Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

நகராட்சி ஆணையருக்கு பிரிவு உபசார விழா

Print PDF

தினமணி             13.02.2014

நகராட்சி ஆணையருக்கு பிரிவு உபசார விழா

ஆற்காடு நகராட்சி ஆணையராக பணியாற்றி ஆரணி நகராட்சிக்கு பணி மாறுதலாகிச் செல்லும் செ.பாரிஜாதத்துக்கு பிரிவு உபசார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் ஆர்.புருஷோத்தமன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கீதாசுந்தர் முன்னிலை வகித்தார். எம்எல்ஏ வி.கே.ஆர்.சீனிவாசன் பாராட்டி பேசினார்.

நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள்,அலுவலக பணியாளர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

காய்கறிக் கழிவுகளில் மின்சார உற்பத்தி: பொள்ளாச்சி நகராட்சியில் துவக்கம்

Print PDF

தினமணி             13.02.2014

காய்கறிக் கழிவுகளில் மின்சார உற்பத்தி: பொள்ளாச்சி நகராட்சியில் துவக்கம்

பொள்ளாச்சி நகராட்சியில் ரூ. 90 லட்சம் மதிப்பில் காய்கறிக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

நகர்மன்றத் தலைவர் கிருஷ்ணகுமார் பூமி பூஜையை துவக்கி வைத்தார். ஆணையர் சுந்தராம்பாள் முன்னிலை வகித்தார்.

  பொள்ளாச்சி நகராட்சி 13.87 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. நகராட்சியில் மொத்தமுள்ள 36 வார்டுகளில் 90 ஆயிரம் பேர் வசித்துவருகின்றனர். நகராட்சி பகுதிகளில் தினசரி சேகரிக்கப்படும் 60 டன் குப்பைகள் உரக்கிடங்கில் சேர்க்கப்படுகின்றன. இதில், 42 டன் குப்பைகள் மக்கும் குப்பைகளாகவும், 12 டன் குப்பைகள் மக்காத குப்பைகளாகவும் பிரிக்கப்படுகின்றன.

 இது தவிர காந்தி சந்தை, திரு.வி.க. சந்தை, தேர்நிலை சந்தை, உழவர் சந்தை, பூ மார்க்கெட், உணவு விடுதிகள் மற்றும் பழக்கடைகள் ஆகியவற்றில் இருந்து தினமும் 10 டன் காய்கறிக்கழிவுகள், பழக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. சேகரிக்கப்படும் 10 டன் காய்கறிக்கழிவுகள், பழக்கழிவுகளில் இருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கப்படுகிறது. இந்த இயற்கை எரிவாயுவில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது.

 தயாரிக்கப்படும் மின்சாரம் நகராட்சிக்குச் சொந்தமான கட்டடங்களுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2013-14 ஆண்டில் ரூ. 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்து நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார் கூறுகையில், நகராட்சியில் பல டன் காய்கறி, பழக்கழிவுகள் கிடைப்பதால், அதை வீணாக்காமல் மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டோம். தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன. இந்த திட்டம் பல்வேறு நகராட்சி, பேரூராட்சிகளுக்கு முன்மாதிரியாக அமையும் என்றார்.

நகராட்சிபொறியாளர் ராஜா, நகர்மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ்ராஜா, வசந்த் உள்பட பலர்  பங்கேற்றனர்.

 

அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் திறப்பு:2 வேளை மலிவு விலை உணவு வழங்க ஏற்பாடு

Print PDF

தினமணி             13.02.2014

அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் திறப்பு:2 வேளை மலிவு விலை உணவு வழங்க ஏற்பாடு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அம்மா உணவகத்தை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை திறந்துவைத்தார். இதையடுத்து மேயர் உள்ளிட்டோர் முதல் விற்பனையை ஆரம்பித்துவைத்தனர். இதில் காலையில் இட்லியும், மதியம் சாம்பார், தயிர் சாதமும் விற்கப்பட உள்ளது.

  மதுரையில் மேலவாசல், புதூர் மாநகராட்சி மருத்துவமனை உள்ளிட்ட 10 இடங்களில் ஏற்கெனவே அம்மா உணவகம் செயல்பட்டுவருகிறது. இந்தநிலையில் ஏழை நோயாளிகளும்,  பொதுமக்களும் பயன்படும் வகையில் அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் திறக்கவேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அம்மா உணவகம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவுக்கு முன்புறம் ரூ.25 லட்சத்தில் அம்மா உணவகம் அமைக்கப்பட்டது. அதில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்,  காற்றோட்ட வசதி, சூரிய சக்தியில் செயல்படும் வெந்நீர் அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

  அம்மா உணவகத்தினை சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை மாலை திறந்துவைத்தார். இதையடுத்து மருத்துவமனை அம்மா உணவகம் அருகே இருந்த பந்தலில் மாநகராட்சி மேயர் வி.ராஜன்செல்லப்பா அம்மா உணவகத்தில் பதிக்கப்பட்ட கல்வெட்டைத் திறந்துவைத்தார்.   பின்னர் மேயர்,  ஆணையர் கிரண்குராலா, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.வடிவேல்முருகன், தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் (மார்க்சிஸ்ட்) ரா.அண்ணாதுரை ஆகியோர் உணவகத்திற்குள் சென்று உணவருந்தி விற்பனையைத் தொடங்கி வைத்தனர்.  நிகழ்ச்சியில் மண்டலத்தலைவர் சாலைமுத்து, நகர் நல அலுவலர் யசோதாமணி, உதவி ஆணையர் தேவதாஸ், 36 வது வார்டு கவுன்சிலர் ஆனந்தவள்ளிதங்கம், மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

  உணவகத்தில் காலையில் இட்லி (ரூ.1) மட்டும் விற்கப்படும். தினமும் 2400 இட்லிகள் விற்கப்படவுள்ளன. மதியம் சாம்பார் சாதம் (ரூ.5) 600 பேருக்கும், தயிர்சாதம் (ரூ.5) 300 பேருக்கும் அளிக்கப்படும். காலை, மதியம் 2 நேரம் உணவகம் என தெரிவிக்கப்பட்டது. 

  மருத்துவமனைக்குள் திறக்கப்பட்ட அம்மா உணவகத்தில் முதல் நாளே ஏராளமான நோயாளிகள் உறவினர்கள் உணவருந்தினர். இதனால் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

 


Page 79 of 3988