Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

மாநகராட்சி பள்ளி கழிப்பிடம் பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்கத் திட்டம்

Print PDF

தினமலர்                30.01.2014

மாநகராட்சி பள்ளி கழிப்பிடம் பராமரிப்பு தனியார் வசம் ஒப்படைக்கத் திட்டம்

திருச்சி: திருச்சி மாநகராட்சி கட்டுப்பாட்டில், 38 துவக்கப் பள்ளிகள், 24 நடுநிலைப் பள்ளிகள், உயர் மற்றும் மேநிலைப் பள்ளிகள் தலா ஒன்று என மொத்தம், 64 பள்ளிகள் உள்ளன. இதில், துவக்கப் பள்ளியில், 2,640 பேரும், நடுநிலைப் பள்ளிகளில், 4,816 பேரும், உயர்நிலைப் பள்ளியில், 208 பேரும், மேல்நிலைப் பள்ளியில், 282 பேரும் பயில்கின்றனர். இப்பள்ளிகளில் பல்வேறு அடிப்படை வசதிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அவசர காலத்திற்கு உதவும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் தீயணைப்பு கருவிகள் பொறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பள்ளிகளில் உள்ள இடவசதிக்கு ஏற்ப பசுமைத் தளம் அமைக்கவும், சோலார் அமைப்பும் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கழிப்பிடங்களை தூய்மையாகவும், சுகாதாரமான முறையில் பராமரிக்கும் நோக்கத்தோடு, கழிப்பிட பராமரிப்பு பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், தளவாட பொருட்கள், நவீன கரும் பலகைகள் அமைக்கும் திட்டம் உள்ளது. இது தவிர திருச்சி மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட, 5 வார்டுகளிலும் அடிப்படை வசதி செய்து கொடுக்கப்படவுள்ளது. மாநகராட்சியின் கல்வி குழு கூட்டத்தில் இத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டு மாநகராட்சி நிர்வாகம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுகளுக்கு இன்று, (30ம் தேதி) நடக்கும் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாநகராட்சி பள்ளிகளில் தரம் உயரும் என்ற நிலை உருவாகியுள்ளது.

 

இடம் மாறுகிறது பஸ் ஸ்டாண்ட்: காந்திபுரம் மேம்பாலம் வருவதால்...

Print PDF

தினமலர்                30.01.2014

இடம் மாறுகிறது பஸ் ஸ்டாண்ட்: காந்திபுரம் மேம்பாலம் வருவதால்...
   
கோவை: கோவை சத்தி ரோட்டிலுள்ள, ஆம்னி பஸ் ஸ்டாண்டை, அவிநாசி ரோட்டில் நீலாம்பூர் கிராமத்துக்கு கொண்டு செல்ல மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதனால், கோவையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்.

கோவை, சத்தி ரோடு, ஆம்னி பஸ் ஸ்டாண்டில் இருந்து, சென்னை, கன்னியாகுமரி, மார்த்தாண்டம், சிதம்பரம், விழுப்புரம், திருநெல்வேலி, பெங்களூரு, திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும் ??? பஸ்கள் ஆம்னி பஸ் ஸ்டாண்டில் இருந்து, சத்திரோடு, அவிநாசி ரோடு, பாலக்காடு ரோடு வழியாக இயக்கப்படுகின்றன. இதனால், தினமும் மாலை 5 முதல் இரவு 11 மணி வரையிலும், காந்திபுரம், ஆம்னி பஸ் ஸ்டாண்ட், அவிநாசி ரோடுகளில் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. பஸ் ஸ்டாண்டில் இருந்து, ஆம்னி பஸ்கள் போக்குவரத்து நெரிசலை கடந்து, வழித்தடத்தில் வேகம் பிடிக்க இரண்டு மணி நேரத்துக்கு மேலாகிறது.

போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் தவிர்க்க, அவிநாசி ரோட்டில் செல்ல வேண்டிய ஆம்னி பஸ்கள், சத்திரோட்டில் இருந்து அன்னூர் - கருமத்தம்பட்டி வழியாக வழித்தடத்தில் இணைகின்றன. மேலும், ஆம்னி பஸ்களில் பயணிகள் கூட்டம் இல்லாத காலங்களில், ஆம்னி பஸ்சை காந்திபுரம் திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்ட், மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் 'ரவுண்ட்' அடித்து, பயணிகளை ஏற்றுகின்றனர். இதனால், கோவை மத்திய பகுதியில் இரவு நேரத்தில் கட்டுப்படுத்த முடியாத போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சத்தி ரோட்டிலுள்ள ஆம்னி பஸ் ஸ்டாண்டை, மாநகருக்கு வெளியில், மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம், அவிநாசி ரோட்டில் 'கொடிசியா' தொழிற்காட்சி வளாகம் அருகிலுள்ள, 8.44 ஏக்கர் பரப்புள்ள பூமிதான இயக்கத்துக்கு சொந்தமான இடத்துக்கு, ஆம்னி பஸ் ஸ்டாண்டை மாற்ற, 2012 ஜூலையில் தீர்மானம் கொண்டு வந்தது. பூமிதான இயக்க இடத்தில், மரப்பூங்கா அமைக்கப்பட்டு, ஆக்ஸிஜன் உற்பத்தி தொழிற்சாலையாக இருக்கிறது. காளப்பட்டி மற்றும் விளாங்குறிச்சி பகுதியில் குடியிருப்புகள் அதிகம் உள்ளதால், ஆம்னி பஸ் ஸ்டாண்டை அங்கு கொண்டு சென்றாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என, எதிர்ப்பு கிளம்பியது. காந்திபுரம் இரண்டடுக்கு மேம்பால பணி துவங்கும் முன், ஆம்னி பஸ் ஸ்டாண்டை மாற்ற வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால், மாநகருக்கு வெளியில் நீலாம்பூர் கிராமத்துக்கு உட்பட்ட பகுதிக்கு ஆம்னி பஸ் ஸ்டாண்டை மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'காந்திபுரத்தில் நஞ்சப்பா ரோட்டில் இருந்து, டெக்ஸ்டூல் பாலம் வரையிலும் நெடுஞ்சாலைத்துறையால் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டும் பணி விரைவில் துவங்கப்படவுள்ளது. மேம்பாலத்துக்காக, மாநகராட்சிக்கு சொந்தமான ஆம்னி பஸ் ஸ்டாண்ட் முன்பகுதியில் ?? அடி இடம் எடுக்கப்படுகிறது. அதனால், ஆம்னி பஸ் ஸ்டாண்டை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இன்று நடக்கும் கவுன்சில் கூட்டத்தில் ஆம்னி பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் செய்யும் தீர்மானம் உறுதி செய்யப்படுகிறது' என்றார்.

கொடிசியா தொழிற்காட்சி வளாகம் அருகில், காளப்பட்டி, விளாங்குறிச்சி கிராமத்துக்கு உட்பட்ட பூமிதான இயக்கத்துக்கு சொந்தமான 8.44 ஏக்கர் இடத்துக்கு ஆம்னி பஸ் ஸ்டாண்டை மாற்ற, மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றி, கலெக்டருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால், மாவட்ட நிர்வாகம், அரசுக்கு அறிக்கை பரிந்துரை செய்யவில்லை. 'தற்போது ஆம்னி பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளதால், நீலாம் பூர் கிராமம் சர்வே எண் 712/2ல் 6.6 ஏக்கர்; சர்வே எண் 715/1ல் 3.8 ஏக்கர் என, தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான 10.38 ஏக்கர் இடத்துக்கு மாற்றதீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் இருந்து, நில உரிமம் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

ஆதார் அடையாள அட்டைக்கு ஃபோட்டோ எடுக்க அழைப்பு

Print PDF

தினமலர்                30.01.2014

ஆதார் அடையாள அட்டைக்கு ஃபோட்டோ எடுக்க அழைப்பு

குமாரபாளையம்: "தேசிய அடையாள அட்டைக்கு ஃபோட்டோ எடுக்கும் பணி, இன்று (ஜன., 30) முதல் துவங்குகிறது' என, குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் சங்கரன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

குமாரபாளையம் நகராட்சி பகுதியில், இன்று (ஜன., 30) தேசிய அடையாள அட்டைக்கு ஃபோட்டோ எடுக்கும் பணி துவங்குகிறது. இப்பணி முதல் கட்டமாக, ஒன்றாவது வார்டுக்கு, சின்னநாயக்கன்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், 18வது வார்டுக்கு, ஹோலிகிராஸ் மெட்ரிக் பள்ளியிலும் நடக்கிறது. காலை, 10 மணி முதல், மாலை, 5 மணி வரையும் அனைத்து நாட்களிலும், (விடுமுறை நாட்கள் உள்பட) ஃபோட்டோ எடுக்கப்படும்.

ஃபோட்டோ எடுக்கவரும், ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்கள், 2010ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டு, ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், வங்கி கணக்கு பாஸ் புத்தகம் போன்ற ஆவணங்களை எடுத்து வரவேண்டும்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இப்பணிக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மற்ற வார்டுகளுக்கு, ஃபோட்டோ எடுக்கும் தேதி அவ்வப்போது தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 


Page 122 of 3988