Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

உள்ளாட்சிகளில் காலி இடங்களுக்கு தேர்தல்; மாநில தேர்தல் கமிஷன் 'அலர்ட்'

Print PDF

தினமலர்      19.08.2014

உள்ளாட்சிகளில் காலி இடங்களுக்கு தேர்தல்; மாநில தேர்தல் கமிஷன் 'அலர்ட்'

கோவை : தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள பதவியிடங்களை இடைத்தேர்தல் நடத்தி நிரப்ப, தேர்தல் பணிகளை, மாநில தேர்தல் கமிஷன் முடுக்கி விட்டுள்ளது.

தமிழகத்தில், உள்ளாட்சிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதவியிடங்களும் காலியாகவுள்ளன. காலி பதவியிடங்களை நிரப்புவதற்கு, கடந்த 5ம் தேதி, மாநில தேர்தல் கமிஷன் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டது. சட்டசபை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தநிலையில், தேர்தல் அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வந்ததால், அரசியல் கட்சிகள் அதிருப்தி அடைந்தன.இதையடுத்து, தேர்தல் கமிஷன் அதிகாரிகள், மாநில அரசுடன் ஆலோசனை செய்து, இடைத்தேர்தல் அறிவிப்பை ரத்து செய்தனர். மேலும், மே மாதம் 27 ம் தேதி, கோவை மாநகராட்சி மேயர் பதவியிடம் காலியானதாலும், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நிறைவடையாததாலும், கோவை மாநகராட்சிக்கு தேர்தல் அறிவிப்பு செய்யவில்லை.

கோவை மாநகராட்சியில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென, தேர்த்ல கமிஷன் உத்தரவிட்டது. கடந்த லோக்சபா தேர்தல் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கும் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. கோவை மாநகரட்சிக்கான வாக்காளர் பட்டியல் கடந்த, 14ம் தேதி வெளியிடப்பட்டது.உள்ளாட்சிகளில் காலி பதவியிடங்களை நிரப்புவதற்கான, இடைத்தேர்தல் குறித்து, மாவட்ட கலெக்டர்கள், உள்ளாட்சித்துறை அதிகாரிகளிடம், மாநில தேர்தல் கமிஷன் நேற்று 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் ஆலோசனை நடத்தியது.

மாவட்ட கலெக்டர் அலுலகத்தில் உள்ள வீடியோ கான்பரன்ஸ் அறையில், நேற்று காலை மற்றும் மதியம் என, இரண்டு கட்டமாக உள்ளாட்சிகளில் இடைத்தேர்தல் நடத்தவது குறித்தும், தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.ஓட்டுச்சாவடி அமைப்பது, ஓட்டுப்பதிவுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தயார் படுத்துவது, பூத் சிலிப் அச்சிடுவது, ஓட்டுப்பதிவுக்கான உபகரணங்களை தயார் செய்வது போன்ற பணிகளை மாநில தேர்தல் கமிஷன் முடுக்கி விட்டுள்ளது.சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தல் கமிஷனும் பணிகளை வேகப்படுத்தி, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளை 'அலர்ட்' செய்துள்ளதால், உள்ளாட்சிகளில் காலி பதவியிடங்களை நிரப்புவதற்கான, இடைத்தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும், வெளியாகலாம், என, எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.பி., தேர்தலுக்கு சமம்!
கோவை மாநகராட்சி கமிஷனர் லதா கூறுகையில், ''கோவை மாநகராட்சியில், கடந்த, 2011 உள்ளாட்சி தேர்தலின் போது, 10 லட்சத்து 45 ஆயிரத்து 356 வாக்காளர்கள் இருந்தனர்; 1,101 ஓட்டுச்சாவடிகள் இருந்தன. லோக்சபா தேர்தல் வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், மாநகராட்சிக்கு புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2011 தேர்தலுடன் ஒப்பிடும் போது, இரண்டு லட்சத்து 45 ஆயிரத்து 296 வாக்காளர்கள் அதிகரித்து, மொத்தம் 12 லட்சத்து 90 ஆயிரத்து 652 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் 1,600 பேருக்கு மேல் இருந்தால், அந்த ஓட்டுச்சாவடிகள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. இதனால், 127 ஓட்டுச்சாவடிகள் அதிகரித்து, 1,228 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. கோவை மாநகராட்சியில், கிணத்துக்கடவு, தொண்டாமுத்துார், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லுார் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. கோவை மேயருக்கு தேர்தல் நடத்துவது, எம்.பி., தேர்தலுக்கு சமம்,'' என்றார்.

 

இறைச்சி அறுக்கும் கூடங்களை கண்காணிக்க குழு! நகராட்சி நிர்வாகக் கூடுதல் இயக்குனர் உத்தரவு

Print PDF

 தினமலர்      19.08.2014

இறைச்சி அறுக்கும் கூடங்களை கண்காணிக்க குழு! நகராட்சி நிர்வாகக் கூடுதல் இயக்குனர் உத்தரவு

 பதிவு செய்த நாள்

19 ஆக
2014
02:54

கடலூர் : இறைச்சி அறுக்கும் கூடங்களில் சுகாதாரம் மற்றும் பிராணிகள் வதைக்கப்படுவதைத் தவிர்த்திட நகராட்சி அளவில் கண்காணிப்புக் குழு அமைக்க நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் இறைச்சிக் கூடங்கள் தனியாக இயங்கி வருகிறது. இங்கு அறுக்கப்படும் கால்நடைகள், சுகாதாரத்துறை ஆய்வாளரின் ஆய்விற்கு பிறகே அறுத்து முத்திரையிட்டு கறி விற்பனை செய்ய வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு வரை நடைமுறையில் இருந்த இத்திட்டம் காலப்போக்கில் கைவிடப்பட்டது.இதனால், ஆடு, மாடுகள் பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும் சுகாதாரமற்ற இடங்களில் அறுக்கப்பட்டு அதே பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது.பல நேரங்களில், இறந்த மற்றும் நோய்வாய்ப்பட்ட கால்நடைகளை அறுத்து கறியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை உண்போர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.இவை அனைத்திற்கும் மேலாக, இறைச்சிக்காக கொண்டுவரப்படும் கால்நடைகள் சுகாதாரமற்ற இடங்களில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தப்பட்டு வருகிறது.இதனை தவிர்த்திடவும், கால்நடைகளை சுகாதாரமான இடங்களில் அறுத்திடவும், இறைச்சிக்குக் கொண்டு வரப்படும் கால்நடைகள் வதைப்பதை முறைப்படுத்தக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இறைச்சிக் கூடங்களில் 50 முதல் 100 கால்நடைகளை அறுத்திட 2,400 சதுர அடி இடம், 101 முதல் 200 கால்நடைகளுக்கு 4,800 சதுர அடி, 201 முதல் 400 கால்நடைகளுக்கு 9 கிரவுண்ட், 401 முதல் 600 கால்நடைகளுக்கு ஒரு ஏக்கர், 600க்கு மேற்பட்ட கால்நடைகள் அறுத்திட 2 ஏக்கர் பரப்பளவு இட வசதி இருக்க வேண்டும்.மேலும், அறுவைக் கூடம் மற்றும் இறைச்சி விற்பனைக் கூடம் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் பராமரித்திட வேண்டும். இதனைக் கண்காணித்திட மாநில மற்றும் மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழு அமைக்க உத்தரவிட்டனர். அதன்பேரில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் தமிழகத்தில் தலைமைச் செயலர் தலைமையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, சுகாதாரம், உணவு பாதுகாப்புத் துறை உள்ளிட்ட 21 துறை அதிகாரிகளை கொண்டு மாநில அளவில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஓய்வு பெற்ற நீதிபதி சோலைமலை உள்ளார்.

இக்குழு கடந்தாண்டு நவம்பர் 22ம் தேதி மற்றும் கடந்த ஜூன் 17ம் தேதிகளில் கூடி, மாவட்ட அளவிலும், மாநகராட்சி மற்றும் நகராட்சி அளவில் அந்தந்த பகுதி அதிகாரிகளைக் கொண்டு கண்காணிப்புக் குழு அமைத்து இறைச்சிக் கூடங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.அதன்பேரில், மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையிலும், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் ஆணையர்கள் தலைமையில் குழு அமைத்து, இறைச்சிக் கூடங்கள் மற்றும் விற்பனை நிலையங்களை கண்காணித்து மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்திட, நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து நகராட்சிகளிலும் விரைவில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட உள்ளது.

 

மாநகராட்சி மகப்பேறு மையங்களில் பிரசவ எண்ணிக்கை இரட்டிப்பு!

Print PDF

 தினமலர்     19.08.2014

 மாநகராட்சி மகப்பேறு மையங்களில் பிரசவ எண்ணிக்கை இரட்டிப்பு!

கோவை : கோவை மாநகராட்சி மகப்பேறு மையங்களில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, பிரசவ எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.

கோவை மாநகராட்சியில், 20 மகப்பேறு மையங்களில், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், சிகிச்சை பெருகின்றனர். கடந்தாண்டு, ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை பெற்றாலும், 1,136 சுகப்பிரசவங்கள் மட்டுமே நடந்தன.மாநகராட்சி மகப்பேறு மையத்திற்கு கர்ப்பகால தொடர் சிகிச்சைக்கு வரும் பெண்கள், 'சிசேரியன்' வசதி இல்லாததால், பிரசவத்துக்கு அரசு அல்லது தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அதனால், சீத்தாலட்சுமி மகப்பேறு மையத்தில், 'சிசேரியன்' அறுவை சிகிச்சை வசதி ஏற்படுத்தி பிரசவம் பார்க்கப்படுகிறது.

மாநகராட்சி சுகாதாரப்பிரிவு மூலம் ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு நடவடிக்கைகளால், கடந்த ஜன., மாதம் முதல் பிரசவ எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தற்போது, சிசேரியன் பிரிவும் துவங்கப்பட்டுள்ளதால், பிரசவ எண்ணிக்கை மேலும், 30 சதவீதம் உயரும் என, அதிகாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக, பிரசவ எண்ணிக்கை இரட்டிபாகியுள்ளது.மகப்பேறு மையங்களில், ஜனவரியில் ௧௫௪, பிப்ரவரியில் 147, மார்ச்சில் 177, ஏப்ரலில் 182, மே மாதம் 200, ஜூன் மாதம் 222, ஜூலையில் 243, ஆகஸ்ட்டில் கடந்த 14ம் தேதி வரை 110 பிரசவங்கள் நடந்துள்ளன. மகப்பேறு மையங்களில் இந்தாண்டு இதுவரை 1,435 குழந்தைகள் பிறந்துள்ளன. கடந்த ஆண்டு குழந்தை பிறப்புடன் ஒப்பிடும் போது, இரட்டிப்பு எண்ணிக்கை என்பதால், மாநகராட்சி அதிகாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். மீதமுள்ள நான்கு மாதங்களிலும், குழந்தை பிறப்பு எண்ணிக்கை குறையாமல், சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் அருணா கூறுகையில், ''மகப்பேறு மையத்தில் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு, பிரசவத்திற்கு முன்பாக முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு உதவித்தொகையாக நான்காயிரம் ரூபாயும், குழந்தை பிறந்ததும் இரண்டாம் கட்ட நிதியுதவியாக நான்காயிரமும், குழந்தைக்கு முத்தடுப்பு ஊசி போட்டு முடித்ததும் மூன்றாம் கட்டமாக நான்காயிரமும் நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும், ஒரு பெண்ணுக்கு இரண்டு குழந்தைகளுக்கு தலா 600 ரூபாய்க்கு ஜனனிசுரக்ஷா யோஜனா திட்டத்தில் டெபாசிட் செய்யப்படுகிறது. சுகாதாரம், அடிப்படை வசதிகள், மருத்துவ மேம்பாடுகளை இதேபோன்று தொடர்ந்து கடைபிடிக்கவும், பிரசவ எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார்.

'சிறப்பு மருத்துவ கவனிப்பு' : கமிஷனர் லதா கூறுகையில், ''மகப்பேறு மையங்களில் கடந்த ஆண்டு சராசரியாக 79 குழந்தைகள் பிறந்தன. இந்தாண்டு ஜூலை மாதம் மட்டும் 243 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்தாண்டு குழந்தை பிறப்பு சதவீதம் இரண்டு மடங்கு அளவுக்கு மேல் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அரசு நிதியுதவி, மருத்துவ உதவிகள், உதவி பொருட்கள், சத்தான உணவு, ஒவ்வொரு தாய்மாருக்கும் சிறப்பு மருத்துவ கவனிப்பு உறுதியாக கிடைப்பதால், மகப்பேறு மையங்களில் பிரசவ எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாம்'' என்றார்.

 


Page 64 of 3988