Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

வரி பாக்கியை செலுத்தா விட்டால் ஜப்தி நடவடிக்கை: நகராட்சி ஆணையர்

Print PDF

தினமணி             21.01.2014 

வரி பாக்கியை செலுத்தா விட்டால் ஜப்தி நடவடிக்கை: நகராட்சி ஆணையர்

சிவகங்கை நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியினை உடனடியாக செலுத்தி, ஜப்தி நடவடிக்கைகளை தவிர்க்க ஆணையர் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து நகராட்சி ஆணையர் க. சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

  சிவகங்கை நகராட்சிக்குச் சொந்தமான உழவர் சந்தை கடை எண் 5க்கு 2010-11 பிப்ரவரி முதல் 2013 டிசம்பர் முடிய வாடகை பாக்கி ரூ.25,550-ம், பேருந்து நிலையம் மாடி கண்ணாடிக் கடைக்கு 2005-06 ஜூன் முதல் 2010-11 டிசம்பர் வரை ரூ.1.09 லட்சம் வாடகை நிலுவையாக இருந்து வந்துள்ளது.

  இந்த கடைக்காரர்கள் வாடகை பாக்கியை நகராட்சிக்கு செலுத்தாததால் இரு கடைகளையும் நகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

    நகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் வாடகை பாக்கியை தவறாமல் செலுத்த வேண்டும். தவறினால் கடை பூட்டி சீல் வைக்கப்படும். மேலும் சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி ஆகிய வரியினங்களை பொதுமக்கள் நிலுவையின்றி உடனடியாக செலுத்த வேண்டும்.

    மார்ச் மாதம் தான் கடைசி தேதி என எண்ணி இருப்பது தவறு. சொத்து வரி செலுத்தும் முறை இரண்டாம் அரையாண்டு சேர்த்து அக்.30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

   ஆனால் பொதுமக்கள் இந்த விவரம் தெரியாமல் மார்ச் மாதம் வரை கால அவகாசம் உள்ளதாக கருதுகின்றனர்.

 எனவே நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரி பாக்கியினை உடனடியாக நிலுவையின்றி வசூல் மையத்தில் செலுத்த வேண்டும்.

   தவறினால் நகராட்சி சார்பில் ஜப்தி நடவடிக்கை, குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

திருப்பூர் மாநகராட்சி குடிநீர் மேம்பாட்டுப் பணிக்கு ரூ. 45 கோடி

Print PDF

தினமணி             21.01.2014

திருப்பூர் மாநகராட்சி குடிநீர் மேம்பாட்டுப் பணிக்கு ரூ. 45 கோடி

திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ. 45 கோடி ஒதுக்கீடு செய்ததற்காக மாமன்றக் கூட்டத்தில் தமிழக முதல்வருக்கு மேயர் அ.விசாலாட்சி நன்றி தெரிவித்தார்.

 திருப்பூர் மாநகராட்சியின் அவசரக் கூட்டம் மேயர் அ.விசாலாட்சி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. துணை மேயர் சு.குணசேகரன், ஆணையர் கே.ஆர்.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 இதில், மேயர் அ.விசாலாட்சி பேசியது:

 திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகப் பணிகளை சீரமைப்பதற்காக தமிழக முதல்வர் ரூ. 45 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்காக திட்ட அறிக்கையில் கேட்டபடி, இத் தொகையை முதல்வர் ஒதுக்கீடு செய்து கொடுத்துள்ளார்.

இதற்காக முதல்வருக்கு திருப்பூர் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இதற்கான பணிகளை செய்வதற்கு மாமன்றக் கூட்டத்தின் அனுமதி பெறுவதற்காக அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் இதற்கு முழு ஒத்துழைப்புத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முருகசாமி (அ.தி.மு.க): திருப்பூர் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த பகுதிகளில் குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பதற்காக ரூ. 45 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வருக்கு மாமன்றத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கு உதவியாக இருந்த உள்ளாட்சித் துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், ஆகியோருக்கும் இதற்கானப் பணிகளுக்கு உடனடியாக திட்ட அறிக்கை தயாரித்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கிறேன்.

சுப்பிரமணியம் (தி.மு.க): மாநகரில் கொசுத்தொல்லையால் மக்கள் அவதிப்படுகின்றனர். இப்பிரச்னைக்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாளையக்காடு பகுதியில் பள்ளிக்குழந்தை சாலையை கடந்து செல்வதற்கு வசதியாக நடை மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும். நகரில் ஆம்னி பஸ்களுக்கு என தனியாக பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும்.

கோவிந்தராஜ் (தே.மு.தி.க): குப்பைப் பிரச்னை தீர்க்கும் வகையில் திருப்பூர் தொழிலதிபர்கள் ஏற்படுத்தி இருக்கும் ஸ்ரீ புரம் அறக்கட்டளை சார்பில், தனியார் அமைப்பு மூலமாக நகரில் உள்ள குப்பை பிரச்னைக்கு தீர்வுகாணும் வகையில் ஆலோசனையும், அது தொடர்பான விளக்க காட்சிகளும் காண்பிக்கப்பட்டது. அவர்களுடன் மாநகராட்சியும் சேர்ந்து குப்பை பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும்.

மேயர் அ.விசாலாட்சி: இது தொடர்பாக, அந்த அமைப்பினரை அழைத்து, குப்பை தொடர்பான பிரச்னையை தீர்க்கும் வழிமுறைகள் குறித்த விளக்கக் காட்சிகளையும், ஆலோசனையையும் பெற்று, ஏற்கத்தக்க வகையில் இருப்பின் அது குறித்து பரிசீலிக்கப்படும்.

 கூட்டத்திற்கு பின், மேயர் அ.விசலாட்சி, ஆணையர் கே.ஆர். செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறியது:

 ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 32 கோடி, உள் கட்டமைப்பு இடைவெளி நிரப்புதல் திட்டத்தின் கீழ் ரூ. 13 கோடி என மாநகராட்சி பகுதியில் குடிநீர் விஸ்தரிப்புப் பணிகளுக்காக மொத்தம் ரூ. 45 கோடி தமிழக அரசு வழங்கி உள்ளது.  இதில், முதலாவது மண்டலத்தில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்படும். 3 இடங்களில் நில மட்ட நீர்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்படும்.

 மாநகராட்சியுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பகுதிகளில், ஏற்கனவே உள்ள குடிநீர் விநியோகக் குழாய்களை அகற்றி, அதற்கு பதிலாக 4 இஞ்ச், 8 இஞ்ச் விட்டமுள்ள குடிநீர் விநியோகக் குழாய்கள் பதிக்கப்படும். இதன் மூலமாக, 6 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கும் நிலை மாறி, 2 நாள்களுக்கு ஒருமுறை அல்லது தினமும் குடிநீர் விநியோகிக்க வழிவகை ஏற்படும்.

 குடிநீர் குழாய்கள் மாற்றியமைக்கும் இப் பணிகள் திட்டத்தின் ஒரு பகுதி தான். விடுபட்ட பகுதிகளிலும் இப் பணிகள் செய்வதற்கு திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

  ரூ. 45 கோடி நிதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் வரும் 3 மாத காலத்திற்குள் நிறைவு செய்யப்படும். இதில், மேல்நிலைக்குடிநீர் தொட்டி கட்டும் பணி மட்டும் 6 மாத அவகாசத்தில் செய்து முடிக்கப்படும் என்றனர்.

 

ஈரோடு மாநகராட்சியில் ரூ.2.28 கோடியில் சாலை, மழை நீர் வடிகால் பணிக்கு பூஜை

Print PDF

தினமணி             21.01.2014 

ஈரோடு மாநகராட்சியில் ரூ.2.28 கோடியில் சாலை, மழை நீர் வடிகால் பணிக்கு பூஜை

ஈரோடு மாநகராட்சியில் ரூ.2.28 கோடியில் தார்ச் சாலை மற்றும் மழைநீர் வடிகால் பணிகளுக்கான பூமி பூஜையை முன்னாள் அமைச்சர் கே.வி. இராமலிங்கம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

 இந்நிகழ்ச்சிகளுக்கு மேயர் ப.மல்லிகா பரமசிவம் தலைமை வகித்தார். துணை மேயர் கே.சி.பழனிசாமி, மாநகராட்சி ஆணையர் மு.விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர்.

 46-வது வார்டுக்குள்பட்ட சரவணபவ நகரில் ரூ.40 லட்சத்திலும், பாரதிபாளையம் முதல் வீதி, நல்லதம்பி நகரில் ரூ.39 லட்சத்திலும், திருவள்ளுவர் நகர், நிட் இந்தியா பகுதியில் ரூ.40 லட்சத்திலும், 47-வது வார்டுக்குள்பட்ட வசந்தம் நகரில் ரூ.39 லட்சத்திலும், பாரதி நகர் 2-வது வீதி, முதல் வீதி குறுக்கு சாலைகளில் ரூ.36 லட்சத்திலும், பாரதி நகர் 3-வது வீதி மற்றும் 7-வது வீதி குறுக்கு சாலைகளில் ரூ.34 லட்சத்திலும் மழை நீர் வடிகால் மற்றும் தார்ச் சாலைகள் அமைக்க மொத்தம் ரூ.2.28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றன. மண்டலத் தலைவர்கள் இரா.மனோகரன், காஞ்சனா பழனிசாமி, மாமன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

 


Page 176 of 3988