Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

குடியரசு தின விழா: சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சிப் பணியாளர்களுக்கு சான்றிதழ்கள்

Print PDF

தினமணி          27.01.2014 

குடியரசு தின விழா: சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சிப் பணியாளர்களுக்கு சான்றிதழ்கள்

திருச்சி மாநகராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவில் 25 ஆண்டுகள் மாசற்ற பணிபுரிந்த 33 பணியாளர்களுக்கு  பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மாநகராட்சி மைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தேசியக் கொடியேற்றிய மேயர் அ.ஜெயா இந்த சான்றிதழ்களை வழங்கினார்.

வைகுண்ட ஏகாதசி திருவிழா பணிகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள்,  பேருந்து விரைவுத் திட்டம் மற்றும் நவீன ஆட்டிறைச்சி கூடம் அமைக்க கருத்துரு தயார் செய்த அலுவலர்கள், பஞ்சப்பூர் பூங்கா அமைக்கும் பணியில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், பூங்கா பராமரிப்புப் பணிகள் மேற்கொண்ட அலுவலர் ஆகியோருக்கும், மாநகராட்சிப் பள்ளி கலைநிகழ்ச்சிகள்,  யோகாசனப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை மேயர் வழங்கினார். பிளாஸ்டிக் உபயோகத்தை கட்டுப்படுத்தும் பணியை மேற்கொண்ட சுகாதார ஆய்வாளர்கள் 5 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திலுள்ள மகாத்மாகாந்தியடிகள் அஸ்தி மண்டபம், போர்வீரர்கள் நினைவுத் தூணில் மலரஞ்சலி செலுத்திய மேயர், காந்தி மார்க்கெட்டிலுள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.

இந்த நிகழ்வுகளில் துணை மேயர் மரியம் ஆசிக், ஆணையர் வே.ப. தண்டபாணி, கோட்டத் தலைவர்கள்  ஜெ.சீனிவாசன், எம். லதா, என். மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

"வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை'

Print PDF

தினமணி          27.01.2014 

"வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை'

பெங்களூரு மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அந்த மாநகராட்சியின் வார்டு அளவிலான வளர்ச்சிக் குழுத் தலைவர் பசவராஜ் தெரிவித்தார்.

பெங்களூருவில் சனிக்கிழமை பேட்டராயனபுரா, பீன்யா தாசரஹள்ளிப் பகுதிகளில் ஒப்பந்ததாரர்களுக்கு ஒற்றை சாளரமுறையில் வளர்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளியை வழங்கிய பின்னர், அவர் பேசியது:

கடந்த காலங்களில் ஒப்பந்தப்புள்ளி கோருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டதால் எந்த வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை.

இதைக் கருத்தில் கொண்டு, ஒற்றை சாளரமுறையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், பெங்களூருவில் வளர்ச்சிப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். மக்கள் தொகை அதிகரித்து வரும் பெங்களூருவில் வளர்ச்சிப் பணிகள் தாமதமாவதால், பொதுமக்கள் பாதிப்புள்ளாகின்றனர்.

மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு கர்நாடக அரசு ரூ. 300 கோடி விடுவித்துள்ளது. இதையடுத்து, 198 வார்டுகளிலும் ஒரே நேரத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

முன்னதாக, மாநகராட்சிக்குள்பட்ட பேட்டராயனபுரா அலுவலகத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்த தகவல் பலகையை எம்.எல்.ஏ. விஸ்வநாத், பசவராஜ் இணைந்து தொடங்கிவைத்தனர். நிகழ்ச்சியில் துணைமேயர் இந்திரா, தோட்டக்கலை நிலைக்குழுத் தலைவர் முனிராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ரங்கண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்ற வேண்டும்

Print PDF

தினமணி          27.01.2014 

அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்ற வேண்டும்

சுற்றுப்புறச் சூழல், சுகாதாரத்தில் முதன்மை மாநகரம் என்ற நிலையை அடைய மாநகராட்சியின் அனைத்துத் தரப்பு அலுவலர்களும், மக்கள் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்ற வேண்டும் என்று குடியரசு தினவிழாவில் மேயர் அ.விசாலாட்சி ஞாயிற்றுக்கிழமை பேசினார்.

 திருப்பூர் மாநகராட்சியில், 65-ஆவது குடியரசு தினவிழா மேயர் அ.விசாலாட்சி தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் சு.குணசேகரன் முன்னிலை வகித்தார். மாநகரப் பொறியாளர் எம்.ரவி வரவேற்றார்.

 இதில், தேசியக்கொடியேற்றி மேயர் அ.விசாலாட்சி பேசியது:

உலகம் வியந்து பார்க்கும் ஈடு இணையற்ற அரசியல் அமைப்புச் சட்டம் நம்முடையது. வேற்றுமையில் ஒற்றுமையை காணும் நாடு இந்தியா.

  தமிழகத்தில்,  சுத்தம், சுகாதாரம், சுற்றுப்புறச் சூழலின் நலன் காக்க முதல்வர் பல்வேறு திட்டங்களையும், அதற்கான நிதியையும் வழங்கி வருகிறார்.  பொதுசுகாதாரத்தின் மீது தனி அக்கறை செலுத்தி வருகிறார் முதல்வர். இந்த ஆண்டில் ரூ. 10 கோடி செலவில் நவீன சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு உத்தரவிட்டுள்ளார். ரூ. 170 கோடி செலவில் ஏற்கனவே மகளிருக்கான அடிப்படை சுகாதார வசதிகள் முதல்வரின் ஆட்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.   திருப்பூர் பகுதியில் சுத்தத்தையும், சுகாதாரத்தையும் பேணிப் பாதுகாக்க நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சுற்றுப்புறச் சூழலில் முதன்மையான மாநகரம் திருப்பூர் மாநகரம் என்ற நிலையை அடைய, மாநகராட்சியின் அனைத்துத் தரப்பு அலுவலர்களும், மக்கள் பிரதிநிதிகளும், மக்களும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையாற்ற வேண்டும் என்றார்.

  கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற  மாணவ, மாணவிகளுக்கு மேயர், துணை மேயர்

ஆகியோர் பரிசுகளை வழங்கினர். அதன்பின், மாணவ, மாணவியர் பேரணி நடைபெற்றது. பேரணியாகச் சென்று, குமரன் சாலையில் உள்ள திருப்பூர் குமரன் நினைவிடத்தில் மேயர் அ.விசாலாட்சி, துணை மேயர் சு.குணசேகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 இவ் விழாவில், மண்டலத் தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், ஜான், கிருத்திகா சோமசுந்தரம், டெக்ஸ்வெல் முத்து, கவுன்சிலர்கள், எம்.ஜி.ஆர்.மன்றச் செயலாளர் கருவம்பாளையம் மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

 


Page 143 of 3988