Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

திடக்கழிவு சேவை கட்டணத்தை தவணை முறையில் செலுத்தலாம் வணிகர்கள் கூட்டத்தில் ஆணையர் தண்டபாணி அறிவிப்பு

Print PDF

தினத்தந்தி                13.02.2014

திடக்கழிவு சேவை கட்டணத்தை தவணை முறையில் செலுத்தலாம் வணிகர்கள் கூட்டத்தில் ஆணையர் தண்டபாணி அறிவிப்பு

திருச்சி மாநகராட்சியில் விதிக்கப்பட்டுள்ள திடக்கழிவு சேவை கட்டணத்தை வியாபாரிகள் தவணை முறையில் செலுத்தலாம் என ஆணையர் தண்டபாணி கூறினார்.

சேவை கட்டணம் விதிப்பு

திருச்சி மாநகராட்சியில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு திடக்கழிவை அகற்றுவது தொடர்பாக சேவை கட்டணம் விதித்துள்ளது. இந்த தொகை ஒவ்வொரு கடைக்கும், வணிக நிறுவனங்களுக்கும் தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண தொகை கடந்த ஏப்ரல் 1–ந் தேதி முதல் முன் தேதியிட்டு வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த கட்டண தொகை அதிகமாக இருப்பதாகவும், இந்த தொகையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில் அச்ச, அருவருக்கத்தக்க தொழில்களுக்காக வழங்கப்படும் உரிமம், பெறுவதற்கு வருகிற 14–ந்தேதி கடைசி நாள் எனவும், இந்த உரிமம் பெறவோ? அல்லது புதுப்பிக்கவோ? வேண்டுமானால் அதற்கு முன்னதாக மாநகராட்சி நிர்ணயித்துள்ள திடக்கழிவு சேவை கட்டணத்தை முழுவதுமாக செலுத்துபவர்களுக்கு உரிமம் வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.

வியாபாரிகள் கோரிக்கை

இந்த அறிவிப்பு வணிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்க கூட்டம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருச்சியில் நடந்தது. பேரமைப்பின் மாநில பொருளாளர் கோவிந்தராஜூலு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பேசிய வணிகர்கள் பலர், திடக்கழிவு சேவை கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்தி வைக்க வேண்டும் என்றனர். மேலும் அச்ச, அருவருக்கத்தக்க தொழில்களுக்காக உரிமம் பெறும் போது திடக்கழிவு கட்டணத்தை செலுத்த வலியுறுத்தக்கூடாது, உரிமம் பெற 14–ந்தேதி கடைசி என்பதை நீட்டிக்க வேண்டும். நடைபாதை வியாபாரிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்து மாநகராட்சி ஆணையர் தண்டபாணி பேசியதாவது:–

தவணை முறையில்...

திருச்சி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திடக்கழிவு சேவை கட்டணம் மூலம் மாநகராட்சிக்கு ரூ.72 லட்சம் முதல் ரூ.73 லட்சம் வரை கிடைக்கும். இந்த கட்டணத்தை நிறுத்தி வைக்க அதிகாரம் கிடையாது. ஒரு ஆண்டு கட்டணத்தை செலுத்தி விட்டு மீதித்தொகையை தவணை முறையில் செலுத்துங்கள்.

திடக்கழிவு சேவை கட்டணம் அதிகமாக இருக்கிறது என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தை மாநகராட்சி மாமன்ற பட்ஜெட் கூட்டத்தில் பொருளாக வைக்கப்பட்டு கட்டணத்தை குறைக்கவேண்டுமானால் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதற்கு 6 மாத கால அவகாசம் ஆகும். எனவே தற்போது திடக்கழிவு சேவை கட்டணத்தை வியாபாரிகள் தவணை முறையில் செலுத்தலாம்.

14–ந்தேதி கடைசி நாள்

அச்ச, அருவருக்கத்தக்க தொழில்களுக்கான உரிமம் பெறவோ? புதுப்பிக்கவோ? 14–ந்தேதி கடைசி நாளாகும். இந்த தேதியை நீட்டிக்க முடியாது. எனவே இதற்கான உரிமம் பெறுபவர்கள், திடக்கழிவு சேவைக்கட்டணத்தை செலுத்த வேண்டும். நடைபாதை வியாபாரிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கி தரப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மண்டல தலைவர் தமிழ்செல்வன், நிர்வாகி உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

ஜெயலலிதா தொடங்கி வைத்த குடிநீர் திட்டத்தின் மூலம் திருச்சி மாநகரில் மேலும் ஒரு லட்சம் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும்

Print PDF

தினத்தந்தி                13.02.2014

ஜெயலலிதா தொடங்கி வைத்த குடிநீர் திட்டத்தின் மூலம் திருச்சி மாநகரில் மேலும் ஒரு லட்சம் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும்

திருச்சி மாநகராட்சியில் ரூ.221 கோடி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை முதல் –அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதன் மூலம் மேலும் ஒரு லட்சம் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்றும் தினமும் ஒரு நபருக்கு 135 லிட்டர் குடிநீர் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

குடிநீர் அபிவிருத்தி திட்டம்

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு திருச்சி மாநகராட்சி பகுதியில் ஜப்பான் பன்னாட்டு கழக நிதி உதவியுடன் ரூ.221 கோடியே 42 லட்சம் திட்ட மதிப்பீட்டில் மாநகராட்சி குடிநீர் அபிவிருத்தி திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த திட்டத்திற்காக நகரின் பல்வேறு பகுதிகளில் 37 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் புதிதாக கட்டப்பட்டு உள்ளன. 79 கி.மீ நீளத்திற்கு பிரதான உந்து குழாய்களும், 355 கி.மீ நீளத்திற்கு குடிநீர் பகிர்மான குழாய்களும் பதிக்கப்பட்டு உள்ளன. குடிநீர் உறிஞ்சி எடுப்பதற்காக கொள்ளிடம் ஆற்றில் 3 இடங்களில் ராட்சத ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

முதல் அமைச்சர் தொடங்கி வைத்தார்

இந்த குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை முதல் –அமைச்சர் ஜெயலலிதா நேற்று சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதற்காக காஜாமலை காலனி அரசு ஊழியர்கள் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில் விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன், மேயர் ஜெயா, பரஞ்சோதி எம்.எல்.ஏ, மாநகராட்சி ஆணையர் தண்டபாணி, துணைமேயர் மரியம் ஆசிக், கோட்ட தலைவர்கள் சீனிவாசன், மனோகரன், கவுன்சிலர்கள் அய்யப்பன், கலைவாணன், ஏர்போர்ட் விஜி, மகாலட்சுமி மலையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முதல் –அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்ததும் இனிப்புகள் வழங்கப்பட்டது. முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பொதுமக்கள் சார்பில் சிலர் பேசினார்கள். அங்கு அமைக்கப்பட்டிருந்த பொது குடிநீர் குழாய்களில் பெண்கள் குடங்களில் தண்ணீர் பிடித்து சென்றார்கள்.

தினமும் 135 லிட்டர் தண்ணீர்

முதல் அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்ததை தொடர்ந்து 37 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளிலும் நேற்று உடனடியாக தண்ணீர் ஏற்றப்பட்டது. இதன் மூலம் திருச்சி நகர மக்களுக்கு இனி தினமும் ஒரு நபருக்கு 135 லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என்றும், இந்த புதிய திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

உணவகம் திறப்பு

Print PDF

தினத்தந்தி                13.02.2014

உணவகம் திறப்பு

மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அம்மா உணவகம் நேற்று திறக்கப்பட்டது. உணவகத்தை மேயர் ராஜன்செல்லப்பா, மாநகராட்சி கமிஷனர் கிரன்குராலா ஆகியோர் பொதுமக்களுக்கு உணவு வழங்கி தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

Last Updated on Thursday, 13 February 2014 06:06
 


Page 81 of 3988