Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பிளாஸ்டிக் ஒழிப்பில் ஈடுபட்ட சிறந்த மகளிர் குழுவுக்கு ரூ.5 லட்சம் பரிசு

Print PDF

தினத்தந்தி           17.02.2014

பிளாஸ்டிக் ஒழிப்பில் ஈடுபட்ட சிறந்த மகளிர் குழுவுக்கு ரூ.5 லட்சம் பரிசு

சுற்றுச்சூழல் துறை மூலமாக பிளாஸ்டிக் பயன்பாடுகள் இல்லாத பகுதிகளாக மாற்றும் செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள சிறந்த 3 மகளிர் சுய உதவிக்குழுக்களை மாநில அளவில் தேர்வு செய்து ரொக்கப்பரிசுகள் வழங்க தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார். முதல் பரிசாக ரூ.5 லட்சம், 2–வது பரிசாக ரூ.3 லட்சம், 3–வது பரிசாக ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் உபயோகிப்பதை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்க வேண்டும். தங்கள் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி மையத்துக்கு அனுப்பும் செயல்களில் ஈடுபட்டு இருக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு இணக்கமான மாற்றுப் பொருளான காகித பை, காகித தம்ளர், துணிப்பை, சணல் பை போன்ற ஏதேனும் ஒரு பொருளை தயாரிக்கும் சுயஉதவிக்குழுவாக இருக்கலாம்.

இந்த தகுதிகளை உடைய சுய உதவிக்குழுக்கள், உரிய விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் யூனியன் அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பரிந்துரையுடன் நெல்லை மாவட்ட மகளிர் திட்ட அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை, நெல்லை மாவட்ட கலெக்டர் மு.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

 

66 யாக குண்டம் வளர்த்து வேள்வி வழிபாடு-நலத்திட்ட உதவிகள் மேயர் செ.ம.வேலுச்சாமி வழங்கினார்

Print PDF

தினத்தந்தி           17.02.2014

66 யாக குண்டம் வளர்த்து வேள்வி வழிபாடு-நலத்திட்ட உதவிகள் மேயர் செ.ம.வேலுச்சாமி வழங்கினார்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 66 யாக குண்டம் வளர்த்து வேள்வி வழிபாட்டு விழாவும், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் மேயர் செ.ம,வேலுச்சாமி கலந்து கொண்டு நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகளுடன் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. 32-வது வார்டு சார்பில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவை தலைமையேற்று வழிநடத்தும் அதிகாரம் பெற்றிட முதல்- அமைச்சரின் பிறந்தநாளான மகம் நட்சத்திரத்தில் கோவை விளாங்குறிச்சி சேரன்மாநகரில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் 66 யாக குண்டங்களை அமைத்து தமிழில் வேள்வி வழிபாட்டு நிகழ்ச்சி நேற்றுக்காலை 7 மணிக்கு தொடங்கியது.

இதையொட்டி கோவில் வளாகத்தில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு அதில் யாகசாலை அமைக்கப்பட்டிருந்தது. 66 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு அவற்றுக்கு வர்ணங்கள் தீட்டப்பட்டிருந்தன. அவற்றை சுற்றி முளைப்பாரி வளர்க்கப்பட்டிருந்தது.காலை 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் வேள்வி வழிபாட்டுக்கு கிழக்கு மண்டல தலைவர் கே.ஆர்.ஜெயராம் முன்னிலை வகித்தார்.இதைதொடர்ந்து மேயர் செ.ம.வேலுச்சாமி குத்து விளக்கேற்றி யாக வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார்.இதில் புறநகர் மாவட்ட செயலாளர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., கலந்து கொண்டார்.

66 யாக குண்டங்கள்

அதன் பின்னர் 100 சிவனடியார்கள் 66 குண்டங்களை வளர்த்து திருஞானசம்பந்தர் பாடிய கோளாறுபதிகம் பாடினார்கள்.அதைதொடர்ந்து காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை 11 வேள்விகள் நடத்தப்பட்டன.அதை தொடர்ந்து வேள்வி யாக சாலையில் வைக்கப்பட்ட 2 திருக்குடங்களை மேயர் செ.ம.வேலுச்சாமியும், கிழக்கு மண்டல தலைவர் கே.ஆர்.ஜெயராமும் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்தனர்.அதில் உள்ள புனித நீரை கொண்டு மீனாட்சி சுந்தரேசுவரருக்கு நீராட்டு நடைபெற்றது.பின்னர் பூஜைகள் செய்யப்பட்டன.

யாக குண்டம் வேள்வி வழிபாடு முடிவடைந்ததும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு 6 இரு சக்கர தள்ளுவண்டிகளும், சி 66 ஆதரவற்ற பள்ளி குழந்தைகளுக்கு வண்ண சீருடைகளும், 66 கல்லூரி மாணவர்களுக்கு ஹெல்மெட்டும்,66 கிரிக்கெட் குழுவிற்கு விளையாட்டு உபகரணங்கள் உள்பட 2 ஆயிரம் பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மேயர் செ.ம.வேலுச்சாமி வழங்கினார். அதைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சிகளில் ஏ.கே.செல்வராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆர்.சின்னசாமி, ஓ.கே.சின்னராஜ், துணைமேயர் லீலாவதி, மண்டல தலைவர்கள் கணபதிராஜ்குமார், சாவித்திரி பார்த்தீபன், பி.ஆர்.ஜி. அருண்குமார், குழு தலைவர்கள்அம்மன்அர்ஜுன்,பிரபாகரன், வக்கீல்ராஜேந்திரன்,சாந்தாமணி மற்றும் சாரமேடு பெருமாள், கவுன்சிலர்கள் சிங்கைபாலு, வெண்தாமரைபாலு, எஸ்.ஆர்.அர்ஜுனன், சால்ட்வெள்ளிங்கிரி, வீரகேரளம் மயில்சாமி,செந்தில் என்கிற கார்த்திகேயன், ஏகாம்பரம், தமிழ்மொழி,ஜெயந்தி, குணசுந்தரி, நடராசன், மாரப்பன், முத்துசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.ராஜு, மருதாசலம், நா.கருப்பசாமி, சி.டி.சி. கருணாகரன், வக்கீல் கள் ஆறுமுகம், நாகராஜ், பாலகிருஷ்ணன், எஸ்.பி.சந்திரசேகர், அகஸ்டஸ்,ஆர்.சரோஜினி, பீளமேடு துரை,எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் ஜி.சுப்பிரமணியன்,கள்ளிப்பாளையம் ஊராட்சி செயலாளர் செந்தில் என்கிற கோவிந்தராஜன், மற்றும் சக்கரையப்பன், வெள்ளானைப்பட்டி ராசு, அருண்குணாளன், ஆனந்தி கோவிந்தராஜன் , சங்கர் பிரபு, புத்தா செந்தில்,தம்பி என்கிற சண்முகசுந்தரம், கோல்டுவின்ஸ் ஜி.எஸ்.ரகுபதி, கணபதி க.ஜெயபிரகாஷ், எஸ்.விவேகானந்தன், சம்சுதீன், எஸ்.சண்முவடிவேல், ஆர்.மாணிக்கம், பி.கே.சீனிவாசன்,சேரன்மாநகர் ராஜசேகர்,கேபிள்பஷீர் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

 

சென்னை மாநகராட்சி பட்ஜெட் 19–ந் தேதி தாக்கல் மேயர் சைதை துரைசாமி புதிய திட்டங்களை அறிவிக்கிறார்

Print PDF

தினத்தந்தி           17.02.2014

சென்னை மாநகராட்சி பட்ஜெட் 19–ந் தேதி தாக்கல் மேயர் சைதை துரைசாமி புதிய திட்டங்களை அறிவிக்கிறார்

சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 19–ந் தேதி(புதன்கிழமை) மேயர் சைதை துரைசாமி தாக்கல் செய்கிறார். இதில் சென்னை மாநகராட்சிக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.

பட்ஜெட் தாக்கல்

சென்னை மாநாகராட்சி பட்ஜெட் ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக கடந்த ஆண்டு மார்ச் 11–ந் தேதி, 200 வார்டுகளுக்கும், 3 ஆயிரத்து 630 கோடி ரூபாய் மதிப்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் கல்வி, சுகாதாரம், சாலை மேம்பாடு உள்பட 126 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் புதிதாக சாலைகளும்அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான விசேஷ கூட்டம் வருகிற 19–ந் தேதி சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் இந்த ஆண்டுக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன.

அன்றைய தினமே விவாதம்

இந்த பட்ஜெட் கூட்டம் காலை சரியாக 9.30 மணிக்கு மேயர் சைதை துரைசாமி தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர், துணை மேயர் பெஞ்சமின் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்த ஆண்டு பல்வேறு திட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது. குறிப்பாக கல்வி, சுகாதாரத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என தெரிகிறது. மேலும் விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.

அன்றைய தினம் மதியமே பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெற இருக்கிறது. இந்த விவாதத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து மேயர் சைதை துரைசாமி பேசுவார்.

 


Page 71 of 3988