Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

முதல்வரின் அறிவிப்புக்கு தொழில் அமைப்புகள் வரவேற்பு

Print PDF

தினமணி           26.08.2014

முதல்வரின் அறிவிப்புக்கு தொழில் அமைப்புகள் வரவேற்பு

கோவை மாநகராட்சிப் பகுதிக்கு ரூ.237 கோடிக்குத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததை பல்வேறு தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன.

காட்மா சங்கம்: தமிழக முதல்வர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கோவை மாநகரில் நிலவும் போக்குவரத்துப் பிரச்னையைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், லாரி நிறுத்தம், அரை வட்டச் சாலை, அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்கள், மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

கட்டடக் கழிவுகளை மறுசுழற்சி செய்து தரும் திட்டம் கோவையில் முதல் முதலாகச் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். மேலும் மழை நீர் வடிகால் வசதியும் படிப்படியாக ஏற்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். இதை கோயமுத்தூர் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) சார்பில் வரவேற்கிறோம் என காட்மா தலைவர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை: தமிழக முதல்வர் கோவைக்கு அறிவித்த திட்டங்களை வரவேற்கிறோம். முதல்வர் அறிவித்த திட்டங்களின் மூலம் கோவை மாநகரின் வளர்ச்சி அதிகரிக்கும்.

அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்கள், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், லாரி நிறுத்தத்தை மாற்றுவது உள்ளிட்ட திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று இந்திய தொழில் வர்த்தக சபைத் தலைவர் டி.நந்தகுமார் தெரிவித்துள்ளார். முதல்வர் கோவைக்காக அறிவித்த பல்வேறு திட்டங்களை கோவை மாவட்ட சிறுதொழில் சங்கமான கொடிசியாவும் வரவேற்றுள்ளது.

Last Updated on Tuesday, 26 August 2014 09:47
 

மாநகராட்சியில் குடிநீர் இணைப்புக்கு ஆன்லைனில் 3,000 விண்ணப்பங்கள்

Print PDF

தினமணி         26.08.2014 

மாநகராட்சியில் குடிநீர் இணைப்புக்கு ஆன்லைனில் 3,000 விண்ணப்பங்கள் 

கோவை மாநகராட்சியில் குடிநீர் இணைப்புக்கு ஆன்லைனில் முதல் நாளில் சுமார் 3,000 விண்ணப்பங்கள் திங்கள்கிழமை பெறப்பட்டன.

கோவை மாநகராட்சிப் பகுதியில் கடந்த ஜனவரி முதல் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவில்லை. ஜனவரிக்கு மேல் வறட்சிக் காலம் என்பதாலும், இருக்கும் குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்ததாலும், புதிய குடிநீர் இணைப்புகள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில், கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி, பில்லூர் அணைகள் நிரம்பியதால், புதிய குடிநீர் இணைப்புகள் தர மாநகராட்சி நிர்வாகம் தீர்மானித்தது. இதையடுத்து, ஆன்லைனில் மட்டும் விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் சில பிரச்னைகள் இருந்ததால், ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்காகத் தனியாக மென்பொருள் உருவாக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு நிலையிலும் விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி செல்லும் வகையில் மென்பொருள் உருவாக்கப்பட்டிருந்தது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது, எந்தக் கட்டடத்துக்கு குடிநீர் இணைப்புத் தேவையோ அந்தக் கட்டடத்தின் வரிவிதிப்பு எண், தொலைபேசி அல்லது அலைபேசி எண், இமெயில் ஐடி, கட்ட வேண்டிய தொகை, செலுத்த வேண்டிய வரி ஆகியவை தொடர்பாக விண்ணப்பதாரருக்கு தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். இது தவிர, விண்ணப்பதாரருக்கு தபால் மூலமாகவும் தகவல் அளிக்கப்படும். 30 நாள்களுக்குள் பணி உத்தரவு வழங்கப்பட உள்ளதாகவும் மாநகராட்சி ஆணையாளர் க.லதா தெரிவித்தார்.

குடிநீர் இணைப்பு வழங்குவதில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிப்பதற்காகவே இம்முறை கையாளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

குடிநீர் இணைப்பு வழங்க திங்கள்கிழமை முதல் ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்பட்டது. முதல் நாளான திங்கள்கிழமை சுமார் 3000 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Last Updated on Tuesday, 26 August 2014 09:47
 

கண் தான விழிப்புணர்வு வாரம்: மாநகராட்சிப் பள்ளிகளில் கண் பரிசோதனை

Print PDF

தினமணி          26.08.2014

கண் தான விழிப்புணர்வு வாரம்: மாநகராட்சிப் பள்ளிகளில் கண் பரிசோதனை

கண் தான விழிப்புணர்வு வாரங்களை முன்னிட்டு சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்குக் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது என எழும்பூர் கண் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் நமீதா புவனேஸ்வரி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியது.

ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரையிலான இரண்டு வாரங்கள், கண் தான விழிப்புணர்வு வாரங்களாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதை முன்னிட்டு சென்னையிலுள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளில் விழிப்புணர்வு கைப்பிரதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

மேலும் செப்டம்பர் 2-ஆம் தேதி எழும்பூர் பாந்தியன் சாலையில் இருந்து மார்ஷல் சாலை வரை விழிப்புணர்வுப் பேரணி நடைபெறும்.

செப்டம்பர் 8-ஆம் தேதி கண் தானம் வழங்கிய குடும்பத்தினரும், தானம் பெற்ற குடும்பத்தினரும் கலந்து கொள்ளும் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

108 சேவை: இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 108 ஆம்புலன்ஸ் சேவையும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, இறந்துவிட்ட ஒருவருடைய கண்களை அவரது உறவினர்கள் தானமளிக்க விரும்பினால், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைக்கலாம்.

அழைத்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அதுபற்றி அருகிலுள்ள கண் வங்கிக்குத் தகவல் கொடுக்கப்படும். கண் வங்கியினர் சென்று குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்களைத் தானமாகப் பெற்றுக் கொள்வார்கள்.

இதற்காக தமிழகத்தில் உள்ள அரசு, தனியாரைச் சேர்ந்த 69 கண் வங்கிகளுடன் இணைந்து பணியாற்றுகிறோம் என 108 ஆம்புலன்ஸ் சேவையின் மண்டல மேலாளர் பிரபுதாஸ் தெரிவித்தார்.

Last Updated on Tuesday, 26 August 2014 09:48
 


Page 62 of 3988