Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

குடியாத்தம் நகராட்சி மயானத்தில் நவீன எரிவாயு தகன மேடை

Print PDF

தினமணி             21.01.2014 

குடியாத்தம் நகராட்சி மயானத்தில் நவீன எரிவாயு தகன மேடை

குடியாத்தம் நகராட்சி சார்பில், சுண்ணாம்புபேட்டை மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடையில் திங்கள்கிழமை சோதனை நடத்தப்பட்டது.

 தமிழக அரசின் கட்டமைப்பு இடை நிரப்புதல் திட்டத்தின்கீழ் ரூ.60 லட்சத்தில், இங்கு நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. சோதனை நிகழ்ச்சியாக அரசு மருத்துவமனையில் சில நாள்களாக வைக்கப்பட்டிருந்த ஒரு அனாதை ஆணின் சடலம் எரிக்கப்பட்டது.

சோதனையின்போது, நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜி. உமாமகேஸ்வரி, அதிமுக நகரச் செயலர் ஜே.கே.என். பழனி, நகர்மன்ற உறுப்பினர் வசந்தா ஆறுமுகம், முன்னாள் உறுப்பினர் வி.இ. கருணா, நகர்நல அலுவலர் நளினாதேவி, சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.

 இதன் செயல்பாடு குறித்து, அதை அமைத்த குட் கேர் என்விரோ சிஸ்டம் நிறுவனத்தின் பொறியாளர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இங்கு அமைக்கப்பட்டுள்ள இயந்திரத்தின் ஒரு பகுதியில் விறகு கட்டைகளை சிறுசிறு துண்டுகளாக்கி வைத்து எரிக்கப்படும். அந்த நெருப்பிலிருந்து ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன், மீத்தேன் ஆகிய வாயுக்கள் உருவாகும்.

 அதில் கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடை பிரித்தெடுத்து விட்டு, மற்ற வாயுக்களை ஜுவாலையாக்கி குழாய்கள் மூலம் சடலத்தின் மீது செலுத்தினால் அது அரை மணி நேரத்தில் சாம்பலாகி விடும்.

இந்த செயல்பாட்டின்போது, ஏற்படும் புகை சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது என்றார்.

தகன மேடையின் செயல்பாடு குறித்து நகர்மன்றத் தலைவர் அமுதாசிவப்பிரகாசம் கூறியது: இந்த தகன மேடை நகர்மன்றத்தின் ஒப்புதல் பெற்று, ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அந்த நிறுவனம் தகன மேடையின் செயல்பாட்டை நிர்வகிக்கும். இந்த தகன மேடையின் நிர்வாகச் செலவுகளுக்கேற்ப சடலத்தை எரிக்க கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்றார்.

 

மாலைநேர வகுப்பில் மாணவிகளுக்கு சுண்டல்: ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கிய எம்எல்ஏ

Print PDF

தினமணி             21.01.2014 

மாலைநேர வகுப்பில் மாணவிகளுக்கு சுண்டல்: ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கிய எம்எல்ஏ

திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு மாலை நேர வகுப்பின்போது சுண்டல் வழங்க கலசப்பாக்கம் எம்எல்ஏ அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

அரசுப் பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில், இப்பள்ளியில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இவ்வகுப்பில் பயிலும் மாணவிகளுக்கு சிற்றுண்டி (சுண்டல்) வழங்கும் விழா திங்கள்கிழமை தொடங்கியது.

விழாவுக்கு நகர்மன்றத் தலைவர் என்.பாலச்சந்தர் தலைமை வகித்தார். எம்எல்ஏவும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று சுண்டல் வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, மாணவிகளுக்கு சுண்டல் வழங்க தனது சொந்த நிதியில் இருந்து ரூ.50 ஆயிரத்தை பள்ளித் தலைமை ஆசிரியையிடம் நன்கொடையாக வழங்கினார்.

துரிஞ்சாபுரம் ஒன்றியக் குழுத் தலைவர் ஏ.கோவிந்தராஜ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் இரா.முத்துக்குமாரசாமி, பொருளாளர் ஏ.ஜி.பஞ்சாட்சரம், தலைமை ஆசிரியர் ப.ஜோதிலட்சுமி, உதவித் தலைமை ஆசிரியர் த.தனசேகரன், மருத்துவர் முத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

சாலைப் பணி தொடக்கம்: திருச்செந்தூர் கோயில் வாசல் செல்ல பேருந்துகளுக்கு தடை

Print PDF

தினமணி             21.01.2014 

சாலைப் பணி தொடக்கம்: திருச்செந்தூர் கோயில் வாசல் செல்ல பேருந்துகளுக்கு தடை

திருச்செந்தூர் கோயிலுக்குச் செல்லும் சபாபதிபுரம் தெருவில் சாலைப் பணிகள் நடைபெறுவதால் பேருந்துகள் கோயில் வாசல் வரை செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.

திருச்செந்தூர் கோயிலுக்கு நாழிக்கிணறு வழியாக செல்வதற்கு சபாபதிபுரம் தெரு வழியாக சாலை உள்ளது. பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளால் இச்சாலை மிகவும் சேதமடைந்து காணப்பட்டது. இச்சாலையைச் சீரமைக்க பல்வேறு தரப்பிலிருந்து பேரூராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி, தைப்பொங்கல், தைப்பூசம் உள்ளிட்ட முக்கிய திருவிழாக்கள் மற்றும் ஐயப்ப சீசன் போன்ற பல காரணங்களால் நிதி ஒதுக்கியும் இச்சாலையானது சீரமைக்கப்படாமல் இருந்தது.  தற்போது இருபுறங்களும் கான்கிரீட் கற்கள் பதித்து, நடுவில் புதிய தார்ச்சாலை, ரதவீதி-அமலிநகர் சந்திப்பில் தொடங்கி நாழிக்கிணறு டோல்கேட் வரை சுமார் 773 மீ. சாலை ரூ. 73 லட்சத்தில் சீரமைக்கப்பட உள்ளது. இப்பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

பேரூராட்சித் தலைவர் மு.சுரேஷ்பாபு, பேரூராட்சி செயல் அலுவலர் கொ.ராஜையா, உதவி பொறியாளர் சண்முகநாதன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் மு.வடிவேல் உள்ளிட்டோர் இப்பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க உள்ள மாசிப்பெருந்திருவிழாவுக்கு முன்னதாக இச்சாலை சீரமைப்புப் பணி நிறைவு பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 177 of 3988