Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

நிலுவையைச் செலுத்தாத குத்தகைதாரர்களின் கடை உரிமம் ரத்து

Print PDF

தினமணி             25.01.2014 

நிலுவையைச் செலுத்தாத குத்தகைதாரர்களின் கடை உரிமம் ரத்து

திருநெல்வேலி மாநகராட்சியின் கடைகளுக்கான குத்தகை நிலுவையைச் செலுத்தாதவர்களின் குத்தகை உரிமம் ரத்து செய்யப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக, பாளையங்கோட்டை மண்டல மாநகராட்சி நிர்வாக அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாநகராட்சியின் பாளையங்கோட்டை மண்டலத்துக்குள்பட்ட மாநகராட்சிக் கடைகளை குத்தகைக்கு எடுத்துள்ள குத்தகைதாரர்கள், ஒப்பந்த விதிப்படி மாதந்தோறும் 10ஆம் தேதிக்குள் வாடகையைச் செலுத்தவேண்டும். தவறும்பட்சத்தில் உரிமம் ரத்து செய்யப்படும். ஆனால், பாளையங்கோட்டை மண்டலத்தில் கடைகளை வாடகைக்கு எடுத்துள்ளவர்கள் பலமுறை அறிவிப்புகள் வழங்கியும் குத்தகை தொகை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர்.

எனவே, நிலுவையில் உள்ள வாடகையை விரைந்து செலுத்த வேண்டும். இல்லையெனில், முன்அறிவிப்பு இல்லாமல் குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டு மறு ஏலத்துக்கு கொண்டுவரப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

 

பத்மநாபபுரம் நகராட்சியில் ரூ.6.30 லட்சத்தில் சி.எப்.எல். விளக்குகள்

Print PDF

தினமணி             25.01.2014 

பத்மநாபபுரம் நகராட்சியில் ரூ.6.30 லட்சத்தில் சி.எப்.எல். விளக்குகள்

பத்மநாபபுரம் நகராட்சிக்குள்பட்ட 21 வார்டுகளிலும் ரூ.6.30 லட்சத்தில் சி.எப்.எல். விளக்குகள் அமைப்பது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

பத்மநாபபுரம் நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.ஆர். சத்யாதேவி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் பீர்முகம்மது, ஆணையர் மேத்யூ ஜோசப், பொறியாளர் கிரேஸ் அன்னபெர்லி, சுகாதார அலுவலர் டெல்விஸ்ராஜ், உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியவுடன், பத்மநாபபுரம் நகராட்சியின் புதிய கட்டடத்தை கடந்த 30-ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

கூட்டம் தொடங்கியவுடன், கூட்டப்பொருளில் 21 வார்டுகளிலும் சூரியஒளி மின்விளக்கு அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளது. நான்கு மாதங்களுக்கு மேல் சூரியஒளி மின் விளக்கு பயன்படாது. எனவே சூரிய மின்விளக்கு தேவையில்லை எனஉறுப்பினர் ஹரிகுமார் கூறினார். இதை அனைத்து உறுப்பினர்களும் ஆமோதித்தனர்.

இதையடுத்து 21 வார்டுகளிலும் சி.எப்.எல். விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர். சத்யாதேவி பேசுகையில், தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம் சார்பில் மதுரையில் இம்மாதம் 27-ம் தேதி முதல் பிப்ரவரி 6-ம் தேதி வரை நகராட்சி உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பெண் உறுப்பினர்களுக்கும், தலைவர்களுக்கும் பிப்ரவரி 7-ம் தேதி திருநெல்வேலியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. எனவே இந்த பயிற்சி முகாமில்  அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.

 

ஐஏஎஸ் பயிற்சி அலுவலர்கள் திருச்சி மாநகராட்சியில் களஆய்வு

Print PDF

தினமணி             25.01.2014 

ஐஏஎஸ் பயிற்சி அலுவலர்கள் திருச்சி மாநகராட்சியில் களஆய்வு

ஐஏஎஸ் பயிற்சி அலுவலர்கள் 17 பேர் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும் உள்ளாட்சி நிர்வாக நடைமுறைகள் குறித்த களஆய்வுப் பயிற்சியை வெள்ளிக்கிழமை மேற்கொண்டனர்.

  மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மேயர் அ. ஜெயா, ஆணையர் வே.ப. தண்டபாணி ஆகியோர் ஐஏஎஸ் பயிற்சி அலுவலர்களுக்கு மாநகராட்சி நடைமுறைகளை விளக்கினர்.

  சுகாதாரப் பணிகள், குடிநீர் விநியோகம், புதை சாக்கடைத் திட்டம், பிறப்பு- இறப்புப் பதிவு போன்றவை குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது. நகரப் பொறியாளர் ஆர். சந்திரன், செயற்பொறியாளர்கள் எஸ். அருணாசலம், எஸ். நாகேஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  ஐஏஎஸ் பயிற்சி அலுவலர்கள் குழுவுக்கு ஆட்வர்டு குமார் சிங் தலைமை ஏற்று அழைத்து வந்திருந்தார்.

 


Page 156 of 3988