Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - News Papers

நகராட்சி நோட்டீஸ்

Print PDF

தினமலர்                03.01.2014

நகராட்சி நோட்டீஸ்

தேனி: தேனி புது பஸ்ஸ்டாண்டில் கடைகளை ஏலம் எடுத்தவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கி வருகிறது. தேனி புதுபஸ்ஸ்டாண்டில் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. போக்குவரத்துக்கழகம் சார்பில் அம்மா குடிநீர் கூட விற்பனை தொடங்கப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் எந்த பொருட்களும் வாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். குடிநீர் கூட கிடைக்காமல் தவிக்கின்றனர். இதனை தொடர்ந்து கடைகளை விரைவில் திறக்க ,நகராட்சி நிர்வாகம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதில் முதற்கட்டமாக கடைகளை ஏலம் எடுத்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கி வருகிறது. அதில் கடைகளை ஏலம் எடுத்த ஏலதாரர்கள், ஒரு ஆண்டு வாடகை கட்டணம் மற்றும் சேவை வரி, உறுதிமொழி படிவத்தை நகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பித்து சாவியை பெற்று கடைகளை திறக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

நகராட்சிப்பள்ளிகள் புதுப்பொலிவாகிறது : ·ரூ.2.25 கோடியில் பணிகள் தீவிரம்

Print PDF

தினமலர்                03.01.2014

நகராட்சிப்பள்ளிகள் புதுப்பொலிவாகிறது : ·ரூ.2.25 கோடியில் பணிகள் தீவிரம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள பள்ளிகள் 2.25 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுகிறது. பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில், தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 17க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால், மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருவதாகவும்; சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. பள்ளிகளில், போதிய வசதிகள் இல்லாத நிலையில், இரவு நேரங்களில், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருவதும்; சமூக விரோத செயல்கள் நடைபெறுவதுடன், பள்ளி வளாகத்திலுள்ள கட்டடங்கள் சேதப்படுத்துவது போன்ற சம்பவங்கள் நடந்து வருவதாகவும் பொதுமக்கள் தரப்பில், புகார் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஏழை மற்றும் நடுத்தர வகுப்பை சேர்ந்த மாணவர்கள் பயிலும் பள்ளிகளில், அடிப்படை வசதிகள், போதிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், நகராட்சி சார்பில், பள்ளிகள் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இதனையடுத்து, 2.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன.

அதிக பழுதாகியுள்ள பள்ளிகளுக்கு 50 லட்சம் ரூபாய் செலவிலும், மற்ற பள்ளிகளுக்கு குறைந்த பட்சம் ரூ.5 லட்சம் முதல் 25 லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது.

முதற்கட்டமாக, சமத்தூர் ராமஅய்யங்கார் மேல்நிலைப்பள்ளி, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில், தலா 50 லட்சம் ரூபாய் செலவிலும்; ஏ.பி.டி., ரோடு நடுநிலைப்பள்ளி மற்றும் வடுகபாளையம் நடுநிலைப்பள்ளிகளில், தலா 24 லட்சம் ரூபாய் செலவிலும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும்; பாலகோபாலபுரம் நடுநிலைப்பள்ளியில், 14 லட்சம் ரூபாயிலும், பாலக்காடு ரோடு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 24 லட்சம் ரூபாய் செலவிலும், மரப்பேட்டை வீதி நடுநிலைப்பள்ளியில், 50 லட்சம் ரூபாய் செலவிலும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகராட்சி அதிகாரிகள் கூறுகையில்," நகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகள் புதுப்பிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப்பள்ளிகளையும் தரம் உயர்த்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளிகள் புதுப்பிப்பு பணிகள் நடைபெறுகிறது. இப்பணிகள் வரும் மே மாதத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில், பள்ளிகள் புதுப்பொலிவாக மாற்றப்படும்,' என்றனர்.

 

அம்மா உணவகத்தில் "பயோ காஸ்' பயன்பாடு துவக்கம் : தினமும் 60 சதவீதம் காஸ் செலவு சேமிப்பு

Print PDF

தினமலர்                03.01.2014

அம்மா உணவகத்தில் "பயோ காஸ்' பயன்பாடு துவக்கம் : தினமும் 60 சதவீதம் காஸ் செலவு சேமிப்பு

கோவை : சரவணம்பட்டி அம்மா உணவகத்தில், காய்கறி மற்றும் ஓட்டல் கழிவுகளில் இருந்து உற்பத்தியாகும் "பயோ காஸ்' பயன்பாடு துவங்கியது.கோவை மாநகராட்சி நிர்வாகம், மார்க்கெட், ஓட்டல் கழிவுகளை பயன்படுத்தி, "பயோ காஸ்' உற்பத்தி செய்யும் திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.சரவணம்பட்டி அம்மா உணவகத்தில், "பயோ காஸ்' திட்டம், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் நிறைவடைந்து, மீத்தேன் வாயு உற்பத்திக்காக, இரண்டு டன் மாட்டுச்சாணம், 50 கிலோ யூரியா கொட்டப்பட்டது. அதன்பின், காய்கறி கழிவு, ஓட்டல் கழிவுகள் கொட்டியதால், பாக்டீரியா பெருகி, மீத்தேன் வாயு உற்பத்தியாகி, "பயோ காஸ்' பயன்பாட்டுக்கு தயாரானது.

பயோ காஸ் பயன்பாட்டை, மாநகராட்சி மேயர் வேலுசாமி துவக்கி வைத்தார். "பயோ காஸ்' உற்பத்தி திட்டத்தில், தினமும் இரண்டு டன் கழிவு கொட்டி, 25 கனமீட்டர் காஸ் உற்பத்தி செய்ய முடியும். முதல் கட்டமாக 300 கிலோ கழிவுகள் கொட்டப்பட்டு, தினமும் 21 கிலோ பயோ காஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. மேயர் வேலுசாமி கூறுகையில், ""தமிழகத்தில் முதல் முறையாக, கோவை மாநகராட்சியில், அம்மா உணவகத்தில் பயோ காஸ் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தினமும் 1,500 ரூபாய் வீதம், மாதத்துக்கு 45 ஆயிரம் ரூபாய் சேமிக்கப்படும். இங்கு மாதம் 38 காஸ் சிலிண்டர் செலவிடப்படுகிறது. பயோ காஸ் திட்டத்தால் 60 சதவீதம் சமையல் காஸ் செலவு சேமிப்பாகிறது. மாநகராட்சியிலுள்ள மற்ற அம்மா உணவகத்திலும், பயோ காஸ் திட்டம் துவங்கப்படும்,'' என்றார்.

இன்னும் மூன்று திட்டங்கள்! கோவையில் காய்கறி மார்க்கெட், மொத்த காய்கறி, பழ மார்க்கெட், ஓட்டல்களில் தினமும் 40 டன் கழிவு ஏற்படுகிறது. இக்கழிவை கொண்டு மாநகரில் தேவையான இடங்களில் பயோ காஸ் உற்பத்தி திட்டங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இடையர்பாளையம் காமராஜ் நகரில் பயோ காஸ் முறையில், சமுதாய சமையல் கூடம் அமைக்கவும், சொக்கம்புதூர் மயானத்தில், பயோ காஸ் உற்பத்தி செய்து பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கவுண்டம்பாளையத்தில் புதிதாக அமையும், மார்க்கெட் வளாகத்தில், ஐந்து மெட்ரிக் டன் கொள்ளளவில் "பயோ மீத்தனேஷன்' மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 


Page 211 of 3988