Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

நீடாமங்கலத்தில் கோலப் போட்டி

Print PDF

தினமணி            17.01.2014

நீடாமங்கலத்தில் கோலப் போட்டி

நீடாமங்கலம் பேரூராட்சி 8 மற்றும் 9 -வது  வார்டுகளில் பொங்கல் விழாவை முன்னிட்டு, வண்ணக் கோலப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் 70-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது வீடுகளில்  வண்ணக் கோலங்களை வரைந்தனர். போட்டிகளின் நடுவர்களாக கதிரவன், செல்வராஜ், சந்தானராமன் ஆகியோர் இருந்தனர்.

இப்போட்டியில் முதலிடம் வித்யாவும், 2-வது பத்ம. சித்ரா, 3-வது சுவேதா, 4-வது விஜயா முருகேசன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு முறையே ரூ. 1500, ரூ. 1000, ரூ. 500, ரூ. 300 மதிப்பிலான சேலைகள் வழங்கப்பட்டன. மேலும், ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பேரூராட்சி உறுப்பினர் துரை. ஆசைத்தம்பி, திமுக இளைஞரணி அப்பு, தியாகராஜன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

 

நகர்ப்புறம், பேரூராட்சி மின்நுகர்வோர்களுக்காக தானியங்கி மின்தடை குறை கேட்கும் மையம்

Print PDF

தினமணி            17.01.2014

நகர்ப்புறம், பேரூராட்சி மின்நுகர்வோர்களுக்காக தானியங்கி மின்தடை குறை கேட்கும் மையம்

திருநெல்வேலி மாவட்டத்தில் நகர்ப்புறம், பேரூராட்சிப் பகுதிகளில் தானியங்கி மின்தடை குறை கேட்கும் மையம் திறக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருநெல்வேலி மேற்பார்வைப் பொறியாளர் ஏ.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி நகர்ப்புறக் கோட்டம், சமாதானபுரத்தில் மின்தடை குறை தீர்க்கும் மையம் இயங்கி வருகிறது. இம் மையத்தில் மின்தடை சம்பந்தமாக ஏற்படும் குறைகளை 0462-2562900 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் தெரியப்படுத்தலாம். மின்தடை சம்பந்தப்பட்ட குறைகளைப் பதிவு செய்யும்போது மின் இணைப்பு எண்ணையும் தெரியப்படுத்துவது அவசியம். இதற்காக மின்வாரிய அலுவலகத்தை நேரில் அணுகத் தேவையில்லை. பதிவு செய்யப்பட்ட மின்தடை தொடர்பான குறைகள் உடனடியாக அந்தந்த பகுதி கம்பியாளரிடம் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும்.

திருநெல்வேலி நகர்ப்புறப் பகுதியில் உள்ள திருநெல்வேலி சந்திப்பு, பெருமாள்புரம், மகாராஜநகர், மேலப்பாளையம், திருநெல்வேலி நகரம், தச்சநல்லூர், பேட்டை, பழையபேட்டை, சமாதானபுரம், வி.எம். சத்திரம், சாந்திநகர், ரெட்டியார்பட்டி, வண்ணார்பேட்டை பகுதி மின்நுகர்வோர் இந்த மையத்தில் புகார் தெரிவிக்கலாம்.

இதுதவிர பேரூராட்சிப் பகுதிகளில் ஆலங்குளம், தாழையூத்து, நான்குனேரி, கீழப்பாவூர், திருவேங்கடம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், விக்கிரமசிங்கபுரம், ஆழ்வார்குறிச்சி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, கோபாலசமுத்திரம், முக்கூடல், வள்ளியூர், பணகுடி, திசையன்விளை, ஏர்வாடி, களக்காடு, திருக்குறுங்குடி, சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர், சுந்தரபாண்டியபுரம், வடகரை ஆகிய பிரிவு அலுவலகங்களைச் சேர்ந்த மின்நுகர்வோரும் இந்த குறைதீர் மையத்தில் புகார் தெரிவிக்கலாம்.

பிற பகுதியினர், அந்தந்த பகுதிகளில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மாநகராட்சி சுங்கச்சாவடி கட்டண வசூல் தினமும் ரூ.3 லட்சம் வரை அதிகரிப்பு

Print PDF

தினமணி            16.01.2014

மாநகராட்சி சுங்கச்சாவடி கட்டண வசூல்  தினமும் ரூ.3 லட்சம் வரை அதிகரிப்பு

மதுரை மாநகராட்சி உள்சுற்றுவட்டச்சாலையிலுள்ள 5 சுங்கச்சாவடிகளில் வாகனக்கட்டண வசூலில் முறைகேடுகள் தவிர்க்கப்பட்டதன் மூலம், தினமும் வசூல் தொகை ரூ.3 லட்சம் வரை அதிகரித்துள்ளது.

 மதுரை மாநகராட்சி மூலம் உத்தங்குடி முதல் திருமங்கலம் வரையிலான 21 கிமீ உள்சுற்றுவட்டச்சாலை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தச்சாலையில் உத்தங்குடி, சிவகங்கைச்சாலை சந்திப்பு, ராமநாதபுரம் சாலை சந்திப்பு, சிந்தாமணிச்சாலை சந்திப்பு, விமானநிலையம் சமீபம் ஆகிய 5 இடங்களில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

 இந்தச் சாவடிகளில் பல ஆண்டுகளாக முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், தினமும் பல லட்சம் ரூபாய் வரை மறைக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கும் புகார்கள் சென்றதை தொடர்ந்து, முந்தைய ஆட்சியர் அன்சுல்மிஸ்ரா, காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து சோதனை நடத்தினர். இதில் சுங்கச்சாவடியில் முறைகேடுகள் நடப்பது கண்டறியப்பட்டு, சில ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.

 இதற்கு அப்போதைய மாநகராட்சி நிர்வாகமும், ஊழியர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநகராட்சி ஆணையர் கிரண்குராலா சுங்கச்சாவடிகளில் சோதனை நடத்தி, முறையாக கட்டண வசூல் நடத்துமாறு ஊழியர்களை எச்சரித்தார். சம்பந்தப்பட்ட அலுவலர்களும் மாநகராட்சிக்கு இழப்பின்றி கட்டண வசூல் நடக்க உத்தரவிட்டார். அவ்வப்போது, தனி நபராக ஆணையாளரும் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.

 இதை தொடர்ந்து உள்சுற்றுவட்டச் சாலைகளிலுள்ள சுங்கவரி மையங்களில் வசூல் தொகை அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் தேதியிலிருந்து ஜனவரி 12-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும், கட்டண வசூல் ரூ.73 லட்சத்து 98 ஆயிரத்து 985 கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, 5 சுங்கச் சாவடிகளிலும் ஜனவரி 1-ம் தேதி ரூ.5,99,340-ம், 2-ம் தேதி ரூ.5,86,960-ம், 3-ம் தேதி ரூ.6,05,940-ம், 4-ம் தேதி ரூ.6,07,995-ம், 5-ம் தேதி ரூ.5,26,780-ம், 6-ம் தேதி ரூ.5,76,605-ம், 7-ம் தேதி ரூ.6,02,055-ம், 8-ம் தேதி ரூ.6,02,165-ம், 9-ம் தேதி ரூ.6,07,480-ம், 10-ம் தேதி ரூ.6,69,490-ம், 11-ம் தேதி ரூ,7,60,040-ம், 12-ம் தேதி ரூ.6,54,135-ம் கணக்கில் காண்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சராசரியாக இதே அளவில் கட்டண வசூல் நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. முன்பெல்லாம், இந்த 5 சுங்கச் சாவடிகளிலும் சேர்த்து தினமும் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையில் மட்டுமே கணக்கில் காண்பிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

 


Page 183 of 3988