Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர், மேயராக பொறுப்பு ஏற்றார்

Print PDF

தினத்தந்தி             25.01.2014 

தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர், மேயராக பொறுப்பு ஏற்றார்

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் எல்.சசிகலா புஷ்பா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, துணை மேயர் சேவியர், மேயராக பொறுப்பு ஏற்றார்.

மேல்சபை வேட்பாளர்கள்

தூத்துக்குடி மாநகராட்சி மேயரும், மாநில மகளிர் அணி செயலாளருமான எல்.சசிகலா புஷ்பா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் என்.சின்னத்துரை ஆகியோர் டெல்லி மேல்சபை அ.தி.மு.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தனர்.

அதற்கான கடிதத்தை மேயர் சசிகலா புஷ்பா, ஆணையாளர் மதுமதியிடம் கொடுத்தார். அதேபோல் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை, தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மாவட்ட பஞ்சாயத்து செயலாளர் கஸ்தூரியிடம் கொடுத்தார்.

மாநகராட்சி கூட்டம்


இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர்கள் அவசர கூட்டம் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு துணை மேயர் சேவியர் தலைமை தாங்கினார். அப்போது அவர், மேயர் அணியும் அங்கியை அணிந்து இருந்தார்.

கூட்டத்தில் துணை மேயர் சேவியர் பேசும்போது, “தூத்துக்குடி மாநகராட்சி மேயர் சசிகலா புஷ்பா டெல்லி மேல்-சபை வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதையொட்டி அவர் தனது பதவியை ராஜினா செய்துள்ளார். இந்த தகவல் கவுன்சிலர்கள் கூட்டத்தில் பதிவுக்கும் பார்வைக்கும் வைக்கப்படுகிறது“ என்றார்.

தொடர்ந்து ஆணையாளர் மதுமதி பேசும்போது, “மேயர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதால், துணை மேயர் சேவியர், மேயர் பொறுப்பு வகிப்பார்“ என்றார்.

இதைத்தொடர்ந்து கூட்டம் நிறைவடைந்தது.

பஞ்சாயத்து கூட்டம்

இதேபோல் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் பஞ்சாயத்து கூட்டம் நடந்தது. கூட்டத்தில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து பஞ்சாயத்து தலைவராக, துணை தலைவர் தெய்வேந்திரன் பொறுப்பு வகிக்கிறார்.

கூட்டத்தில் டெல்லி மேல் - சபை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சின்னத்துரையும் கலந்து கொண்டார். அவர், தன்னை டெல்லி மேல்-சபை வேட்பாளராக அறிவித்த முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

 

மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு "பாலியல் விழிப்புணர்வு' ஆலோசனை

Print PDF

தினமணி             25.01.2014 

மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு "பாலியல் விழிப்புணர்வு' ஆலோசனை

வடக்கு தில்லி மாநகராட்சிப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு ஆலோசனை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத் திட்டத்தைத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த மாநகராட்சிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

பள்ளி மாணவிகளிடம் தவறான எண்ணத்துடன் தொட்டுப் பழகுவது, அவர்களைத் தவறாகப் பயன்படுத்துவது போன்றவை தொடர்பாக புகார்கள் வெளியாகும் நிலையில், இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வடக்கு தில்லி மாநகராட்சி பொதுமக்கள் தொடர்பு அதிகாரி யோகேந்திர  சிங் மான் கூறியது: மாணவிகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், "எது நல்ல தொடுகை, எது கெட்ட தொடுகை' என்பது குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத் திட்டம் "பிளான் அண்ட் எஸ்ஏஆர்டி' போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து கல்வித் துறையால் மேற்கொள்ளப்படும்.

இதற்கு உளவியலாளர்கள், நல ஆலோசகர்களை சம்பந்தப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனம் அளித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும். மேலும், ஆபத்தான சூழலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்படும்.

மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகாமல் இருக்கும் வகையில், உரிய கண்காணிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வகையில், இந்த நிதியாண்டில் மாநகராட்சிப் பள்ளிகளில் பாதுகாவலர்களை நியமிக்கவும், கண்காணிப்புக் கேமராக்களை நிறுவுவதற்கும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பள்ளி வளாகங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவுவதற்காக ரூ. 300 கோடி மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சி மூலம் இயக்கப்படும் பள்ளிகளில் நல்ல வகையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அவர்.

வடக்கு தில்லி மாநகராட்சி ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை, காலணிகள், காலணி உறைகள் ஆகியவை கொள்முதல் செய்வதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 500 முன்மொழியப்பட்டுள்ளது. நர்சரி மாணவருக்கு அளிக்கப்படும் இதற்கான ரூ. 310 தொகையை ரூ. 500 ஆக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் நிலைக் குழுத் தலைவர் மோகன் பரத்வாஜ் பேசுகையில் இதைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

பெங்களூருவில் மாநகராட்சி ஏரிகள், பள்ளிகளை பராமரிக்க தனியார் நிறுவனங்கள் முடிவு

Print PDF

தினமணி             25.01.2014 

பெங்களூருவில் மாநகராட்சி ஏரிகள், பள்ளிகளை பராமரிக்க தனியார் நிறுவனங்கள் முடிவு

பெங்களூரு மாநகராட்சிக்குச் சொந்தமான ஏரிகள், பள்ளிகளைப் பராமரிக்க தனியார் தொழில் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இதற்காக "நம்ம பெங்களூரு நம்முடைய பங்களிப்பு' என்ற திட்டத்தை கர்நாடக முதல்வர் சித்தராமையா அடுத்த மாதம் தொடக்கிவைக்கிறார்

இதுகுறித்து பெங்களூருவில் வெள்ளிக்கிழமை மேயர் சத்தியநாராயணா செய்தியாளர்களிடம் கூறியது:

பெங்களூருவில் மாநகராட்சிக்கு சொந்தமான ஏரிகள், பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள், சாலைகள், மருத்துவமனைகளை சமூகப் பொறுப்புடன் தத்தெடுத்து நிர்வகிக்க பல தொழில் நிறுவனங்கள் முன் வந்துள்ளன.

இதற்காக பிப்ரவரி 2-வது வாரத்தில் "நம்ம பெங்களூரு நம்முடைய பங்களிப்பு' என்ற திட்டத்தை முதல்வர் சித்தராமையா தொடக்கிவைக்கிறார்.

 இந்தத் திட்டத்தின்படி, தனியார் நிறுவனங்களுடன் 3 ஆண்டுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும்.

"நம்ம பெங்களூரு நம்முடைய பங்களிப்பு' என்ற திட்டத்தின் மூலம் பெங்களூருவில் 154 பள்ளிகள், 5 ஏரிகள், பல சாலைகள், பூங்காக்கள், மருத்துவமனைகள் வளர்ச்சி பெறும்.

இதைக் கண்காணிக்க மாமன்ற உறுப்பினர் சதாசிவா தலைமையில் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் தூய்மை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த குறும்படம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.  பேட்டியின் போது, மாநகராட்சி ஆணையர் லட்சுமிநாராயணா, மாநகராட்சி ஆளும் கட்சித் தலைவர் அஸ்வத்நாராயண கெüடா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 


Page 155 of 3988