Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்துக்கு மின் கட்டணம் செலுத்தப்பட்டது

Print PDF

தினமணி                30.01.2014

திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்துக்கு மின் கட்டணம் செலுத்தப்பட்டது

சேலம் செட்டிச்சாவடியில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளைச் செய்து வரும் நிறுவனத்துக்கு, மாநகராட்சி நிர்வாகம் புதன்கிழமை இரவு மின் கட்டணத்தை செலுத்தியது. இதையடுத்து, திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் வியாழக்கிழமை (ஜன.30) முதல் செயல்படத் தொடங்கும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சேலம் செட்டிச்சாவடி பகுதியில் இயங்கி வரும் குஜராத்தைச் சேர்ந்த ஹன்ஜர் என்ற தனியார் திடக்கழிவு மேலாண்மை நிறுவனம், மின் கட்டணம் செலுத்தாதது உள்ளிட்ட சில நிர்வாக பிரச்னைகள் காரணமாக கடந்த சில வாரங்களாக தனது பணியை நிறுத்தியது.

நிறுவனம் பூட்டப்பட்டதால் சேலம் மாநகரப் பகுதியில் சேகரமாகும் குப்பைகளை நிறுவனத்துக்கு வெளியே உள்ள இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் கொட்டி வந்தது.

இதற்கு செட்டிச்சாவடி, அதன் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

கடந்த 3 நாள்களாக மாநகராட்சியின் குப்பை லாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து திருப்பி அனுப்பினர்.

இதையடுத்து, சேலம் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் செவ்வாய்க்கிழமை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இந்த நிலையில் பிரச்னை தீவிரமடைந்ததை அடுத்து, தனியார் நிறுவனப் பிரதிநிதிகள் உடனடியாக வரவழைக்கப்பட்டனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்க் கோட்டாட்சியர் சதீஷ் தலைமையில் புதன்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

செயற்பொறியாளர் அசோகன், ஆலை நிர்வாகி நிதீம் பர்னிச்சர் வாலா, வட்டாட்சியர் சுரேஷ், காவல் உதவி ஆணையர் உதயகுமார் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

தனியார் நிறுவனப் பிரதிநிதி நிதீம் பேசும்போது, ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. அதற்கு பணம் செலுத்த 15 நாள்கள் அவகாசமும், வெளியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற 45 நாள் அவகாசமும் வழங்கும்படி கேட்டார்.

ஆனால் மாநகராட்சியும், பொதுமக்களும் இதற்கு ஒப்புக்கொள்ள மறுத்ததை அடுத்து பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

பின்னர் பிற்பகலிலும், இரவிலும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது.

இதில், தனியார் நிறுவனத்துக்கான மின்சாரக் கட்டணம் ரூ.5.70 லட்சத்தை செலுத்த மாநகராட்சி அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.

இதற்காக கேட்பு வரைவோலையை இரவோடு இரவாக மின் வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தனர்.

மின் இணைப்பு கிடைத்ததும் வியாழக்கிழமை காலை முதல் ஆலை செயல்படத் தொடங்கும் என்றும் மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

தனியார் ஆலைக்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ.20 லட்சம் செலுத்த வேண்டியிருப்பதாகவும், அந்தத் தொகையில்தான் ரூ.5.70 லட்சம் கழித்துக் கொள்ளப்படும் என்றும், இதனால் மாநகராட்சிக்கு எந்த நஷ்டமும் இல்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

 

குமாரபாளையத்தில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி இன்று முதல் தொடக்கம்

Print PDF

தினமணி                30.01.2014

குமாரபாளையத்தில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி இன்று முதல் தொடக்கம்

குமாரபாளையம் நகராட்சிப் பகுதியில் தேசிய அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கும் பணி வியாழக்கிழமை (ஜன. 30) தொடங்குகிறது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் என்.சங்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குமாரபாளையம் நகரில் தேசிய அடையாள அட்டைக்கு முதல்கட்டமாக ஒன்றாவது வார்டு மக்களுக்கு சின்னப்பநாய்க்கன்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியிலும், 18-ஆவது வார்டு மக்களுக்கு ஹோலிகிராஸ் பள்ளியிலும் புகைப்படம் எடுக்கப்படுகிறது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறும் புகைப்படம் எடுக்கும் பணிக்கு 5 வயதுக்கு மேற்பட்டோர் 2010-இல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட ஒப்புகைச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் வந்து தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

விடுமுறை நாள்களிலும் இந்தப் பணி நடைபெறும். பிற வார்டுகளில் புகைப்படமெடுக்கும் நாள், விவரம் பின்னர் அறிவிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு நகராட்சி அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

 

12 மாடுகளைப் பிடித்த நகராட்சி அதிகாரிகள்

Print PDF

தினமணி                30.01.2014

12 மாடுகளைப் பிடித்த நகராட்சி அதிகாரிகள்

திருவண்ணாமலை நகராட்சிப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த 12 மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.

 மத்திய பேருந்து நிலையம், திருவூடல் தெரு, தேரடி தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக ஏராளமான மாடுகள் சுற்றித் திரிவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. எனவே இதுபோன்று சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்க துப்புரவுப் பணியாளர்களுக்கு ஆணையாளர் பெ.விஜயலட்சுமி உத்தரவிட்டார்.

 இதையடுத்து, புதன்கிழமை காலை முதல் மாலை வரை 12 மாடுகளை துப்புரவுப் பணியாளர்கள் பிடித்து நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டி வைத்துள்ளனர். ஒவ்வொரு மாடுகளுக்கும் உரிய அபராதம் விதிக்கப்படும். அபராதம் செலுத்திய பிறகே அவை மாடுகளின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 127 of 3988