Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

குடிசை மாற்று வாரியத்துக்கு ரூ. 8 கோடி

Print PDF

தினமணி          27.01.2014 

குடிசை மாற்று வாரியத்துக்கு ரூ. 8 கோடி

சென்னையில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகங்களின் சுகாதார பணிகளுக்காக மாநகராட்சியின் நிதி ரூ. 8.36 கோடி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

இது குறித்து சென்னை மாநகராட்சி சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் சுமார் 195 குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகங்கள் உள்ளன.

இவற்றில் 156-க்கு மேற்பட்ட குடியிருப்புகளின் பின்புறம் கான்கிரீட் சாலை அமைத்தல், கழிவுநீர் குழாய்களை பழுதுபார்த்தல், குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள ரூ. 20 கோடி தேவைப்படும் என்று குடிசை மாற்று வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் முதல்கட்டமாக ரூ.1.87 கோடிக்கான காசோலையை மேயர் மற்றும் ஆணையர் கடந்த 6-ஆம் தேதி வழங்கினர்.

தற்போது மீண்டும் ரூ.8.36 கோடிக்கான காசோலையை மேயர் சைதை துரைசாமி, ஆணையர் விக்ரம் கபூர் ஆகியோர் குடிசைமாற்று வாரிய தலைமைப் பொறியாளர் ஆர். ஜெயபாலிடம் சனிக்கிழமை வழங்கினர் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வீடு வீடாக வாக்காளர் அட்டை விநியோகம்: செல்போன் எண், கையொப்பம் வாங்க உத்தரவு

Print PDF

தினமணி          27.01.2014 

வீடு வீடாக வாக்காளர் அட்டை விநியோகம்: செல்போன் எண், கையொப்பம் வாங்க உத்தரவு

வாக்காளர் அடையாள அட்டையை வீடு வீடாக வழங்கி, வாக்காளர்களின் செல்போன் எண் மற்றும் கையொப்பம் வாங்க சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் கடந்த 10-ஆம் தேதி வெளியிடப்பட்டது. பட்டியலில் புதிதாக சேர்ந்தவர்கள் மற்றும் திருத்தம் மேற்கொண்டவர்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்த நிலையில், தேசிய வாக்காளர் தினமான சனிக்கிழமை வாக்காளர் அட்டை விநியோகம் செய்யும் பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, பட்டியலில் புதிதாக சேர்ந்த இளம் வாக்காளர்களுக்கு அந்தந்த வாக்குச் சாவடிகளில் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. திருத்தம் மேற்கொண்டவர்களும் வாக்குச் சாவடிகளில் அட்டைகளை பெற்றனர்.

சென்னை முழுவதும் மாநகராட்சி தேர்தல் பணியாளர்கள் வீடுவீடாக சென்று புதிய வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்குவர். அவ்வாறு அட்டைகளை வழங்கும்போது, வாக்காளர்களிடம் அட்டை பெற்றதற்கான கையொப்பம் மற்றும் செல்போன் எண் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: வாக்காளர் அட்டை விநியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வீடு வீடாக அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் உடனடியாக தொடங்கப்படும். இந்த பணியை மாநகராட்சி தேர்தல் பணியாளர்கள் மேற்கொள்வார்கள். அடையாள அட்டைகள் தவறாமல் வாக்காளர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அடையாள அட்டைகளை வழங்கும் போது அட்டை பெற்றதற்கான கையொப்பம் மற்றும் செல்போன் எண் பெற பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் அனைவருக்கும் அட்டைகள் முழுமையாக விநியோகம் செய்யப்படுவது உறுதி செய்யப்படும்.

அட்டைகள் அவசரமாக தேவைப்பட்டால், மாநகராட்சி அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்.

அதேவேளையில், கடந்த முறை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கத் தவறியவர்கள், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரையில் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என்றனர்.

விழிப்புணர்வு மாரத்தான்: தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான தேர்தல் விழிப்புணர்வு மினி மாரத்தான், சென்னை மெரீனா கடற்கரையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதனை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான விக்ரம் கபூர் வெண் புறாவை பறக்கவிட்டு தொடங்கி வைத்தார்.

 

சென்னையில் குடியரசு தின விழா

Print PDF

தினமணி          27.01.2014 

சென்னையில் குடியரசு தின விழா

சென்னை மாநகராட்சி மற்றும் சென்னையில் உள்ள பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் 65-ஆவது குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

ரிப்பன் கட்டடத்தில்...

சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டட வளாகத்தில் நடந்த குடியரசு தின விழாவில், மேயர் சைதை துரைசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தேசிய மாணவர் படை மற்றும் சாரண, சாரணியரின் அணிவகுப்பு மாõயாதையை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள், மருத்துவ அலுவலர்கள், செயற்பொறியாளர்கள் உள்ளிட்டோருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெüரவித்தார்.

2013-14-ஆம் ஆண்டு நல்லாசிரியர் விருதுபெற்றவர்களுக்கும் கேடயங்களையும் அவர் வழங்கினார். செண்பகப்பூ மற்றும் செüந்தரியம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, இந்தியன் வங்கி கிளைகளின் மூலம் வழங்கப்பட்ட தலா ரூ. 5 லட்சத்துக்கான காசோலையை மேயர் வழங்கினார். மேலும், 71 பயனாளிகளுக்கு தனி நபர் கடனாக ரூ.1.06 கோடிக்கான காசோலைகளையும், 21 அண்டை வீட்டுக் குழுக்களுக்கு ரூ.33 லட்சத்துக்கான காசோலைகளையும் அவர் அளித்தார்.

விழாவில் சென்னை மாநகராட்சி துணை மேயர் பெஞ்சமின், ஆணையர் விக்ரம் கபூர், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலத்தில்...

சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய வளாகத்தில் நடந்த விழாவில், மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யர், தேசியக் கொடியை ஏற்றி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் பா.ஜோதி நிர்மலா, அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

எழிலகத்தில்...

சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள வருவாய் ஆணையர் அலுவலத்தில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில், கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஸ்ரீதர், தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர்(பேரிடர் மேலாண்மை) ஆஷிஷ் சாட்டர்ஜி, இணை ஆணையர் ஜெயராமன், சமூகப் பாதுகாப்புத் திட்ட இயக்குநர் மலர்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தியன் வங்கி...

ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் வங்கியின் கார்ப்பரேட் அலுவலகம் மற்றும் ராஜாஜி சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில், வங்கியின் செயல் இயக்குநர் எம்.கே.ஜெயின், தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் துணைப் பொது மேலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குடியரசு தினத்தையொட்டி, மூத்த குடிமக்களுக்காக இலவச கண் சிகிச்சை முகாமுக்கு இந்தியன் வங்கி ஏற்பாடு செய்திருந்தது.

அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில்...

குடியரசு தினத்தையொட்டி, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில், மருத்துவமனை வளாகத்தில் ரத்ததானம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இதில் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி, சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மனித உரிமைகள் ஆணையத்தில்...

ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணைய வளாகத்தில் நடந்த குடியரசு தினவிழாவில், ஆணையத் தலைவர் ஜெயந்தி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு ஏ.டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன், உதவி ஆய்வாளர், பதிவாளர் துரைசாமி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

 


Page 146 of 3988