Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சேலம் மாநகராட்சி மைய அலுவலகம் தொங்கும் பூங்காவில் முழுமையாக செயல்பட துவங்கியது

Print PDF

தினகரன்             06.01.2014

சேலம் மாநகராட்சி மைய அலுவலகம் தொங்கும் பூங்காவில் முழுமையாக செயல்பட துவங்கியது

சேலம், : சேலம் மாநகராட்சி மைய அலுவலகம், தொங்கும் பூங்காவில் புதுப்பிக்கப்பட்ட தற்காலிக அலுவலகத்தில் முழுமை யாக செயல்பட துவங்கியது.

சேலம் மாநகராட்சியின் மைய அலுவலகம், நூற்றாண்டு பழமை வாய்ந்த பழைய கட்டடத்தில் இயங்கி வந்தது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப நிர்வாக திறன் அதிகரித்ததன் காரணமாக அலுவலக கட்டடங்களில் இட பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து புதிதாக மாநகராட்சி அலுவலகம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக தமிழக அரசு ரூ7.68 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது.

இந்த நிதி மூலம் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த 30ம் தேதி முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்தது. இதையடுத்து பழைய மாநகராட்சி கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்கான ஆரம்ப கட்ட பணி துவங்கப்படவுள்ளது. இதன் காரணமாக மாநகராட்சியின் மேயர் அறை, ஆணையாளர் அறை, பொறியியல் பிரிவு, சிறப்பு திட்டப்பிரிவு, சுகாதாரப்பிரிவு, கணக்குபிரிவு, நிலஅளவை பிரிவு, கருவூலம் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களும் தற்காலிக அலுவலகமான தொங்கும் பூங்கா கட்டடத்திற்கு இடமாற்றப்பட்டது.

தற்காலிக மாநகராட்சி மைய அலுவலகம் செயல்படுவதற்காக, தொங்கும் பூங்காவின் பழைய கட்டடங்கள் அனைத்தும் ரூ50 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. தற்போது அந்த கட்டடங்களில் மேயர், ஆணையாளர் அலுவலகம், சுகாதார பிரிவு, பொறியியல் பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவு அலுவலகங்களும் முழுமையாக செயல்பட துவங்கியுள்ளது.

இனிமேல் மாநகராட்சி சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளுக்கும், பொதுமக்கள் தொங்கும் பூங்கா அலுவலகத்திற்கு வர வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதே போல் செவ்வாய் கிழமை தோறும் நடக்கும் மேயரின் மக்கள் குறைதீர் கூட்டம் மற்றும் மாதாந்திர மாமன்ற கூட்டம் ஆகியவையும் இனி தொங்கும் பூங்கா அலுவலகத்தில் நடக்கவுள்ளது.

 

ஆத்தூரில் இன்று எரிவாயு தகன மேடையை பராமரிக்க கலந்தாய்வு கூட்டம்

Print PDF

தினகரன்             06.01.2014

ஆத்தூரில் இன்று எரிவாயு தகன மேடையை பராமரிக்க கலந்தாய்வு கூட்டம்

ஆத்தூர்,: ஆத்தூரில் ரூ90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள எரிவாயு தகன மேடையை பராமரிக்க கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. நகராட்சி ஆணையளர்(பொ) ஜெகதீஸ்வரி விடுத்துள்ள அறிக்கை:

ஆத்தூர் நகராட்சியின் மூலம் வீரகனுர் சாலையில் பராமரிக்கப்பட்டு வரும் இடுகாட்டில் ரூ90 லட்சம் செலவில் புதியதாக நவீனப்படுத்தப்பட்ட எரிவாயு தகன மேடை கட்டப்பட்டுள்ளது. இந்த எரிவாயு தகன மேடையின் ஆண்டு பராமரிப்பு பணியை மேற்கொள்ள ஏதுவாக ஆத்தூரில் உள்ள சேவை சங்கங்களான அரிமா சங்கம், ரோட்டரி சங்கம், ரெட்கிராஸ் சங்கம், இன்னர்வீல் மற்றும் பொது நல அமைப்புகளான வணிகர் சங்கம், முத்தாயம்மாள் அறக்கட்டளை, ராசி சீட்ஸ் உள்ளிட்ட அமைப்புகளுடனான கலந்தாய்வு கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் இன்று நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் சேவை சங்கத்தினரும், பொதுநல அமைப்பினரும் தவறாமல் கலந்து கெள்ள வேண்டும். இவ்வாறு நகராட்சி ஆணையாளர்(பொ) ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

 

நகராட்சியில் நாய்களை பிடிக்க ரூ.6 லட்சத்தில் புதிய வாகனம்

Print PDF

தினமலர்               06.01.2014

நகராட்சியில் நாய்களை பிடிக்க ரூ.6 லட்சத்தில் புதிய வாகனம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சியில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சுற்றித்திரியும் நாய்களை பிடிப்பதற்காக, ஆறு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய வாகனம் வாங்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில், அதிகளவு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால், பொதுமக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதால், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்திற்குள்ளாகும் சம்பவங்களும் அதிகளவு நடக்கின்றன. நாய் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து, நகராட்சி சார்பில், நாய்கள் பிடிக்கும் வாகனம் வாங்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, அரசு மானியம் 3 லட்சம் ரூபாயும்; நகராட்சி பொது நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் என மொத்தம் ஆறு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், நாய்கள் பிடிக்கும் வாகனம் வாங்கப்பட்டது.

இதனை பயன்பாட்டிற்கு விடும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார், கமிஷனர் சுந்தராம்பாள் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

நகராட்சி பகுதிகளில், சுற்றித்திரியும் நாய்களை பிடித்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக வாங்கப்பட்ட வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வாகனத்தில், ஆறு நாய்களை பிடித்து எடுத்துச் செல்ல முடியும்.

முதற்கட்டமாக, பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட், பெருமாள் செட்டி வீதியில் சுற்றித்திரிந்த நாய்கள் பிடிக்கப்பட்டன. தொடர்ந்து, நாய்கள் பிடிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

பிடிக்கப்படும் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்காக, குப்பை கிடங்கு பகுதியில், தனியாக அறை 9 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கட்டப்படுகிறது. பணிகள் முடிந்ததும் இந்த கட்டடம் பயன்படுத்தப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

 


Page 198 of 3988