Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

அனைத்து குடிசைப் பகுதிகளிலும் கழிப்பறை வசதி

Print PDF

தினமணி      01.09.2014

அனைத்து குடிசைப் பகுதிகளிலும் கழிப்பறை வசதி

தில்லியின் அனைத்து குடிசைப் பகுதிகளிலும் சுகாதாரம், கழிப்பறை வசதிகள் உருவாக்கப்படும் என்று தில்லி நகர்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியம் (டி.யு.எஸ்.ஐ.பி.) அறிவித்துள்ளது.

இதுகுறித்து வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி அமர்நாத் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குடிசைப் பகுதிகளில் உள்ள பழைய கழிப்பறைகளுக்குப் பதிலாக, நவீன தொழில்நுட்பத்துடன் புதிய கழிப்பறைகளை நிகழாண்டில் ரூ.42 கோடி செலவில் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது தில்லியில் உள்ள 685 குடிசைப் பகுதிகளில் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் கழிப்பறை வசதியற்ற குடிசைப் பகுதிகளில் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இது தவிர, இடப் பற்றாக்குறையுள்ள 53 குடிசைப் பகுதிகளில் 67 நடமாடும் கழிப்பறைகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய கழிப்பறைகளை அமைப்பது தொடர்பான ஆலோசனைகளை தொண்டு நிறுவனங்கள், சுகாதார நிபுணர்கள் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழு, தில்லி நகர்ப்புற குடிசை மேம்பாட்டு வாரியத்துக்கு வழங்கும் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவையில் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட தில்லி பிரதேச பட்ஜெட்டின்போது, "தலைநகரில் உள்ள குடிசைப் பகுதிகளில் கழிப்பறை, சுகாதார வசதிகள் மேம்படுத்தப்படும்' என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Last Updated on Monday, 01 September 2014 09:31
 

கோவை மேயர் தேர்தல்: புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

Print PDF

தினமணி        01.09.2014

கோவை மேயர் தேர்தல்: புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

கோவை மாநகராட்சி மேயர் தேர்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் எஸ்.கணேஷ் வெளியிட்டுள்ள செய்தி:

கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள மேயர் பதவிக்கான தேர்தல் வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி நடக்க உள்ளது.

தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டியிருந்தால், மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இதற்காக மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் 0422 - 2302323 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

தேர்தல் அலுவலர்களுக்குப் பயிற்சி

கோவை மேயர் தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி சனிக்கிழமை நடந்தது.

மேயர் தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ராமகிருஷ்ணாபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சித்தாபுதூர் மேல்நிலைப் பள்ளி, ரங்கநாதபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம் மேற்கு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 இடங்களில் உதவித் தேர்தல் அலுவலர்கள் பயிற்சியளித்தனர்.

வாக்கு எண்ணுமிடத்தில் ஆய்வு

கோவை மாநகராட்சி மேயர் தேர்தலில் பதிவாகும் வாக்கு எண்ணுமிடத்தை மாநகராட்சி ஆணையர் எஸ்.கணேஷ் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

கோவை மேயர் தேர்தலில் பதிவாகும் வாக்குகள், கோவை, அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் எண்ணப்பட உள்ளன. வாக்கு எண்ணப்படும் இடத்தையும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறையையும் ஆணையர் எஸ்.கணேஷ் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகளுக்குக் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அவர் அறிவுறுத்தினார். துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Last Updated on Monday, 01 September 2014 07:39
 

திண்டுக்கல், தஞ்சாவூர் மாநகராட்சிகளில் ரூ.125 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்: ஜெயலலிதா

Print PDF

 தினமணி       27.08.2014

திண்டுக்கல், தஞ்சாவூர் மாநகராட்சிகளில் ரூ.125 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்: ஜெயலலிதா

திண்டுக்கல், தஞ்சாவூர் மாநகராட்சிகளில் ரூ.125 கோடியில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:

கடந்த மூன்று ஆண்டுகளில் தஞ்சாவூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.61.50 கோடியில் 454 வகையான பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. இதே போன்று, திண்டுக்கல் மாநகராட்சியில் ரூ.29.15 கோடியில் 119 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டுள்ளன.

இது தவிர, திண்டுக்கல் மாநகருக்கென இப்போது செயல்படுத்தப்பட்டு வரும் காமராஜர் சாகர் அணை குடிநீர்த் திட்டத்தைச் சீரமைக்கவும், திண்டுக்கல் மாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குத் தேவைப்படும் 26 எம்.எல்.டி., குடிநீரைப் பெறவும் ரூ.70.50 கோடியில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மாநகராட்சி மக்களுக்கு மேலும் பல்வேறு வகையான அடிப்படை வசதிகளை ரூ.82.34 கோடியில் ஏற்படுத்தித் தர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, தஞ்சாவூர் பகுதி மக்களுக்கு சீரான, போதுமான அளவு குடிநீர் வழங்கும் வகையில், அந்த மாநகராட்சியில் ரூ.45.69 கோடியில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

பாதாளச் சாக்கடைப் பணிகள், குடிநீர்ப் பணிகளால் சேதமடைந்த சாலைகள் ரூ.25 கோடியில் சீரமைக்கப்படும். தஞ்சாவூர் மாநகராட்சியின் அழகையும், பொலிவையும், தூய்மையையும் மேம்படுத்தும் வகையில், தஞ்சாவூர் மாநகரில் அமைந்துள்ள சிவகங்கை பூங்கா ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படும்.

பாதசாரிகள், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் சாலைகளில் பாதுகாப்பாக நடந்து செல்ல வசதியாக, தஞ்சாவூர் மாநகராட்சியில் ரூ.1 கோடியில் சாலைகளில் நடைபாதைகள் அமைக்கப்படும்.

தஞ்சாவூர் மாநகரத்தில் உள்ள சாலைகள் முழுவதும் சீரான, தரமான ஒளியை வழங்கும் நோக்கில் அங்கு ரூ.75 லட்சத்தில் தெரு விளக்குகள் அமைக்கப்படும். திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தடுக்கும் வகையில் ரூ.4.99 கோடியில் பொதுக் கழிப்பிடங்கள் கட்டப்படும்.

திண்டுக்கல் மாநகராட்சியில் பணிகள்: திண்டுக்கல் மாநகராட்சிக்கும் ரூ.42.85 கோடிக்கு புதிய பணிகள் மேற்கொள்ளப்படும். திண்டுக்கல் மாநகராட்சி எல்லை, தெருக்களில் ரூ.2.50 கோடியில் ஒளிரும் வழிகாட்டிப் பலகைகள், குறியீடுகள் அமைக்கப்படும். மேலும், ரூ.1.35 கோடியில் நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

திண்டுக்கல் மாநகராட்சிக்கென ரூ.5 கோடியில் புதிதாக அலுவலகக் கட்டடம் கட்டித் தரப்படும். மாநகரின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பேருந்து நிறுத்துமிடங்கள், நடைமேடைகள், கழிப்பறை வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்தி புதிய வசதிகள் ரூ.5 கோடியில் மேற்கொள்ளப்படும். திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.17.50 கோடியில் 65 கிலோமீட்டர் நீளத்துக்கு சாலை மேம்பாட்டுப் பணிகள் செய்யப்படும்.

சாலைகளில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில், திண்டுக்கல்லில் ரூ.10 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், ரூ.1.50 கோடியில் 10 இடங்களில் நவீன பொது கழிப்பறைகள் கட்டப்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

 

 


Page 60 of 3988