Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

சேலத்தில் ரூ.ஆயிரம் கோடியில் 7 மேம்பாலங்கள்'

Print PDF

தினமணி             04.01.2014 

சேலத்தில் ரூ.ஆயிரம் கோடியில் 7 மேம்பாலங்கள்'

சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக 7 மேம்பாலங்கள் ரூ.ஆயிரம் கோடி மதிப்பீட்டில் விரைவில் கட்டப்பட உள்ளதாக நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

 சேலம் மாநகராட்சியில் கட்டப்பட்டுள்ள ஆனந்தா பாலம், குண்டு போடும் தெரு பாலம் ஆகியவற்றுக்கான இணைப்புச் சாலைகள், திட்டப் பணிகளின் திறப்பு விழா ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

 மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மேயர் எஸ்.செüண்டப்பன் தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கி அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:

 கடந்த திமுக ஆட்சியில் ஆனந்தா பாலப் பணியை பெயரளவுக்குத் தொடங்கி வைத்து விட்டு, பெற வேண்டியதை எல்லாம் பெற்றுக்கொண்டு, திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டுச் சென்று விட்டனர். முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் அறிவித்ததைப் போன்றே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆனந்தா பாலப் பணி முடிக்கப்பட்டுள்ளது.

 சேலம் மாநகரம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக சேலம் 5 சாலை பகுதியில் ரூ.600 கோடி செலவில் உயர்நிலைப் பாலம் அமைக்கப்பட உள்ளது. 5 சாலையில் இருந்து நான்கு சாலை நேஷனல் ஹோட்டல் வரையிலும், மறு மார்க்கத்தில் 5 சாலையில் இருந்து சாரதா கல்லூரி வரையிலும் இந்தப் பாலம் அமைய உள்ளது.

 அதே போலவே, மணல் மேடு பகுதியில் ஒரு பாலம், முள்ளுவாடி கேட் பகுதியில் இரண்டு பாலங்கள், செவ்வாய்ப்பேட்டை லாரி சந்தைப் பகுதியில் ரூ.14 கோடி மதிப்பில் ஒரு பாலம், சூரமங்கலம், குரங்குசாவடி பகுதியில் தலா ஒரு பாலம் என மொத்தம் 7 பாலங்கள் கட்டப்பட உள்ளன.

 செவ்வாய்ப்பேட்டை பாலத்துக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, அதை யாரும் எடுக்க முன் வராத நிலையில் இப்போது மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளது.

 இதைத் தவிர நகரின் எல்லையான அரபிக் கல்லூரியில் தொடங்கி, நகர் முழுவதையும் சுற்றி மீண்டும் அரபிக் கல்லூரியை வந்தடையும் வகையில், எந்த இடத்திலும் இறங்கி ஏறிக் கொள்ளும் வகையில் 52 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றுச் சாலை (ரிங் ரோடு) அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும்.

 சேலம் மாநகரில் மட்டும் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு பாலப் பணிகள், சாலைப் பணிகள் நடைபெற உள்ளன. தமிழகத்தில் வேறு எந்த மாநகராட்சிக்கும் இந்த அளவிற்கு அரசு நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்றார் அவர்.

விழாவில் ஆட்சியர் மகரபூஷணம், மேயர் செüண்டப்பன், எம்.எல்.ஏ.க்கள் எம்.கே.செல்வராஜ், ஜி.வெங்கடாசலம் ஆகியோர் பேசியது:

மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மிகுந்த சிரமங்களுக்கு இடையில் இந்தப் பாலத்தின் இணைப்புச் சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாலம் ஆட்டோ, வாகன நிறுத்தமாக மாறிவிடாமல் இருக்க காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

 விழாவில், மாநகராட்சி ஆணையர் மா.அசோகன், துணை மேயர் மு.நடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

சூரிய மின் விளக்குகள் பொருத்த பங்களிப்பு நிதி வழங்கல்

Print PDF

தினமணி             04.01.2014 

சூரிய மின் விளக்குகள் பொருத்த பங்களிப்பு நிதி வழங்கல்

புதுப்பாளையம் பேரூராட்சியில் 30 சூரிய மின் விளக்குகள் பொருத்துவதற்கு பொதுமக்களின் பங்களிப்பாக ரூ.2 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

சிறப்பு தன்னிறைவுத் திட்டத்தின் கீழ் மின்சார சிக்கனம் மற்றும் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் இந்த விளக்குகள் பொருத்தப்படவுள்ளன.

இதற்காக, பொதுமக்களின் பங்களிப்புத் தொகை ரூ.2 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரனிடம் பேரூராட்சித் தலைவர் கா.சித்ரா அண்மையில் வழங்கினார்.

நிகழ்ச்சியில், பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் என்.ராஜா, இளநிலை உதவியாளர் பெ.பிச்சாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

நகராட்சிப் பள்ளியில் கல்வி அலுவலர் ஆய்வு

Print PDF

தினமணி             04.01.2014 

நகராட்சிப் பள்ளியில் கல்வி அலுவலர் ஆய்வு

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் தர்ம ராஜா கோவில் தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ம.பொ.கணேசன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மாணவர்களிடையே கணிதப்பாடம் குறித்தும், வாசிப்புத் திறன் குறித்தும், பாடல்கள் பாடுவது குறித்தும் கேள்விகளைக் கேட்டார். மாணவர்கள் அதற்குண்டான பதில்களை அளித்தனர். பின்னர் பள்ளியின் போதிக்கும் திறன் குறித்தும் ஆய்வு செய்தார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மோகன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி, பள்ளி தலைமையாசிரியர் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 


Page 207 of 3988