Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

எட்டுக்கு நான்கு! குளங்களுக்கு மாநகராட்சி 'மறுவாழ்வு'; ரூ.29.47 கோடியில் புனரமைக்க முடிவு

Print PDF

தினமலர்         26.08.2014  

எட்டுக்கு நான்கு! குளங்களுக்கு மாநகராட்சி 'மறுவாழ்வு'; ரூ.29.47 கோடியில் புனரமைக்க முடிவு 

கோவை : கோவை மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்ட எட்டு குளங்களில், முதல் கட்டமாக நான்கு குளங்களை, 29.47 கோடி ரூபாயில் புனரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகர எல்லைக்குள், பொதுப்பணித்துறை பராமரிப்பில் இருந்த, நரசம்பதி, கிருஷ்ணம்பதி, செல்வம்பதி, முத்தண்ணன், செல்வசிந்தாமணி, பெரியகுளம், வாலாங்குளம், சிங்காநல்லுார் என, எட்டு குளங்கள், மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டன.குளங்களில் இருக்கும் குடியிருப்பு ஆக்கிரமிப்புகளை அகற்றி, முட்புதர்களை அகற்றி, குளத்தை துார்வாரி, கரையை பலப்படுத்தி, கழிவுநீரை சுத்திகரித்து தேக்கவும், மழைக்காலங்களில் மழை நீரை முழுமையாக குளங்களில் சேமித்து, நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாப்பதற்கே, மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குளங்கள், 99 ஆண்டு குத்தகை அடிப்படையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆண்டு குத்தகையாக குளம் ஒன்றுக்கு, 100 ரூபாய் வீதமும் செலுத்தப்படுகிறது. ஜவஹர்லால்நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தில், மத்திய, மாநில அரசு மானியம் மற்றும் நிதியுதவி பெற்று குளங்களை புனரமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அரசு நிதியுதவி கிடைக்காததால், குளங்கள் புனரமைப்பு திட்டம், ஐந்து ஆண்டுகளாக இழுபறியில் உள்ளது.இந்நிலையில், கடந்த 2012 - 13ம் ஆண்டுக்கான பொதுப்பணித்துறை விலை அட்டவணைப்படி, குளம் புனரமைப்பு பணிக்கு 200 கோடி ரூபாயில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. தற்போது, 2013 - 14ம் ஆண்டு விலை அட்டவணைப்படி, 232 கோடி ரூபாய்க்கு திருத்திய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அரசின் நிதியுதவி பெறும் பொருட்டு, அரசு துறைகளுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்தாண்டு பொதுநல அமைப்புகள் முயற்சியால், பெரியகுளம் துார்வாரப்பட்டு, கரை பலப்படுத்தப்பட்டது. இந்தாண்டு, மாநகராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையால், தனியார் தொண்டு நிறுவனத்தினர் செல்வசிந்தாமணி குளத்தை துார்வாரும் முறையியில் ஈடுபட்டுள்ளனர். எந்த குளத்திலும், கழிவுநீரை சுத்திகரித்து தேக்க, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், குறைந்த பரப்பிலுள்ள குளங்களை, துார்வாரி புனரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நரசம்பதி குளத்தை 9.95 கோடி ரூபாயிலும், கிருஷ்ணம்பதி குளத்தை 3.325 கோடியிலும், செல்வம்பதி குளத்தை 7.7 கோடியிலும், குமாரசாமி (முத்தண்ணன்) குளத்தை 8.5 கோடி ரூபாயிலும் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, தமிழ்நாடு உறுதிபடுத்தப்பட்ட நகர்ப்புற மேம்பாட்டு திட்ட கடனாக 60 சதவீதமும், மானியமாக 30 சதவீதமும் பெற்றும், மிதமுள்ள 10 சதவீத தொகையை மாநகராட்சி நிர்வாகம் மூலம் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உறுதிபடுத்தப்பட்ட நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கடன் மற்றும் மானியம் பெற்று, முதல் கட்டமாக நான்கு குளங்களை துார்வாரி, கரையை பலப்படுத்தி, புனரமைக்க, அனுமதி வேண்டி அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம், நேற்று நடந்த மாமன்ற கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.ஏற்கனவே இரண்டு குளங்கள் சுத்தப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது நான்கு குளங்களை புனரமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வாலாங்குளம், சிங்காநல்லுார் குளங்களை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் துார்வார மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

குறிச்சி குளத்தை கவனிக்கணும்!
மாமன்ற கூட்டத்தில் பேசிய தெற்கு மண்டல தலைவர் பெருமாள்சாமி, ''குறிச்சி குளத்தின் கரையை பலப்படுத்தி, நடைபாதை மற்றும் பூங்கா அமைக்க, மாநகராட்சி பட்ஜெட்டில், ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. குறிச்சி குளத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார். விளக்கமளித்த மாநகராட்சி செயற்பொறியாளர் நடராஜ், ''இந்த திட்டம் பற்றி பொதுப்பணித்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தபின், திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
Last Updated on Tuesday, 26 August 2014 09:51
 

மாநகராட்சி லஞ்சப் புகார்களையும் எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்

Print PDF

தினமணி        26.08.2014

மாநகராட்சி லஞ்சப் புகார்களையும் எஸ்.எம்.எஸ். அனுப்பலாம் 

கோவை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை பொதுமக்கள் தெரிவிப்பதற்காக அறிவிக்கப்பட்ட மொபைல் எண்ணில் லஞ்சப் புகார்களையும் குறுஞ்செய்தியாக அனுப்பலாம் என்று ஆணையாளர் க.லதா தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி, விரிவாக்கப்பட்ட பகுதிகளையும் சேர்த்து மொத்தம் 100 வார்டுகளைக் கொண்டது. அனைத்துப் பகுதிகளும் 5 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மேயராகப் பதவி வகித்த செ.ம. வேலுசாமி, பொதுமக்கள் தங்கள் பகுதியில் நிலவும் அடிப்படை வசதிகள் தொடர்பாக மாநகராட்சியின் பிரதான அலுவலகத்துக்கோ அல்லது பிரிவு அலுவலகங்களுக்கோ நேரில் வராமல் குறுஞ்செய்தி மூலம் மொபைல் எண்ணுக்கு அனுப்பும் முறையைக் கொண்டு வந்தார்.

தங்கள் பகுதியில் நிலவும் பிரச்னைகளை மாநகராட்சி நிர்வாகத்தின் பார்வைக்குக் கொண்டு வந்தபின் அந்தப் பிரச்னைகள் சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலக அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படும். இதன் மூலம் அதிகாரிகள் அந்தக் குறையைக் களைய நடவடிக்கை எடுப்பர்.

இதுவரை சுமார் 14,500 குறுஞ்செய்திகளைப் பொதுமக்கள் அனுப்பியிருந்தனர். இவற்றில் பெரும்பாலான குறைகள் ஓரிரு நாள்களில் களையப்பட்டதாக அணையாளர் க.லதா தெரிவித்தார். மாநகராட்சியில் லஞ்சம் பெறுவது தொடர்பாக குறுஞ்செய்தி அனுப்பலாமா என்று ஆணையாளர் க.லதாவிடம் கேட்டதற்கு, மாநகராட்சியில் யாராவது லஞ்சம் கேட்டால் கண்டிப்பாக மாநகராட்சியில் தரப்பட்ட எண்ணுக்குக் குறுஞ்செய்தி அனுப்பலாம். ஆனால் அச்செய்தியின் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்த பின்தான், சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு தாமதம் ஆகும் என்றும் தெரிவித்தார்.

Last Updated on Tuesday, 26 August 2014 09:46
 

பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்க்க தீர்மானம்

Print PDF

தினமணி           26.08.2014

பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்க்க தீர்மானம்

உரிய காலத்தில் ஒப்பந்தப் பணிகளை முடிக்காத மாநகராட்சி ஒப்பந்ததாரரை கறுப்புப் பட்டியலில் சேர்க்க மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள வெள்ளியங்காடு 125 எம்.எல்.டி கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் மாநகராட்சி சார்பில் கடந்த 2009-10 திட்டத்தில் ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் மற்றும் காவலர் குடியிருப்பு கட்டும் பணிக்கு குறைந்த ஒப்பந்தப்புள்ளி கொடுத்த கோவை நிறுவனத்துக்குப் பணி உத்தரவு வழங்கப்பட்டது. 16-5-2011-இல் பணியை 6 மாதத்தில் முடிக்க உத்தரவு வழங்கப்பட்டது. இப்பணி நவ. 2011-இல் முடிந்திருக்க வேண்டும். ஆனால் சுற்றுச் சுவர் மொத்த நீளம் 1020 மீட்டரில் 650 மீட்டர் நீளம் மட்டும் கட்டப்பட்டுள்ளது.

காவலர் குடியிருப்பு தரைத்தளம், முதல் தளம் கான்கிரீட் கூரை மட்டும் வேயப்பட்டுள்ளது. பிற பணிகள் முடிவடையவில்லை. இப்பணியைச் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு அபராதம் விதித்து, அறிவிப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனாலும், பணியில் முன்னேற்றமில்லை.

கடந்த 15-12-2014-இல் இறுதி அறிவிப்பில் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பலனில்லை. இதே நிறுவனத்தில் வெள்ளியங்காடு சுத்திகரிப்பு நிலைய வளாகத்தினுள் பணியாளர் குடியிருப்புக் கட்டவும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஆனால் அப்பணியும் முடியவில்லை.

இதனால் மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஒப்பந்ததாரருக்கு கொடுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், அவருடைய பெயரை கறுப்புப் பட்டியலில் சேர்க்கவும் மீதித் தொகையை நடப்பு ஆண்டு விலை நிர்ணயப் பட்டியல்படி மதிப்பீடு செய்து பணியை மேற்கொள்ளவும் கோவை மாமன்றத்தில் திங்கள்கிழமை கொண்டு வரப்பட்ட அவசரக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனம் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

Last Updated on Tuesday, 26 August 2014 09:46
 


Page 61 of 3988