Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சீராக குடிநீர் வினியோகம் செய்வது குறித்து ஆய்வு

Print PDF

தினத்தந்தி          29.01.2014 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சீராக குடிநீர் வினியோகம் செய்வது குறித்து ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்வது குறித்து நேற்று கூட்டாய்வு நடைபெற்றது.

ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட ராஜகோபால்நகர், சின்னகண்ணுபுரம், நிகிலேசன் நகர், ராஜீவ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் வினியோகம் சரியாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் திரண்டு வந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார், தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி.த.செல்லப்பாண்டியன், மாநகராட்சி ஆணையாளர் சோ.மதுமதி ஆகியோர் நேற்று காலையில் கூட்டாய்வு மேற்கொண்டனர். மில்லர்புரம் வீட்டு வசதி காலனி, ராஜகோபால்நகர், சின்னகண்ணுபுரம், நிகிலேசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடந்தது.

நடவடிக்கை

மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். சீராக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வுக்குழுவினர் கோரம்பள்ளம் குளத்தையும் பார்வையிட்டனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள கிணறுகளையும் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கோகிலா, மாநகராட்சி என்ஜினீயர் ராஜகோபால், மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

 

உழவர்கரை நகராட்சியில் பிப்ரவரி 2 முதல் வீட்டுவரி வசூல் சிறப்பு முகாம்

Print PDF

தினமணி           29.01.2014 

உழவர்கரை நகராட்சியில் பிப்ரவரி 2 முதல் வீட்டுவரி வசூல் சிறப்பு முகாம்

உழவர்கரை நகராட்சியில் வரும் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டு வரி வசூல் சிறப்பு முகாம் நடத்தப்படும் என நகராட்சி ஆணையர் ஈஸ்வரராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வீட்டு வரி, சொத்து வரி செலுத்துவோரின் நலனைக் கருத்தில் கொண்டு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டு வரி வசூல் சிறப்பு முகாம் வரும் 2ஆம் தேதி தொடங்கி, மார்ச் 30ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

2ஆம் தேதி ரெயின்போ நகர் டான் சிறப்பு பள்ளியிலும், 9ஆம் தேதி லாஸ்பேட்டை விவேகானந்தர் பள்ளியிலும், 16ஆம் தேதி ஆலங்குப்பம் அரசு தொடக்கப் பள்ளியிலும் நடைபெறும்.

2ஆம் தேதி பாக்கமுடையான்பட்டு அரசு ஆரம்பப் பள்ளியிலும், மார்ச் 2ஆம் தேதி கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளியிலும், 9ஆம் தேதி வெங்கட்டா நகர் தமிழ்ச்சங்கக் கட்டடத்திலும் முகாம் நடைபெறுகிறது.

மேலும் 16ஆம் தேதி குறிஞ்சி நகர் சமுதாயக் கூடம், 23ஆம் தேதி சாரம் அரசு ஆரம்பப் பள்ளியிலும், 30ஆம் தேதி மேரி உழவர்கரை நகராட்சி பழைய அலுவலத்திலும் முகாம் நடைபெறும்.

மேலும், பிப்ரவரி, மார்ச் மாதங்களின் அனைத்து சனிக்கிழமைகளிலும் தட்டாஞ்சாவடி விவிபி நகர் மற்றும் ஜவஹர் நகர் நகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள வீட்டுவரி, சொத்துவரி கணினி வரி வசூல் மையங்கள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் 3 மணி வரையும் செயல்படும்.

அனைத்து வார்டுகளிலும் உள்ள வீட்டு வரி நிலுவை வைத்துள்ளோர், சொத்து வரியை செலுத்தி, ஜப்தி நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்

Print PDF

தினமணி           29.01.2014 

மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம்

திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) எம்.கே.ஜெயசேவியர், மேயர் (பொறுப்பு) பூ. ஜெகநாதன் ஆகியோர் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டனர்.

மாநகராட்சி 26-வது வார்டு எல்.ஐ.சி. மற்றும் பி அன்ட் டி காலனி குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் அளித்த மனுவில், குடிநீர் இணைப்புகளில் புளோ கண்ட்ரோல் வால்வு திட்டத்தை அமல்படுத்தியும் குடிநீர் விநியோகம் சீராகக் கிடைக்கவில்லை. இப்பகுதியில் தார்ச் சாலைகள் சேதமடைந்துள்ளது. தாமிரபதி காலனி தென்பகுதியில் இருந்து பொதிகை நகர் வரை செல்லும் அரை கி.மீ. மண் சாலையை தார்ச் சாலையாக மாற்ற வேண்டும். பி அன்டி டி காலனியில் மேற்கு எல்லையில் இருந்து பொன்விழா நகர் வரை அரை கி.மீ. தொலைவுள்ள மண் சாலையை சீரமைத்து தார்ச் சாலையாக மாற்ற வேண்டும்.

இப்பகுதியில் கூடுதலாக தெரு விளக்குகள், கூடுதலான குப்பைத் தொட்டிகள் அமைக்க வேண்டும். இப்பகுதி பெயரை குறிக்கும் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி 2ஆவது வார்டு புறவழிச்சாலையில் கழிவுநீர் ஓடை அமைக்க வேண்டும். மாநகராட்சி 33 ஆவது வார்டு ஆசுரா தெருவில் சாலையை முறையாக அளந்து சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனு அளித்தனர்.

கூட்டத்தில் மாநகராட்சி நிர்வாகப் பொறியாளர்கள் நாராயண்நாயர், சௌந்தரராஜன், மண்டலத் தலைவர்கள் கே. மாதவராமனுஜம், எஸ்.கே. ஹைதர்அலி, மாநகராட்சி உதவி ஆணையர்கள் து. கருப்பசாமி, பெருமாள், பாஸ்கரன், சாந்தி, உதவிப் பொறியாளர் அனிதா, மாமன்ற உறுப்பினர்கள் எம்.கணேஷ், வண்ணை கணேசன், உமாபதிசிவன், முகம்மதுமைதீன், நிலைக்குழுத் தலைவர் டி.எஸ். முருகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 


Page 135 of 3988