Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

கேபிள் வயர் கட்டணம்: மாநகராட்சி உத்தரவை திரும்பப் பெற கோரிக்கை

Print PDF
தினமணி      17.09.2014

கேபிள் வயர் கட்டணம்: மாநகராட்சி உத்தரவை திரும்பப் பெற கோரிக்கை


கேபிள் வயருக்கு மாநகராட்சி கட்டணம் விதிப்பதைத் திரும்பப் பெற வேண்டும் என கேபிள் ஆபரேட்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

 இது தொடர்பான கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியனிடம் கேபிள் ஆபரேட்டர்கள் செவ்வாய்க்கிழமை அளித்தனர்.

 மதுரை மாநகராட்சிப் பகுதியில் கேபிள் வயர்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.21,749 செலுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையரால் கேபிள் ஆபரேட்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேபிள் வயர்களுக்கான கட்டணத்தை இதுவரை எம்.எஸ்.ஓ-க்கள் தான் செலுத்தி வந்தன. அதுவும் கிலோ மீட்டருக்கு ரூ.6500 மட்டுமே வசூலிக்கப்பட்டது.

 அரசு கேபிள் டிவி நிறுவனம் தான் இப்போது எம்எஸ்ஓ-வாக இருக்கிறது. இந்நிலையில், கேபிள் ஆபரேட்டர்கள் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே, இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றனர்.
 

மாநகராட்சியில் 3 ஆண்டுகளில் ரூ.310 கோடியில் அடிப்படை வசதிகள்

Print PDF
தினமணி      16.09.2014

மாநகராட்சியில் 3 ஆண்டுகளில் ரூ.310 கோடியில் அடிப்படை வசதிகள்

கோவை மாநகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.309.22 கோடிக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ப.ராஜ்குமாரை ஆதரித்து திங்கள்கிழமை நடந்த பிரசாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசியது:

கோவை மாநகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் சேதமடைந்த 483 கி.மீ. சாலைகளில் 320 கி.மீ. சாலைகள் ரூ.120.32 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் 96 கி.மீ. சாலைகள் ரூ.60 கோடியில் மேம்படுத்தப்படும்.

பில்லூர் இரண்டாவது குடிநீர்த் திட்டப் பணிகள் முடிவடைந்ததில் 11 லட்சம் மக்கள் பயன்பெறுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் ரூ.108.76 கோடி செலவில் 109 கி.மீ. சாலைகள் நெடுஞ்சாலைத் துறையால் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.21.60 கோடி செலவில் இரண்டு பாலப் பணிகள் முடிவடைந்துள்ளன. ரூ.20 கோடி மதிப்பில் கணபதி-டெக்ஸ்டூல் அருகில் ரயில்வே மேம்பாலப் பணி நடக்கிறது. இதுதவிர, நடப்பாண்டில் ரூ.18.76 கோடி மதிப்பில் 23.67 கி.மீ. சாலை மேம்பாட்டுப் பணியும், ரூ.1.95 கோடியில் ஒரு பாலப் பணியும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

ஆத்துப்பாலம் முதல்-உக்கடம் சந்திப்பு-ஒப்பணக்கார வீதி வரை மேம்பாலம் அமைக்கும் பணியும், கோவை மேற்கு வட்டச் சாலை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடுக்குமாடிக் கட்டடம், புற்றுநோய் சிகிச்சை மையம், அறுவை அரங்கிற்கு கட்டடம், நூலகத்திற்கு கட்டடம் ஆகியவற்றிற்காக ரூ.88.49 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சியில் உள்ள 12 நகர்ப்புற சுகாதார மையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டவும், 20 நகர்ப்புற சுகாதார மையங்களை மேம்படுத்தவும் ரூ.7.04 லட்சத்தில் பணிகள் நடந்து வருகின்றன. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தில் கோவை மாநகராட்சியைச் சேர்ந்த 13,179 கர்ப்பிணிகளுக்கு ரூ.13.17 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. 84,866 பேருக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.218.75 கோடி மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மாநகராட்சியில் 2 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும், 2 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மாநகராட்சிப் பள்ளிகளுக்கு ரூ.2 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விலையில்லா மடிக்கணினி, நான்கு இணை சீருடைகள், புத்தகப் பை, பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கணித உபகரணப் பெட்டி, வண்ணப் பென்சில்கள், காலணி, மிதிவண்டி மற்றும் சிறப்பு ஊக்கத் தொகை என ரூ.122.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கோவை நகராட்சிக்கு உள்பட்ட பள்ளிகளில் பயிலும் 1.82 லட்சம் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டுள்ளன.

கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பொறியியல் கல்லூரி மற்றும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்களின் பயிற்றுவிக்கும் திறனை மேம்படுத்த ஆசிரியர்களுக்கான பயிற்சி மையம் நிறுவப்பட உள்ளது.

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் சூரிய மின்சக்தி சாதனங்கள் ரூ.10 லட்சம் செலவில் நிறுவப்பட உள்ளன. இக் கல்லூரியில் உள்ள தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்த ரூ.16.16 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளில், ரூ.309.22 கோடி மதிப்பில் அடிப்படை வசதிகளான குடிநீர்த் திட்டப் பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள், தெரு விளக்குகள், கட்டடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட 1,490 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

கோவை மாநகரில் மட்டும் பழைய பேருந்துகளுக்கு பதிலாகவும், 41 புதிய வழித் தடங்களிலும், 73 புதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நடப்பு ஆண்டில் கோயம்புத்தூர் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 414 புதிய பேருந்துகளை வழங்க இருக்கிறோம்.

ஒண்டிப்புதூரில் ரூ.98 லட்சத்தில் புதிய கூடுதல் பணிமனை விரைவில் தொடங்கப்பட உள்ளது. கோவையில் பாதுகாக்கப்பட்ட குடிநீரை 24 மணி நேரமும் பெறும் வகையில், ரூ.451.66 கோடி மதிப்பிலான குடிநீர் விநியோகத் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் பகுதி மக்களுக்கு பில்லூர் மற்றும் ஆழியார் குடிநீர்த் திட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்க, ரூ.42.55 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன. டாக்டர் நஞ்சப்பா சாலை மற்றும் சின்னசாமி சாலை ஆகியவற்றில் மேம்பாலம், சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் ரூ.162 கோடியில் நடந்து வருகின்றன.

வெள்ளலூரில் ரூ.125 கோடியில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், ரூ.80 கோடியில் காந்திபுரம், ஆர்.எஸ்.புரம்-டி.பி.சாலை மற்றும் டவுன்ஹால் ஆகிய இடங்களில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ரூ.122.20 கோடி மதிப்பில் 2,632 வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் ரூ.10.97 கோடியில் 224 வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதுதவிர 2,912 வீடுகள் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் உப்பிலிபாளையத்தில் 272 வீடுகள் மற்றும் பொன்னையராஜபுரத்தில் 112 வீடுகள் என மொத்தம் 284 வீடுகள் ரூ.58.52 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றன. மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் 1,745 கி.மீ. நீளத்துக்கு மழைநீர் வடிகால் வசதி ரூ.1,550 கோடி செலவில் படிப்படியாக ஏற்படுத்தித் தரப்படும். மாநகராட்சியில் உள்ள 4.93 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில் 2.8 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மற்றும் மின் விசிறிகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்றார்.
 

தொழில் உரிமம் பெற மாநகராட்சி அறிவுறுத்தல்

Print PDF
தினமணி       16.09.2014

தொழில் உரிமம் பெற மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னையில் தொழில் புரிவோர் தொழில் உரிமம் பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

 இது குறித்து மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: சென்னை மாநகர முனிசிபல் சட்டம் 1919-ன்படி,

மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தொழில் நடத்த தொழில் உரிமம் பெறவேண்டும். மேலும் இந்த உரிமத்தை ஒவ்வொரு நிதியாண்டிலும் புதுப்பிக்க வேண்டும்.  எனவே சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தொழில்புரியும் வணிகர்கள் உடனடியாக தொழில் உரிமத்துக்கான விண்ணப்பத்தை மண்டல அலுவலகங்களில் அளித்து உரிமம் பெற வேண்டும். தொழில் உரிமம் பெறாமல் தொழில்புரிவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும் விவரங்களை 1913 என்ற இலவச எண்ணிலோ மாநகராட்சியின் இணையதளத்திலோ அறிந்துகொள்ளலாம்.
 


Page 51 of 3988