Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பிப். 28க்குள் வரிகளை செலுத்த காரைக்குடி நகராட்சி வேண்டுகோள்

Print PDF

தினமணி             22.01.2014 

பிப். 28க்குள் வரிகளை செலுத்த காரைக்குடி நகராட்சி வேண்டுகோள்

காரைக்குடி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை, குடிநீர் இணைப்பிற்கு செலுத்த வேண்டிய கூடுதல் வைப்புத்தொகை ஆகிய அனைத்துவித வரிகளையும் வரும் பிப்ரவரி 28-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு)பொ. மாரியப்பன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: இந்நகராட்சியில் அத்தியாவசிய வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது.

 அதற்காக வரிகளை செலுத்த பொது மக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. வரி செலுத்தாத நபர்களின் மீது சட்டபூர்வ நடவடிக்கை மற்றும் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 வரி செலுத்தாமல் நிலுவை வைத்திருப்போர் பட்டியலை முகவரியுடன் பஸ் நிலையத்தில் பிளக்ஸ் பெயர் பலகை வைக்கவும் நாளிதழில் பிரசுரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 வரி செலுத்தாதோரின் வீடுகளில் மின் இணைப்பை துண்டிப்புச்செய்ய தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பரிந்துரைக்கப்படும். பணம் செலுத்துவதற்கு வசதியாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள்களிலும் கல்லுக்கட்டி குடிநீர் தேக்கத்தொட்டி வசூல் மையமும், நகராட்சி அலுவலகத்தில் உள்ள கணினி வசூல் மையமும் இயங்கும் என்றார்.

 

திருமழிசை பேரூராட்சியில் திறப்பு விழாவுக்கு தயாராகும் பாதாளச் சாக்கடைத் திட்டம்

Print PDF

தினமணி             22.01.2014 

திருமழிசை பேரூராட்சியில் திறப்பு விழாவுக்கு தயாராகும் பாதாளச் சாக்கடைத் திட்டம்

திருமழிசை பேரூராட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன.

இதனைத்தொடர்ந்து இத்திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் வகையில் தமிழக முதல்வரால் தொடங்கிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது திருமழிசை பேரூராட்சி.

இந்த பேரூராட்சிக்கு உள்பட்ட 21 கிலோமீட்டர் நீள சுற்றளவுக்கு பாதாளச் சாக்கடை அமைக்க திட்டமிடப்பட்டு அதற்காக ரூ.20.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதற்கான பணிகள் கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன.

இதையடுத்து பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதமடைந்து நிதிப்பற்றாக்குறையும் ஏற்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு கூடுதல் நிதியாக ரூ.10.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மொத்தம் ரூ.30.60 கோடியில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.

கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இப்பணி தற்போது 97 சதவீதம் முடிவடைந்துள்ளது. தற்போது சில இடங்களில் வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், 15 தினங்களில் அப்பணிகளும் நிறைவடைந்துவிடும் எனவும் பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதையொட்டி அடுத்த மாதத்தில் தமிழக முதல்வரால் காணொலிக் காட்சி (விடியோ கான்பிரன்ஸ்) மூலம் இத்திட்டத்தை தொடங்கிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இத்திட்டத்தில் மக்களிடம் இருந்து பெற வேண்டிய கட்டணம் மற்றும் வைப்புத்தொகை விவரம்:

பாதாளச் சாக்கடைத் திட்டத்தின் மூலம் வீடுகளின் இணைப்புகளுக்காக வைப்புத் தொகை மற்றும் மாதாந்திரக் கட்டணமும் வசூலிக்கப்படவுள்ளது.

இதையொட்டி திருமழிசை பேரூராட்சியில் 300 சதுர அடி கொண்ட வீட்டுக்கு வைப்புத்தொகை ரூ.3 ஆயிரம், மாதக்கட்டணமாக ரூ.75 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், 300 முதல் 600 சதுர அடி கொண்ட வீட்டுக்கு ரூ.10 ஆயிரம் வைப்புத்தொகை, ரூ.150 மாதக் கட்டணம், 600 முதல் 1000 சதுர அடிக்கு ரூ.15 ஆயிரம் வைப்புத்தொகை, ரூ.200 மாதக்கட்டணம், 1000 முதல் 2 ஆயிரம் சதுர அடி வரை ரூ.25 ஆயிரம் வைப்புத்தொகை, ரூ. 250 மாதக்கட்டணம், 2 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள வீடுகளுக்கு ரூ.40 ஆயிரம் வைப்புத் தொகை, ரூ.500 மாதக் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் திருமண மண்டபங்கள் மற்றும் பெரிய வணிக வளாகங்கள் ஆகியவற்றுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை மற்றும் மாதக்கட்டணம் ரூ.2,500 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 

187 தெருநாய்களுக்கு கருத்தடை

Print PDF

தினமணி             22.01.2014 

187 தெருநாய்களுக்கு கருத்தடை

நந்திவரம்- கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்தில் தெருநாய்கள் அடுத்தடுத்து 7 பேரை கடித்த சம்பவத்தின் எதிரொலியாக 187 தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு கூடுவாஞ்சேரியை அடுத்த நந்திவரம் வள்ளி நகரில் பள்ளி மாணவி தனபிரியாவை (4), தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. இதைடுத்து நாய்கள் கருத்தடை மையம் அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.

அதன் பேரில் நந்திவரம் கால்நடை மருத்துவமனை அருகில் ரூ.5 லட்சம் மதிப்பில் நாய்கள் கருத்தடை மையம் கட்டப்பட்டது.  இந்நிலையில் கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் கடந்த 9-ஆம் தேதி மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 4 மாணவர்கள் மற்றும் சாலையில் நடத்துச் சென்றுக் கொண்டிருந்த 2 பெண்கள் உள்பட 7 பேரை அங்கு சுற்றித்திரிந்துக் கொண்டிருந்த வெறிபிடித்த நாய் கடித்தது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.  அதன் எதிரொலியாக நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி ஊழியர்கள் அப்பகுதிகளில் சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் குற்றாலிங்கம் கூறியது: சென்னை வேளச்சேரியில் உள்ள புளுகிராஸ் அமைப்பு மற்றும் மீஞ்சூரில் உள்ள ஹேண்ட் ஃபார் அனிமல் அமைப்புகள் உதவியுடன்  பேரூராட்சி ஊழியர்கள் 187 தெருநாய்களை பிடித்தனர். பிடிபட்ட நாய்கள் நந்திவரம் கருத்தடை மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அவைகளுக்கு  தடுப்பூசி போடப்பட்டு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு பிறகு அவைகளை தெருக்களில் மீண்டும் கொண்டுச் சென்று விட திட்டமிடப்பட்டுள்ளது.   தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்யும் நடவடிக்கை தீவிரமாக தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்தார்.

 


Page 167 of 3988