Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி

Print PDF

தினமலர்           29.01.2014 

பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி

தஞ்சாவூர்: தஞ்சையில், நகராட்சி பகுதியில் சாலைகளை, 14 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணியை நகராட்சி தலைவர் சாவித்திரி, கமிஷனர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தனர். இதனால், பல ஆண்டாக, குண்டும் குழியுமாக காட்சியளித்த சாலைகளுக்கு சாப விமோசனமும், விடிவுகாலமும் கிடைத்துள்ளது. தஞ்சை நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில், 51 வார்டுகள் உள்ளன. பல்வேறு வார்டுகளில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளித்து, பழுதாகி கிடந்தது. தமிழ்நாடு நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தில், 14 கோடியே, 21 லட்சம் ரூபாய் நிதியை முதல்வர் ஜெ., ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, தஞ்சை நகராட்சியில் பல்வேறு பகுதிகளில் சிதிலமடைந்த குண்டு குழி சாலைகளை சீரமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. தஞ்சை நகராட்சிக்கு உட்பட்ட, 37வது வார்டிலுள்ள விக்டோரியா நகர், ஆதிசேஷன் தெருவில் சாலை சீரமைப்பு பணியை நகராட்சி தலைவர் சாவித்திரி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், இன்ஜினியர் சீனிவாசன், உதவி இன்ஜினியர்கள் முத்துலட்சுமி, சங்கீத பிரியா, கவுன்சிலர் சிவக்குமார், அ.தி.மு.க., வார்டு செயலாளர் கிருபாகரன் பங்கேற்றனர்.

தஞ்சை நகராட்சி தலைவர் சாவித்திரி கூறியதாவது: முதல்வர் உத்தரவுப்படி, நகராட்சி சாலைகளை சீரமைக்க, 14 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தஞ்சை நகராட்சி பகுதியில், 51 வார்டுகளிலும் சீரமைக்காமல் இருந்த சாலைகள், 4 பிரிவாக பிரித்து, தார் சாலை போடும் பணி மேற்கொள்ளப்படும். இதன்படி, 6,840 மீ., இரண்டு கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒரு பிரிவாகவும், 8,240 மீ., 3 கோடி ரூபாய் மதிப்பில் மற்றொரு பிரிவாகவும், 11ஆயிரத்து,920 மீ., 4 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பில் மூன்றாம் பிரிவாகவும், 10ஆயிரத்து,190 மீ., 4 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பில் நான்காவது பிரிவாகவும் பணிகள் நடக்கவுள்ளது. தரமாகவும், விரைவாகவும் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, தஞ்சையில் முதல்வர் உத்தரவாலும், நகராட்சி அதிரடி நடவடிக்கையாலும் பழுதான சாலைகளுக்கு சாப விமோசனம் கிடைத்துள்ளது. கடந்த முறை தி.மு.க., நகராட்சி தலைவர் பொறுப்பு வகித்தது முதல் இதுவரை, பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாக குட்டை போல மழை நீர் தேங்கிய தெருக்களுக்கு விடிவு காலம் பிறந்துள்ளது. இனிமேல் நகர தெருக்களில் டூவீலர், ஆட்டோ பயணிகள் அவதிப்பட வேண்டியதில்லை என, தஞ்சை நகர மக்கள் தெரிவித்தனர்.

 

தாம்பரம் நகராட்சி மண்டபம் ரூ.80 லட்சம் செலவில் புதுப்பிப்பு

Print PDF

தினமலர்           29.01.2014 

தாம்பரம் நகராட்சி மண்டபம் ரூ.80 லட்சம் செலவில் புதுப்பிப்பு

தாம்பரம் : தாம்பரம் நகராட்சிக்கு சொந்தமான, அம்பேத்கர் திருமண மண்டபம், 80 லட்சம் ரூபாய் செலவில், 'பயோகாஸ்' மூலம் மின் உற்பத்தி செய்யும் வசதியுடன், புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

மேற்கு தாம்பரம், 35வது வார்டு, முத்துலிங்கம் தெருவில் நகராட்சிக்கு சொந்தமான அம்பேத்கர் திருமண மண்டபம் உள்ளது. போதிய இடசவதி இருந்தும், திருமண அரங்கு மற்றும் சாப்பிடும் அறை, சிறியதாக இருந்தன. அதனால், 80 லட்சம் ரூபாய் செலவில் மண்டபத்தை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

விதவிதமான விளக்குகள் கொண்ட, மேற்பூச்சுகளுடன் கூடிய திருமண அரங்கு, காய்கறி கழிவுகளில் இருந்து எடுக்கப்படும் 'பயோகாஸ்' மூலம் மின் உற்பத்தி செய்யும் வசதி, ஒரேநேரத்தில் 700 பேர் பேர் அமர்ந்து சாப்பிட வசதியான அரங்கு, வாகன நிறுத்த வசதி, மணமகன், மணமகள் அறைகள் உள்ளிட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய ஐந்து அறைகள், இரண்டு சாதாரண அறைகள் ஆகியவை அந்த மண்டபத்தில் அமைகின்றன.

இதுவரை, 80 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டன. இன்னும் ஒரு மாதத்தில் பணி முடிந்து, பயன்பாட்டிற்கு திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

பழைய மாநகராட்சி கட்டிடம் இடிக்கும் பணி துவக்கம்

Print PDF

தினமலர்           29.01.2014 

பழைய மாநகராட்சி கட்டிடம் இடிக்கும் பணி துவக்கம்
    
சேலம்: சேலத்தில், புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டப்படுவதால், பழமையான கட்டிடங்கள் இடிக்கும் பணி, நேற்று துவங்கியது. சேலம் நகராட்சி, 1866ல், துவங்கப்பட்டு, 1979, ஏப்ரல், 1ல், சிறப்பு நிலை நகராட்சியாகவும், 1994, ஜூன், 1ல், மாநகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இங்குள்ள சுகாதாரப்பிரிவு கட்டிடம், 147 ஆண்டுக்கு முன், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. அதன் பின், 1958 மற்றும் 1963ல், அடுத்தடுத்து, ஒரு கட்டிடம் எழுப்பப்பட்டது. நகராட்சி நூற்றாண்டு விழாவின் போது, 1966ல், ராஜாஜி பெயரில் மன்ற கூட்ட அரங்கம் கட்டப்பட்டது. 2003ல், மேயர் அலுவலகம் கட்டப்பட்டது.

எனவே, நிர்வாக வசதிக்கு கட்டிடங்கள் போதுமானதாக இல்லை. ஆதலால், பழமை வாய்ந்த மாநகராட்சி கட்டிடங்களை இடித்து, நவீன வசதிகளுடன், இரு அடுக்குகள் கொண்ட, ஒருங்கிணைந்த கட்டிடம் கட்ட, 7.69 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, கட்டுமான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. அதற்காக, மாநகராட்சி அலுவலகம், தற்காலிகமாக தொங்கும் பூங்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கட்டுமானப்பணியை மேற்கொள்ளும், ஆர்.ஆர். துளசி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனம், பழைய மாநகராட்சி கட்டிடங்களை இடிக்கும் பணியை, நேற்று துவங்கியுள்ளது. மூன்று மாதங்களில், கட்டிடங்களை இடித்து, தரைமட்டமாக்கிய பின், பூமிபூஜை போட்டு, புதிய கட்டுமான பணிகள் துவங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 


Page 139 of 3988