Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

கட்டடக்கழிவு பிரச்னைக்கு விமோசனம்! ரூ.12 கோடியில் புது திட்டம்

Print PDF

 தினமலர்        19.08.2014

 கட்டடக்கழிவு பிரச்னைக்கு விமோசனம்! ரூ.12 கோடியில் புது திட்டம்

பதிவு செய்த நாள்

18 ஆக
2014
23:51
கோவை : கோவையில் குளக்கரைகளிலும், ரோட்டோரங்களிலும், கட்டடக் கழிவு மண் கொட்டப்படுகிறது. நீண்ட காலமாக நிலவும் இந்த பிரச்னைக்கு தீர்வு காண, 12 கோடி ரூபாயில், கட்டடக் கழிவில் மாற்றுப் பொருள் உற்பத்தி திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கி, நிதி ஒதுக்கியுள்ளது.

கோவையில் பழைய கட்டடங்களை இடித்து புதுப்பிக்கும் பணிகளும், புதிதாக கட்டடம் கட்டும் பணிகளும் அதிகளவில் நடக்கிறது. இதனால், ஏற்படும் கட்டடக் கழிவை இரவு நேரத்தில், ரோட்டோரத்திலும், குளக்கரைகளிலும் கொட்டுகின்றனர். கட்டடக் கழிவு கொட்டுவதால், வாகனங்களில் செல்வோர் அவதிப்படுகின்றனர்; போக்குவரத்து பாதிக்கிறது. இந்நிலையில், கோவை மாநகர எல்லைக்குள் கட்டடக் கழிவுகள் கொட்ட, 18 இடங்களை மாநகராட்சி அறிவித்தது. அறிவிப்பை மீறி, குளக்கரை, ரோட்டோரம், குப்பைத் தொட்டிகளில் கழிவுகளை கொட்டினால், அபராதம் விதித்து, வாகனங்களையும் பறிமுதல் செய்யப்படும் என, மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்தார்.

கட்டடக் கழிவு கொட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட பெரும்பாலான இடங்கள், பயன்பாடற்ற கிணறுகளாக இருந்தன. பொதுக்கிணற்றில் கட்டடக் கழிவுகளை கொட்டுவதை தவிர்த்து, கிணறுகளை பராமரித்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதுக்கப்படும். மக்களின் தேவைக்கேற்ப தண்ணீர் எடுக்க முடியும் என, பொதுநல அமைப்புகள் வலியுறுத்தின. இதையடுத்து, பொதுக்கிணறுகளில் கட்டட கழிவுகளை கொட்ட தடை விதித்து, கழிவு மண் கொட்டுவதற்கு மாற்று இடங்களை மாநகராட்சி நிர்வாகம் தேர்வு செய்து, அறிவித்தது. மாநகராட்சி பகுதியில் உள்ள, ஐந்து மண்டலத்திலும் சேர்த்து, ௧௬ இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

கட்டடக் கழிவுகளை குறிப்பிட்ட இடங்களில் கொட்டும்போது, அவற்றை மாநகராட்சி வாகனங்களில் எடுத்து வந்து, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து, மணல், சிறுஜல்லி கற்களை பிரித்தெடுக்கவும் திட்டமிடப்பட்டது. இதற்காக, உக்கடம் கழிவு நீர் பண்ணை அருகிலும், வெள்ளலுார் குப்பைக்கிடங்கு பகுதியிலும் கட்டடக் கழிவில் இருந்து மாற்று பொருள் உற்பத்திக்கான மையத்தை தனியார் மூலம் நிறுவ மாநகராட்சியில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்காக, மாநகராட்சி அதிகாரிகள் டில்லி, புனே உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று, கட்டடக் கழிவுகளில் இருந்து மாற்றுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை பார்வையிட்டு வந்தனர்.இந்நிலையில்,கமிஷனர் லதா, சென்னையில் நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், கட்டடக் கழிவை மாற்று பொருளாக மாற்றும் திட்டம் பற்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து, திடக்கழிவு மேலாண்மை திட்டம் நிதி, 12 கோடி ரூபாயில், கட்டடக் கழிவை மாற்று பொருளாக மாற்றும் திட்டத்திற்கு, அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

கோவையில் வாலாங்குளம் கரையிலும், உக்கடம் பை பாஸ் ரோடு, திருச்சி ரோட்டில் சிங்காநல்லுார் அருகிலும், சரவணம்பட்டி பகுதிகளிலும், பொள்ளாச்சி ரோட்டில் குறிச்சி குளக்கரையிலும் கட்டட கழிவு அத்துமீறி கொட்டப்படுகிறது. இத்திட்டம் எவ்வளவு விரைவில் செயல்பாட்டுக்கு வருகிறதோ, அதற்கேற்ப, கட்டட கழிவு பிரச்னைக்கு விமோசனம் கிடைக்கும்.

விரைவில் செயல்வடிவம்!
மாநகராட்சி கமிஷனர் லதா கூறுகையில், ''கட்டடக் கழிவு மண், குளக்கரை மற்றும் ரோட்டோரத்தில் கொட்டுவதை தடுக்கவும், மாற்று பொருள் உற்பத்தி செய்யவும் இத்திட்டம் கொண்டு வரப்படுகிறது. உக்கடம் கழிவுநீர் பண்ணை இடத்தில் இத்திட்டத்திற்காக 10 ஏக்கர் நிலம் எடுக்கப்படுகிறது. கோவையிலுள்ள கட்டுமான பொறியாளர்களுடன் இத்திட்டம் குறித்து பேச்சு நடத்தப்படவுள்ளது. கட்டடக் கழிவுகளை மாற்று பொருள் உற்பத்தி செய்யும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்படும். கட்டடம் இடிக்கும் இடத்திற்கு சென்று சொந்த பொறுப்பில், கட்டட கழிவை எடுக்க வேண்டும். அல்லது, மாற்று பொருள் உற்பத்தி மையத்தில் கட்டடக் கழிவை ஒப்படைப்பதால், எடையளவுக்கு தகுந்தாற்போன்று கட்டணம் கொடுக்க வேண்டும். ''கட்டடக் கழிவில் இருந்து, ஜல்லி, மணல், சிமெண்ட் துகள்கள் பிரித்தெடுக்கப்படும். அவற்றை கொண்டு, ரெடி மிக்ஸ், ஹாலோபிளாக் மற்றும் பேவர் பிளாக் கற்கள் தயாரிக்கப்படும். அவற்றுக்கு விலை நிர்ணயம் செய்து மாநகராட்சி பயன்பாட்டுக்கு எடுக்கப்படும். மீதமிருந்தால், மக்கள் பயன்பாட்டிற்கு விற்கப்படும். திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, விரிவான திட்ட அறிக்கை தயாரித்த பிறகு, விரைவில் செயல்வடிவம் கொடுக்கப்படும்,'' என்றார்.
Last Updated on Tuesday, 19 August 2014 06:11
 

ஈரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி              18.02.2014

ஈரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

ஈரோடு மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள். அதைத்தொடர்ந்து, மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தொடங்கி உள்ளனர். நேற்று காரைவாய்க்கால் மண்டபம்வீதி, கச்சேரி வீதி, மாரிமுத்து வீதிகளில் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினார்கள்.

மண்டல உதவி ஆணையாளர் விஜயகுமார் தலைமையில் இளம் பொறியாளர்கள் பிரேம்குமார், முருகானந்தம் மற்றும் சுகாதார ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடங்களுக்கு சென்றனர். அங்கு போக்குவரத்துக்கு இடையூறாக கட்டப்பட்டு இருந்த சுவர்கள், சிலாப்புகள் மற்றும் கூரைகளை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்தனர்.

சுமார் 50 கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பாதுகாப்பு பணியில் ஈரோடு டவுன் போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.

இதுபோல் மாநகர் பகுதி முழுவதும் மாநகராட்சி ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தேவையை சமாளிக்க ரூ.11½ கோடி செலவில் பணிகள் கலெக்டர் ம.ரவிகுமார் தகவல்

Print PDF

தினத்தந்தி              18.02.2014

தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தேவையை சமாளிக்க ரூ.11½ கோடி செலவில் பணிகள் கலெக்டர் ம.ரவிகுமார் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் தேவையை சமாளிக்க ரூ.11 கோடியே 63 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்ற மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது:–

குடிநீர்

தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை காலத்தில் குடிநீர் தேவையை சமாளிக்கும் வகையில் 19 நகர பஞ்சாயத்துகளிலும் கைப்பம்பு, நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் உள்ளிட்ட 127 பணிகள் ரூ.3 கோடியே 22 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. கிராம பஞ்சாயத்துகளில் 934 பணிகள் ரூ.8 கோடியே 41 லட்சம் செலவில் செய்யப்பட உள்ளது.

இது தவிர ரூ.5 கோடியே 41 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதே போன்று நகராட்சி, மாநகராட்சி பகுதிகளிலும் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மாவட்டத்தில் உள்ள 21 கூட்டு குடிநீர் திட்டங்களில் 100 சதவீதம் தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சாலைப்பணிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் குறுக்குச்சாலை முதல் கோட்டூர் வரை 4.8 கிலோ மீட்டர் தூரத்துக்கும், ரூ.54 லட்சத்து 60 ஆயிரம் செலவில் நமச்சிவாயபுரம் முதல் அருணாசலபுரம் வரை 2 கிலோ மீட்டர் தூரமும் சாலை அமைக்கப்பட உள்ளது. அதே போன்று 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தடுப்பணை உள்ளிட்ட 225 உறுதிபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் இலவச வேட்டி, சேலை 60 சதவீதம் பேருக்கு மட்டுமே வந்து உள்ளது. அதனை வினியோகம் செய்து வருகிறோம். பஸ்நிலையத்தில் சுற்றித்திரியும் சிறு குழந்தைகளை மீட்டு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் கூறினார்.

 


Page 65 of 3988