Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

Print PDF

தினமணி             01.02.2014

நகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

திருத்தங்கல் நகராட்சியில் பொதுமக்கள் செலுத்த வேண்டிய 2013-2014ஆம் ஆண்டிற்கான சொத்துவரி, தொழில்வரி, தண்ணீர் கட்டணம், உரிமக் கட்டணம், கடை வாடகை ஆகியவற்றை 28.2.2014ஆம் தேதிக்குள், நகராட்சி அலுவலகத்தில் செலுத்தி, ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் சட்டபூர்வ நடவடிக்கை மற்றும் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராமலிங்கம் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

சிவகங்கை நகராட்சியில் ஊருணிகளை இணைப்பது தொடர்பான திட்ட விளக்கக் கூட்டம்

Print PDF

தினமணி             01.02.2014

சிவகங்கை நகராட்சியில் ஊருணிகளை இணைப்பது தொடர்பான திட்ட விளக்கக் கூட்டம்

சிவகங்கை நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள ஊருணிகளை ஒன்றுடன் ஒன்று இணைப்பது தொடர்பான திட்ட விளக்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 சிவகங்கை நகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் எம்.அர்ச்சுணன் தலைமை வகித்துப் பேசியதாவது: நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள ஊருணிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள ஏற்படுத்தும் வகையில் மழைநீர் வடிகால் அமைத்து ஊருணிகளை இணைப்பது குறித்து திட்டம் தயாரிக்க த்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இதன்படி மாநிலத்தில் 30 நகரங்களில் மழைநீர் சேகரிப்பு தொடர்பான விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் முதல்கட்டமாக கம்பம், திண்டுக்கல், மேலூர், ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை நகராட்சிப் பகுதிகளில் உள்ள நீர்நிலை ஆதாரங்களை ஒன்றிணைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

 6.97 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சிவகங்கை நகராட்சியில் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 40,403 பேர் உள்ளனர். இங்கு ஆண்டுக்கு 336 மிமீ அளவு மட்டுமே மழை கிடைக்கிறது.

  எனவே கிடைக்கும் மழைநீரை வீணாக்காமல் அதனை ஊருணிகளில் சேமிக்கும் வகையில் சிவகங்கையில் 5 கிமீ வரை 7 பிரதான கால்வாய்களும், இதேபோல் 5 கிலோ மீட்டர் வரை 13 துணைக் கால்வாய் உள்பட85 கிலோ மீட்டர் தூரம் வரை கால்வாய்கள் அமைத்து ஊருணிகள் ரூ.38.5கோடி மதிப்பில் இணைக்கும் திட்டத்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த ஈஜிஸ் இந்தியா நிறுவனம் வரைவு திட்டத்தை தயாரித்துள்ளது.

 திட்டம் குறித்து பயனாளிகளுக்கு விளக்கி, அவர்களின் ஆலோசனை மற்றும் ஒப்புதல் பேரில் 2 ஆண்டுகளுக்குள் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.

  கூட்டத்தில் நகராட்சி ஆணையர் சரவணன், பொறியாளர் வரதராஜன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

 

மதுரையில் 4 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க முடிவு

Print PDF

தினமணி             01.02.2014

மதுரையில் 4 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க முடிவு

வைகையில் குடிநீர் இருப்பு மிகக் குறைவாக இருப்பதால், இரண்டு வைகைத் திட்டங்களின் மூலம் 4 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க முடிவு செய்துள்ளதாகவும், இது ஓரிரு நாளில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளதாகவும், மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

வைகையில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 35.56 அடி தண்ணீர்தான் உள்ளது. அதாவது, 640 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கியுள்ளது. இதில், மதுரை மாநகராட்சிக்கான ஒதுக்கீட்டுப்படி, 2 வைகை குடிநீர்த் திட்டங்களின் மூலம் தண்ணீர் எடுத்தால் குறைந்த நாள்களுக்குத் தான் விநியோகிக்க முடியும்.

இதைத் தவிர்க்க, தற்போதுள்ள தண்ணீரை 4 நாள்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்தால், முந்தைய 72 வார்டுகளுக்கு மட்டும் 90 நாள்களுக்கு குடிநீர் வழங்க முடியும். இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்தெந்தப் பகுதியில் எந்தெந்த தேதியில் குடிநீர் விநியோகம் செய்யலாம் என்பது குறித்த சுழற்சி முறையிலான விநியோகப் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பட்டியல் இன்னும் ஓரிரு நாளில் இறுதியானவுடன், 4 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் குறித்து முறைப்படி அறிவிப்பு செய்து நடைமுறைப்படுத்தப்படும்.

மேலும், மாநகரில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், முன்னேற்பாடுகளும் செய்து வருகிறோம். நான்கு மண்டலங்களிலும் புதிதாக தலா 125 ஆழ்துளை குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் நல்ல தண்ணீர் இருப்பு இருப்பதால், பிரச்னை ஏற்படவில்லை. இருந்தபோதிலும், அப்பகுதிகளுக்கு வைகை குடிநீர் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விநியோகம் தொடரும்.

மேலும், மாநகராட்சியை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல தண்ணீர் வளம் உள்ள 55 கிணறுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவற்றிலிருந்து லாரிகள் மூலம் குடிநீர் பெறுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு, மாநகரில் விநியோகம் செய்யப்படவுள்ளது.

பெரியாரிலிருந்து மாநகர தேவைக்காக தண்ணீர் திறக்க அரசுக்கு கோரிக்கை வைத்தோம். ஆனால், அந்த அணையிலிருந்து தற்போதைய சூழலில் தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.  மாநகரில் குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், 3ஆவது வைகை குடிநீர்த் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கெனவே வைகையில் மதுரை மாநகருக்கு ஒதுக்கீடு செய்துள்ள 1,500 மில்லியன் கனஅடியுடன், மேலும் 600 மில்லியன் கனஅடி தண்ணீர் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 3ஆவது திட்டத்துக்கான ஆய்வுப் பணியில் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்றார்.  பேட்டியின்போது, ஆணையர் கிரண்குராலா, நகரப் பொறியாளர் மதுரம் ஆகியோர் உடனிருந்தனர்.

 


Page 113 of 3988