Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

குப்பை சேகரிக்கும் பணி தனியார் வசம் நடைமுறைக்கு வந்தாச்சு! முதல் கட்டமாக 2 மண்டலங்களில் அமல்

Print PDF

தினமலர்             04.02.2014

குப்பை சேகரிக்கும் பணி தனியார் வசம் நடைமுறைக்கு வந்தாச்சு! முதல் கட்டமாக 2 மண்டலங்களில் அமல்

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சியில், முதல்கட்டமாக, இரண்டு மண்டலங்களுக்கு உட்பட்ட, 30 வார்டுகளில், தனியார் மூலமாக குப்பை அள்ளும் திட்டம் நேற்று துவக்கப்பட்டது. இத்திட்டத்தில், 250 டன் குப்பை சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணியில், 600 தள்ளுவண்டிகள், 800 குப்பை பெட்டிகள், 10 டிப்பர் ஆட்டோக்கள், 12 காம்பாக்டர் வாகனங்கள், வாகன ஓட்டுனர்கள் 32 பேர், உதவியாளர்கள் 28 பேர், துப்புரவு பணியாளர்கள் 781 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதில், இரண்டு மற்றும் மூன்றாவது மண்டலங்களுக்கு உட்பட்ட, 16 முதல் 45வது வார்டு வரையிலான 30 வார்டு பகுதிகளில், தனியார் நிறுவனம் மூலமாக குப்பை அள்ளும் பணி நேற்று துவங்கியது. தனியார் நிறுவன ஊழியர்கள், தள்ளுவண்டிகளுடன் வீடு வீடாக வந்து தினமும் குப்பை சேகரிப்பர். காலை 6.00 மணிக்கு முன்பாக வந்து, விசில் அடித்து குப்பை சேகரிக்கப்படும். சேகரிக்கப்படும் குப்பை, பாறைக்குழிகளில் கொட்டப்படும்.

திருநீலகண்டபுரத்தில் நேற்று நடந்த விழாவில், வனத்துறை அமைச்சர் ஆனந்தன் துவக்கி வைத்தார். மேயர் விசாலாட்சி தலைமை வகித்தார். துணை மேயர் குணசேகரன், மண்டல தலைவர்கள் ஜான், ராதாகிருஷ்ணன், சுகாதார நிலைக்குழு தலைவர் பாலு முன்னிலை வகித்தனர்.மாநகராட்சி கமிஷனர் செல்வராஜ் கூறியதாவது:

மாநகராட்சியில் போதுமான துப்புரவு பணியாளர்கள் இல்லாததால், பொது சுகாதார பணியை மேற்கொள்வது சவாலாக இருக்கிறது. மகளிர் குழுக்கள் மூலமாக சுகாதார பணிகள் நடந்து வருகின்றன. மாநகராட்சியில் இருந்த குழு பெண்கள், தனியார் நிறுவனத்தில் விண்ணப்பித்து, வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

இரண்டு மற்றும் மூன்றாவது மண்டலங்களில் உள்ள துப்புரவு பணியாளர்கள் 839 பேர், மற்ற இரண்டு வார்டுகளுக்கு பிரித்து அனுப்பப்படுவர். தனியார் நிறுவனம் குப்பையை அகற்ற ஒப்பந்தம் செய்திருந்தாலும், தொழிலாளர்கள் வருகை பதிவேடு, இ.எஸ்.ஐ., - பி.எப்., உள்ளிட்ட சலுகை வழங்குவது, வாகனங்கள், குப்பை தொட்டி இயக்கம் குறித்து கண்காணிக்கப்படும்.

திருப்பூர் மாநகராட்சியில் உருவாகும் 500 டன் குப்பையில், 250 டன் குப்பை தனியாரால் அகற்றப்படும். ஒப்பந்தம் செய்துள்ளபடி, ஒரு டன் குப்பைக்கு 1,449 ரூபாய் என்ற அடிப்படையில், தனியார் நிறுவனத்துக்கு கட்டணம் வழங்கப்படும்.

வாகன இயக்கம், தொழிலாளர் கூலி உள்ளிட்ட அனைத்து செலவுகளும் தனியார் நிறுவனத்தை சேர்ந்தது. குப்பை லாரிகளை எடை போட, சில எடை நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கும் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்படும். லாரிகளில் பொருத்தப்படும் தொழில்நுட்ப கருவியால், எடை மேடையில் உள்ள லாரி விவரம், எடை விவரம் உடனுக்குடன் மாநகராட்சிக்கு, "ஆன்-லைன்' மூலமாக தெரியவரும். பணி சரிவர நடைபெறா விட்டால், கட்டணம் குறைத்து வழங்கப்படும்.

நாளை (இன்று) முதல் அந்தந்த வாகனங்கள், ஒப்படைக்கப்பட்ட இடங்களில் இயங்கத் துவங்கும். மொத்தம் 600 தள்ளுவண்டிகள், 800 குப்பை பெட்டிகள், 10 டிப்பர் ஆட்டோக்கள், 12 காம்பாக்டர் வாகனங்களும், வாகன ஓட்டுனர்கள் 32 பேர், உதவியாளர்கள் 28 பேர், துப்புரவு பணியாளர்கள் 781 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதனால், குப்பை அள்ளும் பணி வேகமாக நடக்கும். கட்டணமில்லா தொலைபேசி வசதி ஏற்படுத்த இருப்பதால், குப்பை அள்ளும் பணியில் பிரச்னை இருந்தால், பொதுமக்கள் புகார் செய்யலாம். இவ்வாறு, கமிஷனர் செல்வராஜ் கூறினார்.

கண்காணிப்பு

குப்பை சேகரிக்கும் பெட்டிகளில்,"ரேடியோ பிரீகுவன்ஸி' ஐ.டி., பொருத்தப்பட்டுள்ளதால், குப்பை தொட்டியை கையாளும் நடவடிக்கைகளை, ஆன்-லைனில் கண்காணிக்க முடியும். குப்பை தொட்டி உள்ள பகுதிகள் சிவப்பு விளக்குகளாக மானிட்டரில் தெரியும்.

குப்பை நிரம்பி பெட்டி எடுத்துச்செல்லும்போது, அப்பகுதி பச்சை நிறமாக மாறும். பச்சை நிறமாக மாறாத பகுதிகளில் குப்பை அகற்றப்படவில்லை என்பது எளிதில் தெரியவரும். வாகனங்களிலும் ஜி.பி.ஆர்.எஸ்., தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளதால், வாகனங்கள் எந்த பகுதியில் இயங்குகின்றன என்பதை கமிஷனர் அறையில் இருந்து கண்காணிக்க முடியும்.

 

துணை கமிஷனருக்கு கமிஷனர் அனைத்து அதிகாரங்களையும் வழங்கி உத்தரவிட்டுள்ளார்

Print PDF

தினமலர்             04.02.2014

துணை கமிஷனருக்கு கமிஷனர் அனைத்து அதிகாரங்களையும் வழங்கி உத்தரவிட்டுள்ளார்

மதுரை: மாநகராட்சி துணை கமிஷனர் பொறுப்பிற்கு, அனைத்து அதிகாரங்களையும் வழங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார் கமிஷனர் கிரண் குராலா.

மதுரை, மாநகராட்சியில் இதுவரை நியமிக்கப்பட்டுள்ள துணை கமிஷனர்கள் அனைவருமே, சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

ஆனாலும், அவர்களுக்கான அதிகாரத்தை இதுவரை இருந்த கமிஷனர்கள் வழங்கவில்லை. மாறாக, வருவாய் தொடர்பான ஆவணங்களை சரிபார்க்க மட்டுமே, துணை கமிஷனர்களை பயன்படுத்தினர்.

முன்பு, நந்தகோபால் கமிஷனராக இருந்த போது, துணை கமிஷனராக இருந்த சாம்பவி, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போது, 'அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை,' எனக்கூறி, நோட்டீஸ் அனுப்பும் அளவிற்கு, 'டார்ச்சரை' அனுபவித்தார். இதுதான், அனைத்து மாநகராட்சிகளிலும் இருக்கும் 'எழுதப்படாத' நடைமுறை.தற்போது மதுரை துணை கமிஷனராக உள்ள லீலாவின் அதிரடி செயல்பாடுகள், மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால், கவுன்சில் கூட்டத்தில் நேருக்கு நேர் அவருடன் விவாதம் செய்து, நெருக்கடி அளித்து வருகின்றனர். தவிர, கமிஷனர் கிரண் குராலாவிற்கு, மாநகராட்சியின் உண்மை நிலையை தெரிவித்து, தவறுகளுக்கு தடுப்புகள் அமைத்த வகையிலும், துணை கமிஷனர் மீதான கோபம், பலருக்கு.

இந்நிலையில்தான், கமிஷனர் கிரண் குராலா, நகராட்சிகளின் நிர்வாகத்தின் சட்டப் பிரிவு 18ன் கீழ், அனைத்து பொறுப்புகளையும், துணை கமிஷனருக்கு வழங்கியதோடு, அதை உடனே நடைமுறைப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார். அதன் படி, பொது நிர்வாகம், சட்டம், கல்வி, மாமன்ற பிரிவு, தகவல் மையம், கம்யூட்டர் பிரிவு, பொதுப்பிரிவு, மத்திய வருவாய், நகர்நலம், பொறியாளர் பிரிவுகள் மற்றும் அதன் தலைமை அதிகாரிகள், துணை கமிஷனரின் கட்டுப்பாட்டில், கண்காணிப்பில் இனி செயல்படுவர்.

அனைத்து ஆய்வுகள், கோப்புகள், அனுமதி, பரிந்துரை என, மொத்தம் 25 அதிகாரங்களை துணைகமிஷனருக்கு வழங்கியுள்ளார். உடனடியாக இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. கமிஷனரின் இந்த பெருந்தன்மை, பிற மாநகராட்சிகளுக்கு, மதுரையை முன்னுதாரணமாக்கியதுடன், இதுநாள் வரை, துணை கமிஷனரை 'கட்டம்' கட்டி வந்த பிற துறையினர், இனி அவரின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட வேண்டும்.

 

தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Print PDF

தினகரன்             04.02.2014

தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

சேலம், : சேலம் மாநகர பகுதியில் தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சேலம் மாநக பகுதியில் 40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநகரம் முழுவதும் உள்ள வணிக நிறுவனங்கள், ஹோட்டல், டீக்கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுபற்றி நேற்று முன்தினம் தினகரன் நாளிதழில் விரிவான செய்தி படங்களுடன் வெளியானது.

இதையடுத்து மாநகராட்சி கமிஷனர் அசோகன், மாநகர் முழுவதும் உள்ள வணிக நிறுவனங்கள், ஹோட்டல்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு உள்ளதா? என சோதனையிட்டு பறிமுதல் செய்ய சுகாதார பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்பேரில் நகர் நல அலுவலர் அர்ஜூன்குமார் தலைமையில் சூரமங்கலம்,

கொண்டலாம்பட்டி, அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி ஆகிய 4 மண்டல பகுதிகளிலும் சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், சுரேஷ், ரவிச்சந்திரன், சரவணன், சங்கர் மற்றும் ஊழியர்கள் மைக்ரான் அளவிடும் கருவிகள் மூலம் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் பலசரக்கு கடைகள், வணிக நிறுவனங்கள், ஹோட்டல்களில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை 500 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதனை பயன்படுத்தி வந்த கடைக்காரர்களை எச்சரித்த அதிகாரிகள், ‘அடுத்தமுறை சிக்கினால் அபராதம் விதிக்கப்படும்,‘ என்றனர். 

 


Page 103 of 3988