Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

பூந்தமல்லி அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.1 கோடியில் புதிய பாலம்: ஜெயலலிதா அறிவிப்பு

Print PDF

மாலை மலர்              23.01.2014

பூந்தமல்லி அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.1 கோடியில் புதிய பாலம்: ஜெயலலிதா அறிவிப்பு
 
பூந்தமல்லி அருகே கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.1 கோடியில் புதிய பாலம்: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, ஜன. 23 - தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கு இன்றியமையாதது நீர்ப்பாசன வசதியாகும். நீர்ப்பாசன வசதியினை மேம்படுத்தும் வகையில் நீர்ப்பாசன கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்திலுள்ள 28 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க பாலேகுளி ஏரியிலிருந்து புதிய கால்வாய் அமைக்கும் திட்டத்திற்கு 6 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி ஏற்கெனவே முதல்– அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்..

இந்த புதிய கால்வாய் அமைக்கும் பணிகள் தற்பொழுது முடிவடையும் நிலையில் உள்ளன. தற்பொழுது அமைக்கப்பட்டு வரும் புதிய கால்வாய் திட்டத்தில் 28 ஏரிகளுக்கான தண்ணீர் வழங்கும் பணிகளில், 25 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்குவதற்கான பணிகள் முடிவுற்ற நிலையில், அந்த 25 ஏரிகளுக்கு, கிருஷ்ணகிரி அணைக்கு வரும் உபரி நீரை பாலேகுளி ஏரி வழியாக திறந்து விட்டு, இத்திட்டத்தினைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கு ஒப்புதல் வழங்கி முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்திலுள்ள பாலேகுளி, நாகோஜன அள்ளி, வீர மலை, விளங்காமுடி, வெப்பாலம்பட்டி மற்றும் காட்டகரம் ஆகிய கிராமங்களில் உள்ள 334.60 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

இதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்திலுள்ள விருப்பம்பட்டி ஏரியிலிருந்து அதன் கீழுள்ள 5 ஏரிகள் மற்றும் ஒரு குளம் பயன் பெற வழங்கு கால்வாய் அமைக்க 1 கோடியே 75 லட்சத்திற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கி ஏற்கெனவே முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இந்த வழங்கு கால்வாய் அமைக்கும் பணிகள் தற்பொழுது முடிவுற்ற நிலையில், விருப்பம்பட்டி ஏரியிலிருந்து அதன் கீழுள்ள மாலேத்தோட்டம் ஏரி, மூங்கன் ஏரி, ஒட்டுகல்லனூர் ஏரி, குட்டூர் ஏரி, திப்பம்பட்டி ஏரி ஆகிய 5 ஏரிகள் மற்றும் குளம் ஆகியவற்றிற்கு புதியதாக அமைக்கப்பட்ட வழங்கு கால்வாய் வழியாக தண்ணீர் வழங்குவதற்கும், அதன் மூலம் இப்புதிய திட்டத்தினை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் ஒப்புதல் வழங்கி முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்திலுள்ள பாரண் டப்பள்ளி, அயலம்பட்டி, கரடனூர், ஓட்டு கல்லனூர், திப்பம்பட்டி மற்றும் பாலேத்தோட்டம் ஆகிய கிராமங்களில் உள்ள 83.76 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகரத்தின் வழியே கொச்சியிலிருந்து தனுஷ்கோடி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையும், தஞ்சாவூரிலிருந்து சாயல்குடி வரை செல்லும் மாநில நெடுஞ்சாலையும், செல்கின்றன. மேலும் இந்நகரத்தின் அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள், தங்களின் அன்றாட தேவைகளுக்காக, பரமக்குடி வந்து செல்கின்றனர். இதனால் இந்த நகரம் அன்றாடம் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகிறது.

இந்த நகரத்தின் போக்குவரத்து நெரிசலை பெருமளவு குறைத்திட, பரமக்குடி நகரை ஒட்டிச் செல்லும் வைகை ஆற்றின் வலது கரையில், சுமார் 3.60 கி.மீ நீளத்திற்கு, தேசிய நெடுஞ்சாலையின் தரத்திற்கு இணையாக, ஒரு துணை ஓடுபாதை ஏற்படுத்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்தச் சாலையை அமைக்க 6 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம் பரமக்குடி நகரத்தின் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டு, பயணிகள் இடையூறின்றி பயணம் செய்ய, இந்த துணை ஓடுபாதை பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

கூவம் ஆறு, கேசவபுரம் அணைக்கட்டில் ஆரம்பித்து 65 கிமீ பயணித்து கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் வலது கரையோரம் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டத்தில் சோரஞ்சேரி கிராமம் அமைந்துள்ளது. இந்த ஆற்றில் மழை வெள்ளப்பெருக்கு காலங்களில் அதிக அளவில் தண்ணீர் செல்லும்.

இதனால் இப்பகுதிகளில் வாழும் மக்கள் அருகிலுள்ள கிராமங்களுக்கு செல்வதற்கும், குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வதற்கும், விவசாயிகள் தங்களது பொருட்களை வெளியூர்களுக்கு கொண்டு செல்வதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள்.

இதனால் கூவம் ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் அமைக்க வேண்டும் என்று சோரஞ்சேரி கிராம மக்களிடமிருந்து கோரிக்கை வரப்பெற்றது. இதனை பரிசீலித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா சோரஞ்சேரி கிராம மக்கள் பயன் பெறும் வகையில், கூவம் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

இப்பாலம் அமைப்பதற்காக 1 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் வழங்கியும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதன் மூலம், கூவம் ஆற்றின் இருகரைகளும் இணைக்கப் பெற்று மக்கள் எளிதில் ஆற்றை கடந்து செல்வதற்கு வழிவகை ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

73 பேரூராட்சிகளில் ரூ.10 கோடி செலவில் 77 நவீன சுகாதார வளாகங்கள்: ஜெயலலிதா உத்தரவு

Print PDF

மாலை மலர்              23.01.2014

73 பேரூராட்சிகளில் ரூ.10 கோடி செலவில் 77 நவீன சுகாதார வளாகங்கள்: ஜெயலலிதா உத்தரவு
 
73 பேரூராட்சிகளில் ரூ.10 கோடி செலவில் 77 நவீன சுகாதார வளாகங்கள்: ஜெயலலிதா உத்தரவு

சென்னை, ஜன. 23 - தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

மனிதக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் தீர்வு செய்வது பொது சுகாதாரத்தின் மிக முக்கிய கூறாகும். பாதாளச் சாக்கடைத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள கழிப்பறைகள் தேவையான எண்ணிக்கை இல்லாததாலும், போதுமான மற்றும் நல்ல முறையில் பராமரிக்கப்படும் சுகாதாரமான பொதுக் கழிப்பிடங்கள் இல்லாததாலும், திறந்த வெளி கழிப்பிடங்கள் நீண்டகாலமாக தொடர்வது பொது சுகாதாரத்திற்கு மிகுந்த சவாலாக உள்ளது.

எனவே 2015 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை திறந்த வெளியில் மனிதக்கழிவு கழித்தல் இல்லாத மாநிலமாக உருவாக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு உறுதி பூண்டு உள்ளது.

அதன்படி, உள்ளாட்சி அமைப்புகளில் திறந்த வெளியில் மனிதக்கழிவு கழிக்கும் இடங்களை கண்டறிந்து அங்கு புதியதாக கழிப்பிடங்களை ஏற்படுத்தல், பழுதான கழிப்பிடங்களை மேம்படுத்திடல், தகவல், கல்வி மற்றும் விழிப்புணர்வு தீவிர பிரச்சாரத்தின் வாயிலாக திறந்தவெளியில் மனிதக்கழிவு கழிப்பதை தவிர்க்கச் செய்தல் என பல்வேறு நடவடிக்கைகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.

2015–ஆம் ஆண்டிற்குள், தமிழ்நாட்டில் பொது இடங்களில் மலம் கழிப்பது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் புதிய பொதுக் கழிப்பிடங்கள் அமைப்பதற்கும், தற்பொழுதுள்ள கழிப்பிடங்களுக்கு தண்ணீர் வசதி மற்றும் மின்சார வசதி ஆகிய பணிகளுக்காக கடந்த 2011-12 ஆம் ஆண்டு ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு,

முதற்கட்டமாக 19 கோடியே 83 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, இதன் மூலம் 52 பேரூராட்சிகளில் 52 ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு, 62 பேரூராட்சிகளில் 75 சுகாதார வளாகங்கள் புனரமைக்கப்பட்டன. அதேபோல் மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 658 கழிவறைகள் புனரமைக்கப்பட்டதுடன் புதியதாக 253 கழிப்பறைகள் கட்டப்பட்டன.

மேலும் சென்ற ஆண்டு மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பொதுக் கழிப்பிடங்களை மேம்பாடு செய்வதற்காகவும், மற்றும் புதிய பொதுக் கழிப்பிடங்களை கட்டுவதற்கும் 72 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டார்.

மேலும் 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பாழடைந்த நிலையில் இருந்த 12,796 மகளிர் சுகாதார வளாகங்கள், முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி 170 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு பெண்களுக்கான அடிப்படை சுகாதாரம் உறுதி செய்யப்பட்டது.

பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் சுகாதார வளாகங்கள் அமைக்கவும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு இரண்டு ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் வீதம் 770 கிராம ஊராட்சிகளில் 35 கோடி செலவில் அமைக்கவும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டார்.

மேலும் சுகாதார கிராமங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் ஒவ்வொரு தனிநபர் இல்லக் கழிப்பறை அமைப்பதற்காக மாநில அரசின் சார்பில் வழங்கும் அலகுத் தொகையினை 1,000 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக உயர்த்தியும், அதன் அடிப்படையில் 2012–13 ஆம் நிதியாண்டில் 4 லட்சத்து 56 ஆயிரத்து 901 தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டுவதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டார்.

தமிழகத்தில் 2015–ஆம் ஆண்டிற்குள் நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் திறந்தவெளி மனிதக்கழிவு கழித்தல் அறவே ஒழித்திட வேண்டும் என்ற நோக்கத்தினை எய்தும் வகையில், இந்த ஆண்டு மேலும் 10 கோடி ரூபாய் செலவில் 73 பேரூராட்சிகளில் 77 ஒருங்கிணைந்த நவீன சுகாதார வளாகங்கள் கட்டுவதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

திருப்பூரில் 6 ஆயிரம் நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி: மேயர்

Print PDF

தினமணி             23.01.2014

திருப்பூரில் 6 ஆயிரம் நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி: மேயர்

மாநகராட்சிப் பகுதிகளில் 6 ஆயிரம் நாய்களுக்கு ரேபீஸ் எனப்படும் வெறிநாய் தடுப்பூசி போடப்படும் பணி, மாநகராட்சியுடன் இணைந்து உலகளாவிய கால்நடை சேவை மையத்தின் மிஷன் ரேபீஸ் இயக்கம், திருப்பூர் தங்கம் நினைவு அறக்கட்டளை மூலமாக வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்று மேயர் அ.விசாலாட்சி கூறினார்.

திருப்பூர் பெரிச்சிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், ரேபீஸ் வெறிநாய் நோய் ஒழிப்பு இயக்கம், மாநகராட்சி, மிஷன் ரேபீஸ், விலங்குகள் தொண்டு நிறுவனமான திருப்பூர் தங்கம் நினைவு அறக்கட்டளை சார்பில் நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடும் முகாம் துவக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முகாமை தொடங்கி வைத்து மேயர் அ.விசாலாட்சி பேசியது: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் பணியை மாநகராட்சி ஏற்கனவே செய்து வருகிறது. வெறிநாய் கடித்தால், அதனால் பாதிக்கப்பட்ட நபரின் செயல்பாடும் அந் நாயை போல உள்ளது. நாய்களுக்கு ரேபீஸ் வெறிநாய் தடுப்பூசி போடுவதன் மூலமாக, மனிதர்களுக்கு அந் நோய் பரவாமல் தடுக்க முடியும்.

இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 6 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மேற்கண்ட அமைப்புகள் மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொள்கிறது என்றார்.

துணை மேயர் சு.குணசேகரன் பேசியது:

திருப்பூர் சுலோச்சனா காட்டன் நிறுவனத்தின் தங்கம் நினைவு அறக்கட்டளை, மிஷன் ரேபீஸ் இயக்கம் மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொண்டிருக்கும் நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசிபோடும் பணிகளுக்கு மாநகராட்சி முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றார்.

உலகளாவிய கால்நடைகள் சேவை மையத்தின் மிஷன் ரேபீஸ் இயக்கத்தின் தென்னிந்திய மண்டல மேலாளர் டாக்டர் முருகன் அப்புப்பிள்ளை பேசியது: நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசிபோட்டு வெறிநாய் கிருமிகளை அழித்துவிட்டால்,

மனிதர்களுக்கு இந்நோய் வர வாய்ப்பில்லை. அதன்படி மிஷன் ரேபீஸ் இயக்கம் மூலமாக இந்தியாவில் இப்பணியை தொடங்கி, இதுவரை  60 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசிகள் போட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் மதுரை, ஈரோடு நகரங்களில்  14,000 நாய்களுக்கு இத் தடுப்பூசிகள் போட்டப்பட்டுள்ளன.

தற்போது திருப்பூர் மாநகரில் உள்ள 60 வார்டுகளிலும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களுக்கு வரும் 31-ஆம் தேதிக்குள் இலவசமாக ரேபீஸ் தடுப்பூசிகளும், 500 நாய்களுக்கு கருத்தடையும் செய்யப்படும் என்றார்.  நாய்களுக்கான பிரத்யேக கருத்தடை வாகனத்தை மேயர் அ. விசாலாட்சி ஒப்படைத்து, இது தொடர்பான மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியையும் அவர் துவக்கிவைத்தார்.

இதில், மாநகராட்சி ஆணையர் கே.ஆர்.செல்வராஜ், தங்கம் நினைவு அறக்கட்டளை(சுலோச்சனா காட்டன் மில்ஸ்) தலைவர் ஆஷா கிருஷ்ணகுமார், மாநகர நல அலுவலர் டாக்டர் ஆர்.செல்வகுமார், மண்டலத் தலைவர்கள் வி.ராதாகிருஷ்ணன், கிருத்திகா சோமசுந்தரம், மாநகராட்சி சுகாதாரக்குழுத் தலைவர் பூலுவப்பட்டி பாலு, கவுன்சிலர்கள் சண்முகசுந்தரம், எஸ்.ஆர்.ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 


Page 168 of 3988