Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

திடக்கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணர்வு முகாம்

Print PDF
தினமலர்        08.09.2014

திடக்கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணர்வு முகாம்


பாபநாசம்: பாபநாசம் டவுன் பஞ்சாயத்தில், திடக்கழிவு மேலாண்மை திட்ட விழிப்புணர்வு பிரச்சார முகாம் நடந்தது. டவுன் பஞ்சாயத்து தலைவர் கருணாநிதி தலைமை வகித்து பேசியதாவது: டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களிலிருந்து திடக்கழிவுகள் அதிக அளவில் சேகராமாகிறது. வணிக வளாகங்கள், திருமண மண்டபங்களில் சேகரமாகும் குப்பைகளை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களே, மக்கும் குப்பைகள்- மக்காத குப்பைகள் என தரம்பிரித்து டவுன் பஞ்சாயத்து வாகனத்தில் ஒப்படைக்க வேண்டும். வணிக வளாக குப்பைகளை தெருக்களில் கொட்டினால், அபராதம் விதிக்கப்படும். இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என கேட்டுக் கொண்டார். முகாமில், செயல் அலுவலர் சுந்தரமூர்த்தி, துணைத் தலைவர் மணிகண்டன், ரிவர்சிட்டி ரோட்டரி தலைவர் உத்திராபதி, சுகதார ஆய்வாளர் செந்தில்குமரகுரு, வார்டு கவுன்சிலர்கள் மற்றும் டவுன் பஞ்சாயத்து பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

அக்டோபர் 1 முதல் சொத்து வரி சுய மதிப்பீடு செய்ய புதிய நடைமுறை அமல்!

Print PDF
தினமலர்      08.09.2014

அக்டோபர் 1 முதல் சொத்து வரி சுய மதிப்பீடு செய்ய புதிய நடைமுறை அமல்!

சென்னை : சென்னையில் கட்டட உரிமையாளர்களே, தங்கள் கட்டடத்தை அளந்து (சுய மதிப்பீடு), சொத்துவரி செலுத்தும் புதிய நடைமுறை, வரும், அக்.,1ம் தேதி முதல், அமலுக்கு வர உள்ளது. இதன் மூலம், வரி மதிப்பீட்டாளரை, கட்டட உரிமையாளர்கள் எதிர்பார்க்க வேண்டிய அவசியம், இனி இல்லை.

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களையும் சேர்த்து, தற்போது 12 லட்சம் பேர், சொத்துவரி செலுத்துகின்றனர். மேலும், ஒரு வாரத்திற்கு, 3,000 பேர் வீதம், புதிய சொத்துவரி விதிப்பிற்காக மாநகராட்சியிடம் விண்ணப்பிக்கின்றனர். மாநகராட்சிக்கு சொத்துவரி செலுத்தினால் தான், குடிநீர், கழிவுநீர் மற்றும் மின்இணைப்பு என, பல்வேறு அடிப்படை வசதிகளை பெற முடியும். சொத்துவரி ரசீது, முக்கிய ஆவணமாக கருதப்படுவதால், முறையாக வீடு கட்டி இருப்போர், சொத்துவரி விதிக்க, மாநகராட்சியை நாடுவது வழக்கம். ஆனால், இந்த கிராக்கியை அடிப்படையாக வைத்து, சொத்துவரி மதிப்பீடு செய்வதில், வீணாக தாமதிப்பதையும், கட்டட உரிமையாளர்களிடம் லஞ்சம் பெறுவதையும், வரி மதிப்பீட்டாளர்கள், வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

இதனால், பல கட்டடங்களுக்கு, உரிய நேரத்தில் சொத்துவரி விதிப்பு செய்ய முடியவில்லை. இதன் மூலம், கட்டட உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதுடன், மாநகராட்சிக்கு, வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வாக, கட்டட உரிமையாளர்களே, தங்கள் சொத்தை, சுயமதிப்பீடு செய்து வரி செலுத்தும் திட்டத்தை, மேயர், சைதை துரைசாமி அறிவித்தார்.இந்த புதிய நடைமுறையை, வரும் அக்.,1ம் தேதி முதல் அமல்படுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, மின் இணைப்பு, குடிநீர், கழிவுநீர் இணைப்புகளுக்காக, மாநகராட்சியிடம் சாலை வெட்டு அனுமதிபெற கட்டட உரிமையாளர்கள் விண்ணப்பிக்கும்போதே, தங்கள் கட்டடத்தை சுய மதிப்பீடு செய்து, சொத்து வரி செலுத்தலாம்.

இந்த சுய மதிப்பீடு, மாநகராட்சி அங்கீகாரம் பெற்ற 'லைசென்ஸ் சர்வேயரால்' செய்யப்பட்டிருக்க வேண்டும். அவர், சான்று அளித்திருக்க வேண்டும். இவ்வாறு, சுய மதிப்பீடு செய்து சொத்து வரி செலுத்திய பிறகு, அதற்கான ஆவணங்களை மாநகராட்சியிடம், வரி செலுத்தியோர் ஒப்படைத்தால் போதும்.அதன் பிறகே, மாநகராட்சி வரி மதிப்பீட்டாளர்கள், அந்த கட்டடத்தை ஆய்வு செய்து, மதிப்பீடு சரியாக உள்ளதா என, அறிக்கை தர முடியும். சரியாக இருந்தால், கட்டட உரிமையாளருக்கு, இறுதி ஆணை வழங்கப்படும்.சுய மதிப்பீட்டில் தவறு இருந்தால், திருத்தம் செய்து, கூடுதல் வரி விதிப்பு செய்து, அதை உரிமையாளர் செலுத்திய பின், இறுதி ஆணை வழங்கப்படும்.

இந்த புதிய நடைமுறையின் மூலம், கட்டட உரிமையாளர்கள், வரி மதிப்பீட்டாளருக்கு லஞ்சம் கொடுப்பது தவிர்க்கப்படுவதுடன், மாநகராட்சிக்கும் உரிய நேரத்தில் வருவாய் கிடைக்கும்.இந்த புதிய நடைமுறையை வரும், அக்., 1ம் தேதி முதல் அமல்படுத்தும் வகையில், இம்மாதம் நடைபெற உள்ள மாநகராட்சி கூட்டத்தில், அதற்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சுய மதிப்பீட்டின் மூலம், இணையதளம் மூலமும், மண்டல அலுவலகங்களில் உள்ள தகவல் மையங்கள் மூலமும், சொத்துவரி செலுத்த வசதி செய்யப்படும். இந்த நடைமுறை மூலம், அடுத்த இரண்டு ஆண்டுகளில், இரண்டு லட்சம் பேர், மாநகராட்சிக்கு கூடுதலாக சொத்து வரி செலுத்துவர்,'' என்றார்.
 

தினமணி 08.09.2014 டவுன் ஹால்' புனரமைப்புத் திட்டம் விரைவில் தொடக்கம் தில்லி மாநகராட்சியின் பழைய தலைமை அலுவலகமாக இருந்த, 150 ஆண்டு பழைமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க "டவுன் ஹால்' கட்டடம் ரூ. 50 கோடி செலவில் புனரமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்க

Print PDF
தினமணி        08.09.2014

டவுன் ஹால்' புனரமைப்புத் திட்டம் விரைவில் தொடக்கம்

தில்லி மாநகராட்சியின் பழைய தலைமை அலுவலகமாக இருந்த, 150 ஆண்டு பழைமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க "டவுன் ஹால்' கட்டடம் ரூ. 50 கோடி செலவில் புனரமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று வடக்கு தில்லி மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து வடக்கு தில்லி மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் மோகன் பரத்வாஜ் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

டவுன் ஹால் புனரமைப்புத் திட்டத்துக்கு ரூ. 50 கோடியை அளிக்க மத்திய சுற்றுலாத் துறை கடந்த பிப்ரவரி ஒப்புதல் அளித்தது. ஆனால், மத்தியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் காரணமாக இத் திட்டத்துக்கு தேவையான நிதியைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாநகராட்சியின் சார்பாக ஜூன் 30-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டிய இத் திட்டம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாராகவில்லை.

இதைத் தொடர்ந்து, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரை இந்த மாத இறுதிக்குள் சந்திக்க திட்டமிட்டுள்ளோம். அதன் பிறகு, டவுன் ஹால் புனரமைப்புப் திட்டப் பணிகள் விரைந்து செயல்படுத்தப்பட்டு, 2 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என்றார்.

டவுன் ஹால் கட்டடத்தில்தான் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. 1866-ஆம் ஆண்டில் இக் கட்டடத்தை தில்லி மாநகராட்சி வாங்கியது. டவுன் ஹால் புனரமைப்புத் திட்டத்தில் கூட்ட அரங்கு புதுப்பிக்கப்படும். தில்லி வரலாறும் பாரம்பரியமும் என்ற பெயரில் அங்கு அருங்காட்சியகம் நிறுவப்படும்.

டவுன் ஹால் குறித்த வரலாற்றுத் தகவல்களையும் கட்டடக் கலை குறித்த தகவல்களையும் ஒலி-ஒளி வடிவில் சுற்றுலாப் பயணிகள் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

பிரதான கட்டடத்தை ஒட்டி அமைந்துள்ள கட்டடம் பாரம்பரிய ஹோட்டலாக மாற்றப்படும். சாந்தினி செக் பகுதியில் 1860-ஆண்டு கால கட்டட வரலாற்றைத் தெரிந்து கொள்ளும் வகையில் "ஹெரிடேஜ் ஹோட்டல்' உருவாக்கப்படும்.

டவுன் ஹால் வளாகத்தில் ஆசாத் பூங்காவில் உள்ள காந்தி சிலை பகுதியில் பூமிக்கடியில் வாகன நிறுத்த மையம் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக காந்தி சிலை தாற்காலிமாக அகற்றப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படும். வாகன நிறுத்தும் மையம் உருவாக்கப்பட்டவுடன் மீண்டும் அதே இடத்தில் காந்தி சிலை வைக்கப்படும். இதே போல, டவுன் ஹால் வளாகத்தில் கைவினைப் பொருள்கள் பஜார், ஓவியக் கூடம், திறந்த வெளி அரங்கம், கண்காட்சி மையங்கள், சிற்ப பூங்கா உள்ளிட்டவற்றை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என வடக்கு தில்லி மாநகராட்சி அறிவித்துள்ளது.

லாரன்ஸ் இன்ஸ்டிடியூட் என்று அறியப்பட்ட டவுன் ஹால் தில்லி மாநகராட்சியின் தலைமை அலுவலகமாக இருந்தது. தில்லி மாநகராட்சி மூன்றாகப் பிரிக்கப்பட்ட பிறகு, வடக்கு தில்லி மாநகராட்சி, தெற்கு தில்லி மாநகராட்சி ஆகிய இரண்டும் மின்டோ சாலையில் புதிதாக கட்டப்பட்ட சிவிக் சென்டரில் செயல்படத் தொடங்கின. அதைத் தொடர்ந்து, டவுன் ஹால் பயன்பாடற்றுக் கிடந்தது. இந் நிலையில், நிலுவையில் உள்ள டவுன் ஹால் புனரமைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வடக்கு தில்லி மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
 


Page 58 of 3988