Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

தூத்துக்குடி, திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.800 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

Print PDF

தினமணி      26.08.2014

தூத்துக்குடி, திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.800 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு 

தூத்துக்குடி, திருநெல்வேலி மாநகராட்சிகளில் ரூ.800 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கடந்த மூன்று ஆண்டுகளில் தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள், சாலைகள் என 445 அடிப்படை வசதிப் பணிகள் ரூ.413.36 கோடியில் மேற்கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாநகராட்சியில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் ரூ.282.44 கோடி மதிப்பில் குடிநீர் திட்டம் செயலாக்கத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

 பாதாள சாக்கடை திட்டம்: தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளான அத்திமரப்பட்டி, மீளவிட்டான், முத்தையாபுரம், சங்கரப்பேரி, தூத்துக்குடி புறநகர் ஆகிய ஐந்து பகுதிகளில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் ரூ.20 கோடியில் 29.74 கிலோமீட்டர் நீளத்துக்கு சாலைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

சுகாதாரக் கேடுகளை கட்டுப்படுத்தும் வகையிலும், நிலத்தடி நீர் மாசுபடுவதைத் தடுக்கும் வகையிலும், தூத்துக்குடி மாநகராட்சியின் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள், விடுபட்ட பகுதிகளில் ரூ.300 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டம் படிப்படியாகச் செயல்படுத்தப்படும்.

 திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகள்: திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.327.29 கோடியில் குடிநீர் திட்டப் பணிகள், சாலைகள் என 63 அடிப்படை வசதிப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு பெரும்பாலானப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாநகராட்சியின் நீர் ஆதாரம், குடிநீர் பகிர்மான கட்டமைப்பைப் மேம்படுத்தும் வகையில், ரூ.230 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் கோரப்படும்.

ரூ.490 கோடியில் திட்டம்: பாதாள சக்கடைத் திட்டம் இல்லாத மாநகராட்சிப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் தாமிரபரணி ஆறு மாசுபடுவதைத் தடுக்கும் வகையில், திருநெல்வேலி மாநகராட்சியின் விடுபட்ட பகுதிகளுக்கு ரூ.490 கோடியில் பாதாள சாக்கடைத் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும்.

 திருநெல்வேலி மாநகராட்சியின் 8 வார்டுகளில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகளால் சேதமடைந்த 61 கிலோமீட்டர் நீளச் சாலைகள் ரூ.35.20 கோடியில் மறுசீரமைக்கப்படும். மேலும், திருநெல்வேலி மாநகர மக்கள் பயன்பெறும் வகையில் திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் நவீனமயமாக்கப்படுவதுடன், அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைத்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Last Updated on Tuesday, 26 August 2014 09:47
 

தஞ்சாவூர், திண்டுக்கல்லை எழில்மிகு மாநகராட்சிகளாக்க தமிழக அரசு நடவடிக்கை

Print PDF

தினமணி       26.08.2014 

தஞ்சாவூர், திண்டுக்கல்லை எழில்மிகு மாநகராட்சிகளாக்க தமிழக அரசு நடவடிக்கை 

தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாநகராட்சிகளை எழில்மிகு மாநகராட்சிகளாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில்,

மக்கள்தொகை பெருக்கம், வளர்ந்து வரும் வணிகமயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல், அதிகரித்து வரும் வருவாய் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தமிழக அரசு சென்ற ஆண்டு தரம் உயர்த்தியது.

இது மட்டுமல்லாமல், கடந்த மூன்று ஆண்டுகளில் தஞ்சாவூர் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், 61 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான குடிநீர் திட்டப் பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், தெரு விளக்குகள் என 454 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதே போன்று, திண்டுக்கல் மக்களின் அடிப்படைத் தேவைகளை மேம்படுத்தும் வகையில், 29 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் திட்டப் பணிகள், சாலைகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், தெருவிளக்குகள் என 119 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு பெரும்பாலான பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது தவிர, திண்டுக்கல் மாநகருக்கென தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் காமராஐர் சாகர் அணை குடிநீர்த் திட்டத்தை புனரமைப்பு செய்யவும், திண்டுக்கல் மாநகர் மற்றும் காமராஜர் சாகர் திட்டத்தில் உள்ள வழியோர கிராமங்களுக்கு தேவைப்படும் 26 எம்.எல்.டி குடிநீரை பெறவும் 70 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் விரைவில் கோரப்படும்.

இதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மாநகராட்சி மக்களுக்கு மேலும் பல்வேறு அடிப்படை வசதிகளை 82 கோடியே 43 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தி தருவதென தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி,

1. தஞ்சாவூர் பகுதி மக்களுக்கு சீரான மற்றும் போதுமான அளவு குடிநீர் வழங்கும் வகையில், தஞ்சாவூர் மாநகராட்சியில் 45 கோடியே 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

2. பாதாள சாக்கடைப் பணிகள் மற்றும் குடிநீர் பணிகளால் சேதமடைந்த சாலைகள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

3. தஞ்சாவூர் மாநகராட்சியின் அழகையும், பொலிவையும், தூய்மையையும் மேம்படுத்தும் வகையில், தஞ்சாவூர் மாநகரில் அமைந்துள்ள சிவகங்கை பூங்கா 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

4. பாதசாரிகள், போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் சாலைகளில் பாதுகாப்பாக நடந்து செல்ல ஏதுவாக, தஞ்சாவூர் மாநகராட்சியில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலைகளில் நடைபாதைகள் அமைக்கப்படும்.

5. தஞ்சாவூர் மாநகரத்தில் உள்ள சாலைகள் முழுவதிலும் சீரான மற்றும் தரமான ஒளியை வழங்கும் நோக்கில், தஞ்சாவூர் மாநகராட்சியில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெரு விளக்குகள் அமைக்கப்படும்.

6. திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை தவிர்க்க, 4 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பிடங்கள் கட்டப்படும்.

இதேபோன்று, திண்டுக்கல் மாநகராட்சி மக்களுக்கும் 42 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கீழ்க்காணும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இதன்படி,

1. பொதுமக்களும், நகரங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளும் சாலைகளையும், சுற்றுலா இடங்களையும் எளிதில் அறிந்து கொள்ள ஏதுவாக, திண்டுக்கல் மாநகராட்சி எல்லை மற்றும் தெருக்களில் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவினத்தில் ஒளிரும் வழிகாட்டி பலகைகள் மற்றும் குறியீடுகள் அமைக்கப்படும்.

2. மழை நீர் சேகரிப்பு திட்டத்தை மேலும் மேம்படுத்திடும் வகையில், திண்டுக்கல் மாநகராட்சியில் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டு, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

3. திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள், மாநகராட்சி அலுவலர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் தேவையான வசதிகளை செய்து தரப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், திண்டுக்கல் மாநகராட்சிக்கென 5 கோடி ரூபாய் செலவில் புதிய அலுவலகக் கட்டடம் கட்டித் தரப்படும்.

4. திண்டுக்கல் மாநகரின் வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு, பேருந்து நிறுத்துமிடங்கள், நடைமேடைகள், கழிப்பறை வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்தி, உணவகம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தும் வகையில், 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலைய மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

5. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் சாலைகளை அமைத்துத் தரவும், மேம்படுத்திடவும் ஏதுவாக திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் 17 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 65 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

6. சாலைகளில் மழை நீர் தேங்குவதை தடுக்கும் வகையில், திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதிகளில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

7. திறந்ததவெளியில் மலம் கழிப்பதை தடுத்து, சுகாதாரமான சுற்றுச்சுழலை உருவாக்கும் வகையில், திண்டுக்கல் மாநகராட்சியில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 இடங்களில் நவீன பொது கழிப்பறைகள் அமைக்கப்படும்.

இந்த நடவடிக்கைகள் தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி எழில்மிகு மாநகராட்சிகளாக உருவாக வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

Last Updated on Tuesday, 26 August 2014 09:47
 

‘மெட்ராஸ் 375 ஆனாலும் நாட் அவுட்’- பாடல் ஆல்பம்: முருகப்பா குழுமம் மற்றும் 'தி இந்து' நாளிதழ் வெளியீடு

Print PDF

 தி இந்து     19.08.2014 

‘மெட்ராஸ் 375 ஆனாலும் நாட் அவுட்’- பாடல் ஆல்பம்: முருகப்பா குழுமம் மற்றும் 'தி இந்து' நாளிதழ் வெளியீடு

சென்னை மாநகரம் வரும் 22-ம் தேதி தன்னுடைய 375 ஆண்டினை கொண்டாட உள்ளதை முன்னிட்டு ' மெட்ராஸ் 375 ஆனாலும் நாட் அவுட் ' என்ற பாடல் ஆல்பத்தை முருகப்பா குழுமம் மற்றும் ‘தி இந்து’ நாளிதழ் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளன.

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முருகப்பா குழுமம் மற்றும் ‘தி இந்து’ நாளிதழ் இணைந்து 'தி மெட்ராஸ் சாங்' என்ற பாடல் ஆல்பத்தை திங்கள்கிழமை வெளியிட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முருகப்பா குழுமத்தின் இயக்குனர் எம்.எம். முருகப்பன், ‘தி இந்து’ நாளிதழ் சார்பாக கஸ்தூரி அண்ட் சன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் லோச்சன், ‘தி மெட்ராஸ்’ பாடல் ஆல்பத்தின் இயக்குநர் விஜய் பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எம். எம். முருகப்பன் பேசுகை யில், '' சென்னை என்பது பல்வேறு தரப்பு மக்கள் வாழும் காஸ்மோ பாலிட்டன் நகரம். நாட்டின் முன்னணி நிறுவனங்கள் பல சென்னையில்தான் தொடங்கப் பட்டன.

சென்னையின் சிறப்பை விளக்கும் ‘தி மெட்ராஸ் சாங்’ என்ற பாடலுக்காக செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், கர்நாடக இசை பாடகி சுதா ரகுநாதன், இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன், கலாஷேத்ரா பரதநாட்டிய மையத்தின் தலைவர் பிரியதர்ஷினி கோவிந்த் உள்ளிட்டோர் ஆல்பத் துக்கு பங்களிப்பு செய்துள்ளனர். அவர்களுக்கு மிக்க நன்றி.

கஸ்தூரி அண்ட் சன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் லோச்சன் கூறுகையில், ‘‘இந்த பாடல் ஆல்பத்தின் மூலமாக மெட்ராஸ் 375 வது ஆண்டை 'தி இந்து' இணைந்து கொண்டாடுவதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்த பாடல் மூலம் மெட்ராஸ் நகரின் அற்புதமான விஷயங்களை அறிந்து கொள்ள முடியும்'' என்றார்.

‘தி மெட்ராஸ் சாங்’ பாடல் ஆல்பம் சுமார் நான்கரை நிமிடங் கள் ஓடுகிறது. பாடலின் வரிகள் 'மெட்ராஸ் 375 ஆனாலும் நாட் அவுட்' ஆகாமல் உள்ளது என தொடங்குகிறது.

இந்த பாடல் 9 நாட்கள் படம்பிடிக்கப்பட்டுள்ளது. பாடலின் கருவாக வெளி மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் செல்லும் விமானத்தின் புறப்பாடு நேரம் மாற்றப்படுவதால் சென்னையில் மூன்று நாட்கள் இருக்க வேண்டிய சூழ்நிலையில் எடுக்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்களில் அந்த பெண்ணுக்கு சென்னை நகரம் எந்தளவிற்கு பிடித்து போகிறது என்பதை காட்டும் விதமாக பாடல் எடுக்கப்பட்டுள்ளது.

பாடல் வரிகள் இன்றைய தலைமுறையினர் பயன்படுத்தும் ஆங்கிலம், தமிழ் கலப்பில் உள்ளது. சென்னை என்றாலே நினைவுக்கு வரும் இடங்களான தி. நகர், திருவல்லிக்கேணி, மெரினா கடற்கரை, கோவில், ரயில் நிலையம் போன்ற இடங்களில் பாடலின் காட்சிகள் அமைந்துள்ளன.

 


Page 63 of 3988