Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சாத்தான்குளத்தில் உயர்கோபுர மின்விளக்குகள் இயக்கம்

Print PDF

தினமணி             01.02.2014

சாத்தான்குளத்தில் உயர்கோபுர மின்விளக்குகள் இயக்கம்

சாத்தான்குளம் பேரூராட்சியில் ரூ. 12.8 லட்சம் மதிப்பில் 8 இடங்களில் அமைக்கப்பட்ட உயர்கோபுர விளக்குகளை பேரூராட்சித் தலைவர் ஜோசப்  இயக்கி வைத்தார்.

 சாத்தான்குளம் பேரூராட்சி சார்பில் தலா ரூ. 1.60 லட்சம் மதிப்பில் மேலசாத்தான்குளம், அரசு மருத்துவமனை முன்பு, கே.டி. கோசல்ராம் பஸ் நிலையம் முன்பு, பெருமாள் கோயில் முன்பு உள்ளிட்ட 8 இடங்களில் குறுகிய உயர்கோபுர அடர் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. இதன் மதிப்பு மொத்தம் ரூ 12.8 லட்சமாகும்.   விழாவுக்கு பேரூராட்சித் தலைவர் ஏ.எஸ். ஜோசப் தலைமை வகித்து, அந்த விளக்குகளை இயக்கித் தொடங்கி வைத்துப் பேசினார். பேரூராட்சி செயல் அலுவலர் ம. ரெங்கசாமி, துணைத் தலைவர் ரா. வீரக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 இதில் பேரூராட்சிக் கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இளநிலை உதவியாளர் தாமரைசெல்வன் நன்றி கூறினார்.

 

நீடாமங்கலம் பேரூராட்சிக் கூட்டம்

Print PDF

தினமணி             01.02.2014

நீடாமங்கலம் பேரூராட்சிக் கூட்டம்

நீடாமங்கலம் முதல் நிலைப் பேரூராட்சிக் கூட்டம் வியாழக்கிழமை தலைவர் பரிமளா செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது.

துணைத் தலைவர் சா. செந்தமிழ்ச்செல்வன், செயல் அலுவலர் த. நாராயணமூர்த்தி, மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

2014-2015-ம் ஆண்டிற்கு குத்தகை இனங்கள், கடைகள் ஏலம் விடுவது, புதிய மின் கம்பங்கள் அமைப்பது, தெருமின் விளக்குகள் புதிதாக பொருத்துவது உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்வேறு செலவினங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

 

குப்பைகள் திறந்தவெளியில் கொட்டப்படாது: திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் உறுதி

Print PDF

தினமணி             01.02.2014

குப்பைகள் திறந்தவெளியில் கொட்டப்படாது: திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் உறுதி

சேலம் செட்டிச்சாவடி கிராமத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்தின் வெளியே குப்பைகளைக் கொட்டி வைக்கப் போவதில்லை என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் வெள்ளிக்கிழமை உறுதி அளித்தது.

 செட்டிச்சாவடி பகுதியில் இயங்கி வரும் திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் கடந்த சில வாரங்களாக பணிகளை நிறுத்தியிருந்தது.

இதனால், மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் நிறுவனத்துக்கு வெளியே கொட்டப்பட்டன. இதையடுத்து, நிறுவனத்தை இடமாற்றம் செய்யக் கோரி கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

 இந்த நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து வியாழக்கிழமை முதல் குப்பைகளை அரைத்து தரம் பிரிக்கும் பணி தொடங்கியது. ஆனால், வெள்ளிக்கிழமை காலை மீண்டும் செட்டிச்சாவடியில் திரண்ட பொதுமக்கள், மாநகராட்சிக் குப்பைகளை வெளியில் கொட்டக் கூடாது என்று வலியுறுத்தினர்.

வெளியில் கொட்டப்பட்டுள்ளக் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

இதைக் கண்காணிக்க கிராமக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து அஸ்தம்பட்டி உதவிக் காவல் ஆணையர் உதயகுமார் தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும், மாநகராட்சி செயற்பொறியாளர் அசோகன் தலைமையில் அதிகாரிகளும் விரைந்தனர்.

இதையடுத்து, நிறுவனத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பொதுமக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

 


Page 111 of 3988