக்கின்றனர். தண்டையார்பேட்டை மண்டலத்தில், 118 பேர் வசிக்கின்றனர்.அவர்களுக்கு, மாநகராட்சி நடத்தும், இரவு காப்பகம் குறித்து பெரிய அளவில் விழிப்புணர்வு இல்லை என்பதும், கணக்கெடுப்பில் தெரியவந்தது. வடகிழக்கு பருவமழைக்கு முன் முழு அளவில் அனைத்து மண்டலங்களிலும் கணக்கெடுப்பு பணியை முடித்துவிட்டு, அவர்களை இரவு காப்பகங்களில், பாதுகாப்பாக தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

90 சதவீதம் பேர் யார்?
இதற்கிடையே சாலையோரம் உறங்கும் ஆண்களில், 90 சதவீதம் பேர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.மது அருந்துவோருக்கு, இரவு காப்பகத்தில் தங்க அனுமதி கிடையாது என்பதால், இவர்களுக்கு மாநகராட்சியின் மது குடிப்போருக்கான மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

 

மேலப்பாளையம் மாட்டுச்சந்தையில் மாநகராட்சி ரூ.1.11 லட்சம் வசூல்

Print PDF
தினமணி       17.09.2014

மேலப்பாளையம் மாட்டுச்சந்தையில் மாநகராட்சி ரூ.1.11 லட்சம் வசூல்

திருநெல்வேலி மாநகராட்சி கையகப்படுத்திய மாட்டுச்சந்தை மூலம் ஒரு நாள் வசூலாக ரூ.1.16 லட்சம் கிடைத்துள்ளது.

மேலப்பாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாட்டுச்சந்தையின் கட்டணம் வசூலிக்கும் உரிமை தொடர்பாக தனியார் ஒப்பந்ததாரர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இதையடுத்து, கட்டண உரிமையை மாநகராட்சி ஏற்காமல் இருந்து வந்தது. இந்நிலையில், சந்தையை மாநகராட்சி கையகப்படுத்தக் கோரி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், உடனடியாக சந்தையை கடந்த 12ஆம் தேதி மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக, செவ்வாய்க்கிழமை மாநகராட்சி மூலம் சந்தையில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. திங்கள்கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை வரையிலான ஒரு நாளில் மட்டும் கட்டணம் மூலம் மாநகராட்சிக்கு ரூ.1.11 லட்சம் கிடைத்தது. 1,544 மாடுகள், 1,600 ஆடுகள், 146 கோழிகள் மற்றும் அவற்றை ஏற்றி வந்த வாகனங்கள் மூலம் இந்தக் கட்டண வசூல் கிடைத்துள்ளது.
 


Page 50 of 3988