Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

ஆம்னி பேருந்து நிலையத்தில் பணிகளை விரைந்து முடிக்க மேயர் உத்தரவு

Print PDF

தினமணி             04.01.2014

ஆம்னி பேருந்து நிலையத்தில் பணிகளை விரைந்து முடிக்க மேயர் உத்தரவு

 மாட்டுத்தாவணியில் நடைபெற்று வரும் புதிய ஆம்னி பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதால் எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து, மேயர், ஆணையர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளனர்.

  மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில், ஆம்னி பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இப் பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதாக, பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாநகராட்சி ஆணையர் கிரன்குராலா தலைமையில், மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா ஆய்வு மேற்கொண்டார்.

  அப்போது, 49 பதிவு அலுவலகங்கள், பேருந்து நிறுத்தம், பயணிகள் நிழற்குடை, மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைத்தல், சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் ஆகியன முடிவடையும் தறுவாயில் இருப்பதையும், தார் சாலை, நவீன கழிப்பறை, பொதுக் கழிப்பறை, பயணிகள் அமர்வதற்கான இருக்கைகள் போன்ற பணிகள் மெதுவாக நடைபெற்று வருவதும் தெரியவந்தது.

  நுழைவு வாயில் அமைக்கும் பணியும் இழுபறியாக உள்ளது. மாநகரின் மையப் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான ஆம்னி பேருந்துகள் இயக்கத்தை முற்றிலுமாக மாட்டுத்தாவணிக்கு மாற்றும் விதத்தில்தான், இப்பேருந்து நிலையம் பல கோடி ரூபாயில் திட்டமிடப்பட்டுள்ளது.

   துவக்கத்தில் இருந்தே பேருந்து பணிகள் தரமாக நடைபெறவில்லை என்ற புகாரும் இருந்து வருகிறது. தற்போது, மேலும் கூடுதல் நிதிகளை பெறும் நோக்கில் பணிகளை இழுத்தடிப்புச் செய்து வருவதாகவும் புகார்கள் கூறப்படுகின்றன. வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மேயரும், ஆணையரும் விரைந்து பணிகளை முடிக்குமாறு, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கும், பொறியாளர்களுக்கும் உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.

 

மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவை பயன்படுத்தி 1.84 கோடி ரூபாயில் தார்ச்சாலை

Print PDF

தினகரன்               04.01.2014

மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவை பயன்படுத்தி 1.84 கோடி ரூபாயில் தார்ச்சாலை

ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி பகுதியில் 13 இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு தார் சாலைகள் அமைக்கப்படவுள்ளது. இதற்காக ரூ.1.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாநகராட்சி அனைத்து வார்டு பகுதிகளிலும் சேதமடைந்த ரோடுகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு சாலைகள் அமைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2013-14ம் ஆண்டிற்கு பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி தார்சாலைகளை சீரமைக்கும் பணிக்கு ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் மானியமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியுடன் கூடுதலாக மாநகராட்சி பொது நிதியில் இருந்தும் ரூ.14.30 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஒரு கோடியே 84 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

அதன்படி 4வது வார்டு அமராவதிநகர் குறுக்கு வீதியில் 9.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், 58வது வார்டு புதைக்காடு பகுதியில் 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், காவேரி ரோடு சந்திப்பில் இருந்து ஆத்மா வரை 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், 44வது வார்டு பெரியார் நகர் 3 மற்றும் 4வது குறுக்கு வீதியில் 17.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

பெருந்துறை ரோடு முதல் ராயல் அவென்யூ மெயின் மற்றும் குறுக்குசாலை, கே.ஏ.எஸ் நகர் மற்றும் குறுக்கு சாலைகளில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், 16வது வார்டு எல்லப்பாளையம் சூரிப்பாறை மற்றும் கொங்கம்பாளையம் பகுதியில் 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், 19 மற்றும் 20வது வார்டு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் 18.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், 18வது வார்டு முத்துமாணிக்கம் சந்திப்பில் இருந்து எஸ்.எஸ்.பி.சந்திப்பு வரை, தென்றல்நகர் சந்திப்பில் இருந்து பெரியசேமூர் மெயின்ரோடு வரையில் 19 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பிளாஸ்டிக் தார்சாலைகள் அமைக்கப்படவுள்ளது.

இதேபோல 16வது வார்டு கொங்கம்பாளையம் மெயின்ரோட்டில் இருந்து கங்காபுரம் அலுவலகம் வரை 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், 6வது வார்டு புதுமன்சா வீதி, ஏ.ஓ.கே.நகர் ஆகிய பகுதிகளில் 14.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், 3வது வார்டு ஆர்.என்.புதூரில் 6.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் பிளாஸ்டிக் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி மேயர் மல்லிகா பரமசிவம் கூறியதாவது: மாநகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் வெண்டிபாளையம், வைராபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள கிடங்குகளில் சேகரிக்கப்பட்டு வருகிறது. அங்கு குப்பைகளை தரம் பிரித்து பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக பிரிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்கும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளுடன் தார்சாலைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி புதியதாக 13 இடங்களில் பிளாஸ்டிக் தார்சாலைகள் அமைக்கப்படவுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் பிப்ரவரி மாதத்திற்கு முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு மேயர் மல்லிகா பரமசிவம் தெரிவித்தார்.

 

திண்டுக்கல்-நத்தம் ரோட்டில் ரூ.10 லட்சத்தில் தெருவிளக்குகள்

Print PDF

தினமலர்                03.01.2014

திண்டுக்கல்-நத்தம் ரோட்டில் ரூ.10 லட்சத்தில் தெருவிளக்குகள்

திண்டுக்கல்: பழநி பாதையாத்திரை பக்தர்கள் வசதிக்காக, திண்டுக்கல் நகராட்சியில் உள்ள தெருவிளக்குகளை மாற்றுவதற்கு ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகராட்சியில் குள்ளனம்பட்டி-நத்தம் ரோடு, ஆர்.எஸ்., ரோடு, நாகல் நகர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அதிக வாகனங்கள் செல்கின்றன.

போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அந்த ரோடுகள் அகலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், ரோடுகளின் ஓரங்களில் இருந்த 75 தெருவிளக்கு கம்பங்கள் மாற்றிமைக்கப்பட்டன. இதில், 25 மின்கம்பங்களில் 40 வாட்ஸ் குழல் விளக்குகளும், 50 கம்பங்களில் 1.50 வாட்ஸ் சோடியம் விளக்குகளும் எரிந்து வருகின்றன. ரோடுகள் அகலப்படுத்தப்பட்டதால், தெருவிளக்குகளின் வெளிச்சம் போதியளவில் இல்லை.

இதனால், வாகனஓட்டிகளும், பொதுமக்களும் சிரமமடைந்து வருகின்றனர். ஜன.,11ல் தைப்பூச விழா துவங்க உள்ளநிலையில், சிவகங்கை, திருப்புத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, மேலூர், நத்தம் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பாதையாத்ரை பக்தர்கள் இந்த வழியாக தான், பழநி கோயில் செல்ல உள்ளனர். இதையடுத்து, தைப்பூச விழாவிற்கு முன்னதாக, தெருவிளக்குகளில் 220 வாட்ஸ் திறனுள்ள மின் சேமிப்பு விளக்குகளை பொருத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த விளக்குகளை வாங்குவதற்காக, ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

 


Page 210 of 3988