Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சென்னிமலை பேரூராட்சி பகுதியில் தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை

Print PDF

தினத்தந்தி              07.02.2014

சென்னிமலை பேரூராட்சி பகுதியில் தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை

சென்னிமலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். எனவே தெரு நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், என்று பொதுமக்கள் சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஜம்பு என்கிற சண்முகசுந்தரத்திடம் புகார் கூறினார்கள். இதையடுத்து ஈரோடு மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உத்தரவுப்படி சென்னிமலை பேரூராட்சி பகுதியில் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை, கோவையை சேர்ந்த தனியார் அமைப்பினர் மற்றும் பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் ஒன்று சேர்ந்து, 25–க்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடித்தனர்.

பின்னர் அந்த நாய்கள் அனைத்தும் சென்னிமலை அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கால்நடை டாக்டர் செந்தில்செல்வன் தலைமையில் டாக்டர்கள் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்தனர். தொடர்ந்து தெருவில் சுற்றும் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

சேலம், வேலூர், ஈரோட்டை சேர்ந்த மாநகராட்சி மேயர்கள், கவுன்சிலர்களுக்கு திறனூட்டு பயிற்சி முகாம் தொடங்கியது

Print PDF

தினத்தந்தி              07.02.2014

சேலம், வேலூர், ஈரோட்டை சேர்ந்த மாநகராட்சி மேயர்கள், கவுன்சிலர்களுக்கு திறனூட்டு பயிற்சி முகாம் தொடங்கியது

சேலம், வேலூர் மற்றும் ஈரோடு மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கான 2 நாள் திறனூட்டு பயிற்சி முகாம் சேலத்தில் தொடங்கியது.

திறனூட்டு பயிற்சி முகாம்

தமிழ்நாடு நகரவியல் பயிற்சி நிறுவனம் சார்பில் சேலம், வேலூர் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாநகராட்சிகளை சேர்ந்த மேயர்கள், துணை மேயர்கள், கவுன்சிலர்கள் மற்றும் அலுவலர்களுக்கு நிர்வாக பயிற்சிக்கான ‘திறனூட்டுப்பயிற்சி‘ முகாம் சேலத்தில் நேற்று தொடங்கியது. பயிற்சி முகாமை சேலம் மாநகராட்சி மேயர் எஸ்.சவுண்டப்பன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

முகாமில், 74–வது அரசியல் அமைப்பு திருத்தச்சட்டத்தின் சிறப்பம்சங்கள், மாமன்றத்தின் அதிகாரங்கள், பங்கு, பொறுப்புகள் மற்றும் கடமைகள், மேயர் மற்றும் துணைமேயர் அதிகாரங்கள், பங்கு, பொறுப்புகள் மற்றும் கடமைகள், மாமன்ற கூட்டம் நடத்துதல் ஆகியவை பற்றி ஓய்வு பெற்ற நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் எஸ்.நாராயணசாமி பயிற்சி அளித்தார். தொடர்ந்து நிலைக்குழுக்கள் அமைப்பு, அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள், வார்டு குழுக்கள் அமைத்தல், அவற்றின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகள், மனித உறவுகள், உள்ளாட்சியும் உறவுகளும், தேவை மற்றும் முக்கியத்துவம், தலைமைப்பண்பு, சுய ஊக்கம், நன்னெறிகள், முரண்பாடுகளை தீர்த்தல், பிரச்சனைகளை தீர்க்கும் வழிமுறைகள், தகவல் தொடர்பு, ஆகியவை குறித்து முனைவர் மனவழகன் பயிற்சி அளித்தார்.

மேயர் அறிவுரை

முன்னதாக சேலம் மாநகராட்சி மேயர் எஸ்.சவுண்டப்பன் பேசுகையில், ‘‘மூதறிஞர் ராஜாஜி, தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் போன்ற தலைவர்கள் எல்லாம் உள்ளாட்சி நிர்வாகத்தில் தலைவராக இருந்து, மக்களோடு மக்களாக பழகி சேவை செய்துதான், நாட்டின் தலைமை பொறுப்புக்கு வந்துள்ளார்கள். ஆகவே, ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் தங்களின் கடமையையும், நிர்வாக முறைகளையும் தெரிந்து கொள்வது அவசியம்‘‘ என்றார்.

நேற்றைய பயிற்சி முகாமில் வேலூர் துணை மேயர் தர்மலிங்கம் மற்றும் 3 மாநகராட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவன ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி திட்ட விளக்கவுரை ஆற்றினார்.

இன்றும்...

இன்று(வியாழக்கிழமை) 2–வது நாளாகவும் திறனூட்டு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. உள்ளாட்சி தணிக்கைத்துறை துணை இயக்குனர்நடராஜன், நகராட்சி நிர்வாக தலைமை பொறியாளர் ஆர்.ரகுநாதன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர்அலுவலக உதவி திட்ட இயக்குனர் இளம்பருதி ஆகியோர் பயிற்சி வழங்குகிறார்கள்.

நாளை(வெள்ளிக்கிழமை) 3–வது நாள் முகாமில் பெண் மக்கள் பிரதிநிதிகளுக்கான மனவளக்கலை பயிற்சி வழங்கப்படுகிறது.

 

மாநகராட்சி மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு, முதல்முறையாக விலையில்லா சீருடை மற்றும் காலணிகள்

Print PDF

தினத்தந்தி              07.02.2014

மாநகராட்சி மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு, முதல்முறையாக விலையில்லா சீருடை மற்றும் காலணிகள்

சென்னை மாநகராட்சி மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு விலையில்லா சீருடை மற்றும் காலணிகளை மேயர் சைதை துரைசாமி வழங்கினார்.

விலையில்லா சீருடை, காலணி

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, சென்னை மாநகராட்சியின் 2013-14 வரவு-செலவு திட்ட அறிவிப்பில் தனியார் பள்ளிகளை மிஞ்சிடும் வகையில் மாநகராட்சி மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு அழகிய கண்கவர் சீருடை மற்றும் காலணி வழங்கப்படும் என மேயர் சைதை துரைசாமி அறிவித்தார்.

இதனையடுத்து சென்னை மாநகராட்சியின் மழலையர் பள்ளிகளில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் விலையில்லா சீருடை மற்றும் காலணிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்படி நேற்று அயனாவரம் வசந்தா தோட்டத்தில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மேயர் சைதை துரைசாமி 400 மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு விலையில்லா சீருடை மற்றும் காலணிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தலைவர் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, துணை ஆணையர்(கல்வி) ஆர்.லலிதா, 6-வது மண்டலக்குழு தலைவர் வெற்றிநகர் மு.சுந்தர், கவுன்சிலர் எஸ்.சுப்புலட்சுமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முதல்முறையாக...

இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் மழலையர் பள்ளிகளில் பயிலும் மற்ற குழந்தைகளுக்கும் விலையில்லா சீருடை மற்றும் காலணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியின்கீழ் 40 மழலையர் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இவற்றில் 3100 குழந்தைகள் பயின்று வருகின்றனர். மழலையர் பள்ளிகள் தொடங்கப்பட்டு 15 வருடங்களுக்கு பிறகு, முதன் முறையாக விலையில்லா சீருடை தற்போது தான் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Page 98 of 3988